SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Family Tree- 250 ஆண்டுகளாக உலகின் பணக்காரக் குடும்பம்!

2020-11-18@ 14:16:28

நன்றி குங்குமம்

7வது தலைமுறையான பெஞ்சமினின்சொத்து மதிப்பு மட்டும் ரூ.11 ஆயிரம் கோடி!

உலகின் முக்கியத்துவம் வாய்ந்த, செல்வாக்கான யூத குடும்பங்களில் ஒன்று ரோத்ஸ்சைல்ட் குடும்பம். ஐரோப்பாவில் வங்கி பிசினஸை தொழிற்புரட்சி காலத்தில் ஆரம்பித்ததும், பத்தொன்பதாம் நூற்றாண்டில் உலகிலேயே அதிக செல்வவளத்தை வைத்திருந்ததும் இந்தக் குடும்பம்தான். இவர்களுக்குச் சொந்தமான வங்கிகள்தான் சூயஸ் கால்வாய், ரயில்வேக்கள் உட்பட முக்கிய கட்டுமானங்களுக்கும் தொழில்நிறுவனங்களுக்கும் கடனுதவி அளித்து நவீன உலகைக் கட்டமைத்தன. இன்று சர்வதேச அளவில் நடக்கும் பணப்பரிமாற்றம், கடன் உள்ளிட்ட அனைத்து வகையான நிதி சார்ந்த செயல்பாடுகளையும் எளிமையாக்கி வடிவமைத்ததில் ரோத்ஸ்சைல்ட் குடும்பத்திற்கு முக்கியப் பங்கு இருக்கிறது.விஷயம் இதுவல்ல. பொதுவாக எவ்வளவு பெரிய கோடீஸ்வரர்களாக இருந்தாலும் அவர்களின் தொழில்கள், குடும்பச் சொத்துகள் ஒருசில தலைமுறைகளுக்கு மட்டுமே தாக்குப் பிடிக்கும். அதற்குப்பின் அவை காணாமல் போய்விடும். ஆனால், ரோத்ஸ்சைல்டின் குடும்பம் 250 வருடங்களுக்கு மேலாக பிசினஸில் அசையாமல் நிலைத்து நிற்கிறது. இதுவே இக்குடும்பத்தின் முக்கிய சிறப்பு.
lகுடும்ப வரலாறுரோத்ஸ்சைல்ட் என்ற பெயர் தாங்கிய குடும்பத்தின் முதல் உறுப்பினர் இசாக் எல்சனன் ரோத்ஸ்சைல்ட். ஜெர்மனியில் இவர் பிறந்த வருடம் 1577. அடுத்த 150 வருடங்களில் வந்த இசாக்கின் சந்ததியினரைப் பற்றி வெளி உலகுக்கு அவ்வளவாகத் தெரியாது. 1744ல் ஜெர்மனியில் உள்ள ஃப்ராங்ஃபர்ட் நகரத்தில் யூதர்கள் மட்டுமே வாழும் ஒரு கிராமத்தில் பிறந்தார் மேயர் ஆம்ஷெல் ரோத்ஸ்சைல்ட்.

உலக வரலாற்றில் ரோத்ஸ்சைல்ட் குடும்பத்தின் பெயரைப் பொன்னெழுத்துகளில் பதிவு செய்தவர் இவரே. மேயரின் தந்தை ஆம்ஷெல் மோஸஸ் ரோத்ஸ்சைல்ட் அயல்நாட்டுப் பணப்பரிமாற்ற பிசினஸ் செய்து வந்தார்.மேயர் பிறந்த காலத்தில் கிறிஸ்துவர்களிடமிருந்து தனித்து சிறு குழுவாக யூதர்கள் வாழ்ந்து வந்தார்கள். ஃப்ராங்ஃபர்ட்டில் உள்ள அவரது ஊரில் ஞாயிறு, கிறிஸ்துவ விடுமுறை நாட்கள் மற்றும் இரவு நேரங்களில் யூதர்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது. ஒரு பூச்சியைப் போலவே யூதர்கள் நடத்தப்பட்டனர். இந்நிலையில் பணம் மட்டுமே தன்னை மட்டுமல்ல, யூத சமூகத்தையும் முன்னேற்றும் என்பதில் உறுதியாக இருந்தார் மேயர். அதனால் சிறு வயதிலிருந்து பணத்தை சம்பாதிப்பதற்காக உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்தார். எட்டு வயதிலேயே பழைய நாணயங்களைச் சேகரித்து விற்பதில் விற்பன்னர் ஆகிவிட்டார். தன்னுடைய நோக்கம் தெளிவாகத் தெரிந்ததால் அப்பாவிடமிருந்து பிசினஸ் நுணுக்கங்களைப் பத்து வயதுக்குள்ளேயே கற்றுக்கொண்டார். மேயருக்கு 12 வயதானபோது தந்தையும் தாயும் அம்மை நோயால் இறந்துவிட்டனர். அனாதையான மேயர் தனது 13 வயதில் ஹானோவரில் உள்ள ஒரு வங்கியில் அப்ரண்டீஸாக வேலைக்குச் சேர்ந்தார். இதுவே மேயர் வாழ்க்கையின் திருப்புமுனை. ஆம்; அங்கே தான் வங்கி செயல்பாட்டின் அனைத்து நுணுக்கங்களையும் கற்றுத் தேர்ந்தார்.

குறிப்பாக அந்நியச் செலாவணி மற்றும் அயல்நாட்டு வணிகத்தை வங்கியாளர்கள் எப்படி கையாள்கிறார்கள் என்பதை இரவு பகல் பாராமல் கற்றார். இந்தக் கற்றலே பிற்காலத்தில் அவர் நவீன காலத்துக்கு ஏற்ற வங்கியை உருவாக்குவதற்கு மூல காரணம். 19 வயதில் பிறந்த ஊருக்குத் திரும்பினார். சகோதரர்களுடன் இணைந்து அப்பாவைப் போல அரிய வகை நாணயங்களை விற்க ஆரம்பித்தார். நாணயங்களின் மீது காதல் கொண்டவர் நிலப்பிரபு வில்கெம். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய செல்வந்தர். அரிய வகை நாணயங்கள் மேயருக்கும் வில்கெம்மிற்கும் இடையே நல்ல பிணைப்பையும் நட்பையும் உண்டாக்கியது. வில்கெம்மிற்குத் தேவையான நாணயங்களைப் பெற்றுக்கொடுப்பதோடு, வங்கி, முதலீடு சம்பந்தமான பணிகளையும் அவருக்குச் செய்து கொடுத்தார். இதன் மூலம் ஐரோப்பாவில் உள்ள செல்வாக்கான மனிதர்களின் தொடர்பும் பிசினஸும் மேயருக்குக் கிடைக்க, அவரது காட்டில் பண மழை பொழிந்தது. கை நிறைய பணமும், அரசாங்கம் வரையில் தொடர்பும் இருக்க முழு நம்பிக்கையுடன் சொந்தமாக வங்கியை ஆரம்பித்தார். முன்பே பல வங்கிகள் செயல்பாட்டில் இருந்தாலும் ரோத்ஸ்சைல்டின் வங்கி தனித்துவமாக இயங்கியது. சின்ன நிறுவனங்கள் முதல் அரசாங்கத்துக்கே கடன் கொடுத்து புதிய சரித்திரத்தை எழுதத் தொடங்கினார் மேயர். அந்நியச் செலாவணியைப் பற்றி அவர் கரைத்துக் குடித்திருந்ததால் அமெரிக்கா, பிரேசில், கிரீஸ் என பல நாடுகளும் அவரிடம் கடன் வாங்கின.

வட்டி மற்றும் முதலீட்டால் ரோத்ஸ்சைல்டின் கல்லா நிரம்பி வழிந்தது. 1770ல் திருமணம் செய்து கொண்டார். மேயருக்கு அடுத்தடுத்து 10 குழந்தைகள் பிறந்தனர். அதில் 5 மகன்கள். வங்கியை ஆரம்பித்துவிட்டோம். நல்ல லாபம். மக்கள் மத்தியில் நல்ல பெயர். குழந்தைகளும் வளர்ந்து பெரியவர்களாகி விட்டார்கள். இனி நாம் ஓய்வு எடுத்துக்கொண்டு வயதான காலத்தை நிம்மதியாகக் கழிக்கலாம் என்று நினைத்திருந்தால் மேயரின் சாம்ராஜ்ஜியம் 18ம் நூற்றாண்டின் இறுதியிலேயே முடிவு பெற்றிருக்கும். மேயர் வித்தியாசமாக சிந்தித்தார். தனது வங்கியின் கிளைகளை ஐரோப்பா முழுவதும் திறக்க முனைந்தார். அப்போது வங்கி பிசினஸில் இருந்த யாருமே இப்படி யோசித்ததில்லை.ஆம்; வியன்னா, நேபிள்ஸ், பாரிஸ், லண்டன், ஃப்ராங்ஃபர்ட் என ஐரோப்பாவின் முக்கிய ஐந்து நகரங்களில் தனது ஐந்து மகன்களுக்கும் வங்கிக் கிளைகளை அமைத்துத் தந்தார். இதுதான் ரோத்ஸ்சைல்ட் குடும்பத்தின் பிசினஸை சர்வதேச அளவில் விரிவாக்கி, அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் எடுத்துச்சென்றது.

*நாதன் மேயர் ரோத்ஸ்சைல்ட்

அப்பாவைப் போலவே மூன்றாவது மகனான நாதன், வங்கி பிசினஸில் மாபெரும் வெற்றியடைந்தார். மற்ற நான்கு மகன்களும் நாதனின் இடத்தை நெருங்கக் கூட முடிய வில்லை. ரோத்ஸ் சைல்ட் குடும்ப பிசினஸ் ஆழமாக வேரூன்ற நாதனே காரணம். சர்வதேச அளவில் விரிவடைந்த வங்கி பிசினஸை முன்நின்று வழிநடத்தினார். தனது சகோதரர்கள் கீழே விழும்போது தாங்கிப்பிடித்து அவர்களை மேலே கொண்டு வந்தார். 1798ல் இங்கிலாந்துக்கு இடம்பெயர்ந்த நாதன், 20 ஆயிரம் பவுண்ட் முதலீட்டில் டெக்ஸ்டைல்ஸ் பிசினஸில் கால் பதித்தார். அப்போதைய 20 ஆயிரம் பவுண்ட் என்பது இன்றைய 20 லட்சம் பவுண்டுக்குச் சமம். இன்றைய நவீன வங்கிகளுக்கு முன்னோடியான ‘என் எம் ரோத்ஸ்சைல்ட் அண்ட் சன்ஸ் லிமிட்டெட்’ என்ற வங்கியைத் திறந்தார். போர் மற்றும் நெருக்கடியான காலகட்டங்களில் அரசுக்குக் கடன் கொடுக்கும் அளவுக்கு வங்கியை வளர்த்தெடுத்தார். வங்கி பிசினஸில் கிடைத்த லாபத்தை சுரங்கத் தொழிலில் முதலீடு செய்து அதிலும் வெற்றிக்கொடி நாட்டினார் நாதன். வெறுமனே பணத்தை மட்டுமே சேர்த்துக் கொண்டு போகாமல் நலிந்த யூதக் குடும்பங்களுக்குத் தேவையான உதவிகளையும் செய்தார்.

இந்த சேவை லண்டன், பாரீஸ் என உலகெங்கும் விரிவடைந்தது. குறிப்பாக இஸ்ரேலின் உருவாக்கத்திலும் அங்குள்ள அரசு கட்டடங்களைக் கட்டியெழுப்பியதிலும் நாதனின் பங்கும் உதவியும் அளப்பரியது. யூதர்களுக்கான இலவசக் கல்வி, அனாதை இல்லங்கள், முதியவர்களுக்கு வீடுகள் என மக்களுக்கு உதவுவதை ஒரு மரபு போலவே நாதனின் வாரிசுகள் கடைப்பிடித்தனர். இன்று பெரும்பாலான யூதர்கள் ஃபைனான்ஸ் பிசினஸில் இருக்கிறார்கள் என்றால் அதற்கு முக்கிய காரணம் நாதன்தான். நாதன் ஆரம்பித்த நிறுவனம் ‘ரோத்ஸ்சைல்ட் அண்ட் கோ’ என்ற பெயரில் இன்றும் இயங்கி வருகிறது. சர்வதேச அளவில் முதலீட்டு ஆலோசனை, சொத்து நிர்வாகம், வங்கி சேவையை வழங்குவதில் இந்நிறுவனம்தான் இப்போதும் முன்னோடி. 2018ல் இதன் வருமானம் 1.976 பில்லியன் பவுண்ட். அதாவது 19 ஆயிரம் கோடி ரூபாய்!

*குடும்ப விதிகள்

இறப்பதற்கு முன் மேயர் தனது சந்ததிகளுக்காக சில குடும்ப விதிகளை வகுத்தார். பணத்தை சம்பாதிப்பது முக்கியம். அதைவிட முக்கியம் அதைப் பாதுகாப்பது என்பதுதான் மேயரின் முக்கிய சித்தாந்தம். சொத்து குடும்பத்தைவிட்டு வேறு எங்கேயும் போய்விடக் கூடாது என்பது அவரது முக்கிய நோக்கம். சொந்தங்களுக்குள்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும். மேயரின் நான்கு பேரன்கள் அவரது நான்கு பேத்திகளைத்தான் திருமணம் செய்துகொண்டனர். அப்படி இல்லாத பட்சத்தில் ரோத்ஸ்சைல்ட் குடும்பத்துக்கு நிகரான செல்வாக்கு மிகுந்த குடும்பத்துடன் சம்பந்தம் வைத்துக் கொள்ளலாம். அடுத்து, ஒரு நிறுவனத்தின் நிர்வாகத்தில் இன்னொருவர் தலையிடக்கூடாது. ஆனால், ஒருவருக்கு பிரச்னை என்றால் மற்றவர்கள் கைகொடுக்க வேண்டும். உடலையும் உயிரையும் பிசினஸுக்கு அர்ப்பணிக்க வேண்டும். இதை இப்போதும் பின்பற்றி வருகின்றனர் ரோத்ஸ்சைல்டின் தலைமுறையினர்.

*இருபதாம் நூற்றாண்டில் குடும்பத்துக்குள்ளும் வெளியிலும் நிகழ்ந்த கசப்புகள், மாற்றங்கள், இரண்டு உலகப்போர்கள், அரசியல் போட்டிகளால் ரோத்ஸ்சைல்டின் குடும்பச் சொத்துகள் குறையத் தொடங்கின. நேபிள்ஸில் இருந்த வங்கிக் கிளை 1863லேயே மூடப்பட்டது. ஆண் வாரிசு இல்லாமல் ஃப்ராங்ஃபர்ட்டில் இருந்த கிளை 1901லும், ஆஸ்திரியாவின் மீதான நாஜிப் படையெடுப்பால் வியன்னாவிலிருந்த கிளை 1938லும் மூடப்பட்டன. தவிர, ஆஸ்திரியாவிலிருந்த ரோத்ஸ்சைல்ட் குடும்பத்துக்குச் சொந்தமான விலையுயர்ந்த கலைப்பொருட்களையும் பொக்கிஷங்களையும் நாஜிப் படையினர் அபகரித்தனர். போரின்போது ரோத்ஸ் சைல்டின் சொத்துக்களையும் பறிமுதல் செய்தனர். சில வருடங்களுக்குப் பிறகு ரோத்ஸ் சைல்டின் எஸ்டேட்டுகள் பிரிட்டிஷ் மற்றும் பிரான்ஸ் அரசுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் அமைப்புகளுக்கும் தானமாக வழங்கப்பட்டன. எழுபதுகளில் லண்டன், பாரீஸ் மற்றும் சுவிஸ்ஸில் இருந்த வங்கிகள் மட்டுமே அவர்களுக்கு மீதமிருந்தன.

இன்று...

உலக வங்கி உட்பட பல்வேறு நிதி நிறுவனங்களின் வருகையால் கடன் தரும் தொழிலில் அவ்வளவாக அவர்கள் ஈடுபடுவதில்லை. ஆனால், நிதி ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர். தவிர, ஒயின் மேக்கிங், எனர்ஜி துறை, சுரங்கத் தொழில், ரியல் எஸ்டேட், நிறுவனங்களை வாங்கல், விற்றல் என பல தொழில்களில் வெற்றி கரமாக இயங்கி வருகின்றனர் ரோத்ஸ்சைல்டின் வாரிசுகள். குறிப்பாக பிரான்ஸில் வங்கியாளராக இருக்கும் பெஞ்சமின் ரோத்ஸ்சைல்ட் வங்கித் தொழிலில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறார். ஏழாம் தலைமுறையைச் சேர்ந்த பெஞ்சமினின் நிகர சொத்து மதிப்பு 11 ஆயிரம் கோடி ரூபாய். இப்போது ரோத்ஸ்சைல்ட் குடும்பத்தில் பெரும் பணக்காரரும் இவரே.

திரைப்படங்களும் நூல்களும்...

ரோத்ஸ்சைல்ட் குடும்பத்தைப் பற்றியும் அவர்களின் பல்வேறு காலகட்டங்களைப் பற்றியும் தொலைக்காட்சி சீரியல்களும் திரைப்படங்களும் எடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ‘தி ஹவுஸ் ஆஃப் ரோத்ஸ்சைல்ட் (1934)’ , ‘தி ரோத்ஸ்சைல்ட்ஸ் (1940)’ ஆகிய படங்கள் முக்கியமானவை. தவிர, ரோத்ஸ்சைல்ட் குடும்பத்தைப் பற்றி ஏராளமான புத்தகங்களும் வெளிவந்துள்ளன.

நிதித்துறையில் இயங்குபவர்களுக்கு பைபிள் போல கருதப்படும் அந்தப் புத்தகங்களில் குறிப்பிடத்தக்கவை:

‘The House of Rothschild: Money’s Prophets, 1798 - 1848’,
‘The World’s Banker’,
‘Founder: A Portrait of the First Rothschild and His Time’,
‘Rothschild: A Story of Wealth and Power’.

தொகுப்பு: த.சக்திவேல்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-05-2021

  15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 13-05-2021

  13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 11-05-2021

  11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 09-05-2021

  09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 07-05-2021

  07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்