SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தனியார் கல்லூரியில் இடம் ஒதுக்கப்படும் அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கல்வி கட்டணத்தை திமுக ஏற்கும்: மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

2020-11-22@ 01:01:24

* தமிழகத்தில் 25 அரசு மருத்துவ கல்லூரியில் 3450 இடங்களும், சுயநிதி மருத்துவ கல்லூரியில் 3600 இடங்களும் என மொத்தம் 7050 இடங்கள்  உள்ளன.
* இதில் 15% இடங்கள் மத்திய அரசின் கவுன்சலிங் பிரிவுக்கும்,  மீதியுள்ள 85% மாநில அரசின் கவுன்சலிங் பிரிவுக்கும்  ஒதுக்கப்பட்டுள்ளது.
* பல் மருத்துவத்தில் 1860 இடங்கள் உள்ளன. 279 இடங்கள் மத்திய அரசு ஒதுக்கீடு போக, மீதி இடங்கள் மாநில அரசின் மூலம் நிரப்பப்படுகிறது.
* 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 227 எம்பிபிஎஸ் இடங்களும், பல் மருத்துவத்தில் 12 இடங்களும்
ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை: “தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம்  ஒதுக்கப்படும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை திமுக  ஏற்கும்” என்று  மு.க.ஸ்டாலின் அதிரடியாக அறிவித்துள்ளார். மருத்துவக் கல்வியில் தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவித முன்னுரிமை அடிப்படையில்  இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா கடந்த செப்டம்பர் 15ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக  நிறைவேறியது. அந்த மசோதா உடனடியாக தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அந்த மசோதாவிற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்  ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் “நீட்” தேர்வில் வெற்றி பெற்றுள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பை நினைத்து பார்க்க முடியாத  நெருக்கடிக்கு ஆளாகினர்.

எனவே, உடனடியாக 7.5 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும்  பல்வேறு அமைப்பினர் சார்பில் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் ஆளுநர் பன்வாரிலால்  புரோகித்தை கடந்த அக்ேடாபர் 5ம் தேதி நேரில் சந்தித்து பேசினர். அப்போது, உள் இடஒதுக்கீடுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என்று  வலியுறுத்தினர். தொடர்ந்து அக்டோர் 20ம் தேதி இடஒதுக்கீடு தொடர்பாக அமைச்சர்கள் குழு ஆளுநரை சந்தித்து பேசியது. அப்போதும் கவர்னர்  பன்வாரிலால் புரோகித் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநருக்கு  அக்டோர் 21ம் தேதி கடிதம் ஒன்றை எழுதினார், அதில், “முன்னுரிமை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல்  வழங்குங்கள்” என்று தெரிவித்திருந்தார்.

மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு மறுநாள், அதாவது, 22ம் தேதி பதில் அளித்த ஆளுநர் , “நீட் முன்னுரிமை அடிப்படையில் இடஒதுக்கீடு மசோதா  குறித்து அனைத்துக் கோணங்களிலும் கலந்தாலோசனை நடத்தி வருகிறேன். இது குறித்து முடிவு எடுக்க எனக்கு 3 அல்லது 4 வாரங்கள்  தேவைப்படுகிறது” என்று தெரிவித்து இருந்தார். ஏற்கனவே ஒரு மாத காலம் அவகாசம் முடிந்து விட்டது. இந்த நிலையில் குறைந்தபட்சம் மேலும்  ஒரு மாதம் என்பது 7.5 சதவித முன்னுரிமை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நீர்த்துப் போக வைக்கும் செயல். அரசுப் பள்ளிகளில்  பயிலும் ஏழை எளிய மாணவர்களின் கல்வி நலனுக்கு முற்றிலும் எதிரானது. 7.5 சதவித முன்னுரிமை அடிப்படையில் இடஒதுக்கீடு மசோதாவிற்கு  ஒப்புதல் பெற “அதிமுகவுடன் இணைந்து போராடத் தயார்” என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்த நிலையில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவித முன்னுரிமை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கும்  மசோதாவிற்கு இனியும் கால அவகாசம் கோராமல், உடனே தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்கக் கோரியும்- தமிழக ஆளுநருக்கு அரசியல் ரீதியாக  அழுத்தம் கொடுக்க தவறி, மாணவர்களுக்கு துரோகம் செய்யும் அதிமுக அரசைக் கண்டித்தும் அக்ேடாபர் 24ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  தலைமையில் ஆளுநர் மாளிகை முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது மு.க.ஸ்டாலின், “இது முதற்கட்ட போராட்டம்.  இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரையில் திமுக தொடர்ந்து போராட்டத்தை நடத்திடும்” என்று அறிவித்திருந்தார். இந்த நிலையில்  அக்டோபர் 29ம் தேதி தமிழக அரசு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு தொடர்பாக அரசாணையை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து அக்டோபர் 30ம் தேதி உள்  ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.

இதையடுத்து 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் உள்ள மாணவ, மாணவியருக்கு அரசுக் கல்லூரிகளில் 227 எம்பிபிஎஸ் இடங்களும், பல் மருத்துவத்தில்  12 இடங்களும் ஒதுக்கப்பட்டு இருந்தன. இது தவிர தனியார் சுயநிதி கல்லூரிகளிலும் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன. சுயநிதி  தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக 86 சீட்டுகள் இருந்தன. ஆனால் அரசுப் பள்ளி மாணவர்கள் தனியார் கல்லூரி  இடங்களை தேர்வு செய்வதில் அதிக கவனம் செலுத்தவில்லை. சுயநிதி தனியார் கல்லூரிகளில் உள்ள இடங்களில் சேர்ந்தால் ஆண்டு கல்விக்  கட்டணம்(அரசு நிர்ணயம் செய்தது) குறைந்த பட்சம் 3.50 லட்சம் முதல் 6 லட்சம் வரை உள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களால்
அந்த தொகையை செலுத்தி படிக்க முடியாது என்பதால் பல மாணவர்கள் அந்த இடங்களை எடுக்க முடியாமல், வேண்டாம் என்று எழுதிக் கொடுத்த  சம்பவங்கள் அரங்கேறின.

இதையடுத்து தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்கப்படும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை திமுக ஏற்கும் என்று  மு.க.ஸ்டாலின் நேற்று அதிரடியாக அறிவித்தார். இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு: தமிழக மக்களின்  ஒட்டுமொத்த உணர்வையும், சமூகநீதிக் கொள்கையின் அடிப்படையையும், வெளிப்படுத்தும் வகையில் ‘நீட்’ தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை  அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு நின்று, சட்டமன்றத்தில் நிறைவேற்றித் தந்தும், அதனை மத்திய அரசிடம் உரிய வகையில் வலியுறுத்திச்  செயல்படுத்தும் வலிமையும், அக்கறையுமற்ற அதிமுக அரசினால், அரியலூர் அனிதா தொடங்கி ஆண்டுதோறும் பல மாணவமணிகளின் உயிரைக்  கொன்று குவித்தது நீட் எனும் கொடுவாள்.

அதனால்தான், தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்ததும், நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். அதிமுக  ஆட்சியாளர்களோ, எத்தனை உயிர்கள் போனால் எங்களுக்கென்ன, எங்கள் கல்லாப் பெட்டிகள் நிரம்பி வழிந்திடும் வகையில் கமிஷன் கிடைக்கும்  டெண்டர்களை வழங்கும் ஆட்சியதிகாரம் மட்டும் இருந்தாலே போதும் என அடங்கி இருந்தார்கள். நீட் தேர்வால் ஒட்டுமொத்த தமிழக மாணவர்களின்  மருத்துவக் கனவு சிதறடிக்கப்பட்ட நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீடு என அதிமுக அரசு அறிவித்தது. அதிலும்கூட, ஓய்வு  பெற்ற நீதிபதி தலைமையிலான குழு பரிந்துரைத்த 10% உள் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தினால், தங்களுடைய டெல்லி எஜமானர்களின்  எரிபார்வைக்கு ஆளாக நேரிடும் என்று அஞ்சி, 7.5% என்பதை மட்டுமே எனத் தீர்மானமாக நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பிவிட்டு, அத்துடன் தமது  கடமை முடிந்து விட்டதாக எண்ணி, பேசாமல் இருந்து விட்டனர்.

அங்கே நீண்ட உறக்கம் கொண்டிருந்த உள் இட ஒதுக்கீடு திட்டம், ஆளுநர் மாளிகை முன்பு திமுக நடத்திய மகத்தான போராட்டத்தினாலும்,  உயர்நீதிமன்றத்தின் கண்டிப்பினாலும் தற்போது விழித்து, செயல்வடிவம் பெற்றுள்ளது. அந்த அளவில், இதனை திமுகவும் வரவேற்கிறது.
நீட் தேர்வில் மதிப்பெண்கள் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள்ஒதுக்கீட்டின்படி, அரசு மருத்துவக்கல்லூரிகளில் 227 இடங்கள் ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள இடங்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஒதுக்கப்பட்டுள்ளன. அதற்குரிய கட்டணத்தை அரசுப் பள்ளிகளில் பயின்ற  ஏழை மாணவர்கள் செலுத்த முடியாத நிலை இருப்பதால், அவர்கள் பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

மாணவர்களின் நலனில் எப்போதும் அக்கறை கொண்டுள்ள திமுக, இந்தக் கல்வியாண்டில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம்  ஒதுக்கப்பட்டுள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவப் படிப்புக்குரிய கட்டணத்தை முழுமையாக ஏற்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அமையவிருக்கின்ற திமுக ஆட்சியில், நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வதற்குரிய சட்ட நடவடிக்கைகள்  உறுதியாக மேற்கொள்ளப்பட்டு, அனைத்து மாணவமணிகளின் மருத்துவக் கனவும் நிச்சயமாக நிறைவேறும் என்ற உறுதியினை இப்போதே  வழங்குகிறேன். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jaipourelephant20

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

  • delhiformer20

    வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

  • nivarpondyvilupuram20

    நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

  • nivarkadaloorcmvisit20

    நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

  • nivarthirvannamali20

    திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்