SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பத்திரிகை சுதந்திரத்தின் மீதான எந்தவொரு தாக்குதலும் தேசிய நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும்: குடியரசுத் துணைத் தலைவர்

2020-11-16@ 16:59:55

டெல்லி : பத்திரிகை சுதந்திரத்தின் மீதான எந்தவொரு தாக்குதலும் தேசிய நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும், இதை அனைவரும் எதிர்க்க வேண்டும் எனவும் குடியரசு துணைத் தலைவர் திரு வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

தேசிய பத்திரிகை தினத்தை முன்னிட்டு, ‘‘கொவிட் தொற்று நேரத்தில் ஊடகத்தின் பங்கு மற்றும் ஊடகத்துறையில் கொவிட் ஏற்படுத்திய தாக்கம்’ என்ற தலைப்பிலான இணைய கருத்தரங்குக்கு இந்திய பத்திரிகை கவுன்சில் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சியில், முன்னதாக பதிவு செய்யப்பட்ட வீடியோ உரையில், குடியரசுத் துணைத் தலைவர் கூறியதாவது:

`சுதந்திரமான, அச்சமற்ற ஊடகம்  இல்லாமல் ஜனநாயகம் இருக்க முடியாது. ஜனநாயகத்தின் அஸ்திவாரங்களைப் பாதுகாப்பதற்கும், பலப்படுத்துவதற்கும், இந்தியாவில் ஊடகங்கள் எப்போதுமே  முன்னணியில் உள்ளன. ஜனநாயகத்தை ஒருங்கிணைப்பதிலும், அரசியலமைப்புச் சட்டத்தை வலுப்படுத்துவதிலும், சுதந்திரமான  நீதித்துறையைப் போலவே வலுவான, சுதந்திரமான மற்றும் துடிப்பான ஊடகமும் முக்கியமானது. இதழியல் ஒரு புனிதமான பணி. மக்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும், நாட்டு நலனை மேம்படுத்துவதிலும், ஊடகம் மிகச் சிறப்பான பங்கை ஆற்றிவருகிறது. அதேநேரத்தில், ஊடகங்கள் தனது செய்தியில், நியாயமாகவும், பொதுவாகவும், துல்லியமாகவும் இருக்க வேண்டும். பரபரப்பு ஏற்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். செய்திகளுடன், கருத்துக்களை இணைக்கும் போக்கு கட்டுப்படுத்தப்பட வேண்டும். செய்தியில் மேம்பட்ட தகவல்கள் அதிகம் இடம் பெற வேண்டும். கொவிட் தொற்று நேரத்திலும், பத்திரிக்கையாளர்கள் அபாயத்தையும் பொருட்படுத்தாமல், முன்களப் பணியாளர்கள் போல் செயல்பட்டு கொவிட்  தொடர்பான செய்திகளை தொடர்ந்து வெளிவரச் செய்தது பாராட்டுக்குரியது. இந்தப் பணியில் ஈடுபட்ட ஒவ்வொரு பத்திரிக்கையாளர்களுக்கும், புகைப்பட செய்தியாளர்களுக்கும் மற்றும் இதர ஊழியர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்.

பொய்ச் செய்திகள் ஏராளமாக வெளிவரும் சூழலில், பெருந்தொற்று பற்றிய சரியான தகவல்களை, சரியான நேரத்தில் தெரிவிப்பது மிக முக்கியமான பணி. போலி செய்திகளில் இருந்து விலகியிருப்பது தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஊடகத்துக்கு பெரும் பங்கு உள்ளது.

கொவிட் -19 தொற்றுக்கு, பலியான பல பத்திரிகையாளர்களின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். கொவிட்-19 நெருக்கடி ஊடகத்துறையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பல பத்திரிகைகள், தங்கள் பதிப்புகளை குறைத்து டிஜிட்டலாக மாறின. ஊடகத்துறையில் பத்திரிக்கையாளர்கள் வேலை இழந்த துரதிர்ஷ்ட சம்பவங்களும் நடந்தன. இந்த சிக்கலான நேரத்தில், பத்திரிக்கையாளர்கள் கைவிடப்படக் கூடாது. கொரோனா வைரஸ் ஏற்படுத்திய அசாதாரண சூழலுக்கு, பத்திரிக்கை துறையினர் ஒன்றிணைந்து புதிய தீர்வுகள் காண வேண்டும்.  ஊடக நிறுவனங்கள், நெகிழ்வான  வர்த்தக மாதிரியை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை பெருந்தொற்று சுட்டிக் காட்டியுள்ளது. கொரோனா காரணமாக சமூக தொடர்புகள் குறைந்து, மக்கள் பலர் வீடுகளிலேயே தனிமையில் இருந்ததால்,  கொரோனா பற்றிய சமீபத்திய தகவல்களை அறிய ஊடகத்தை சார்ந்து உள்ளனர்.

ராமாயணம், மகாபாரதம் போன்ற டி.வி. தொடர்கள் எல்லாம் மீண்டும் ஒளிபரப்பப்பட்டதால், ஊடகத்துறை நேயர்களையும், வாசகர்களையும் அதிகரிக்கும் புதுமையான வழிகளைக் கண்டறிந்து தங்கள் நிதி ஆதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்’.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • sudan-26

  சூடானில் ஆட்சியை கைப்பற்றிய ராணுவம்!: பிரதமர், அமைச்சர்கள் கைது..மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம்..!!

 • karnataka-schools-25

  20 மாதங்களுக்கு பின் கர்நாடகத்தில் தொடக்க பள்ளிகள் திறப்பு!: ஆர்வமுடன் பள்ளி செல்லும் மழலைகள்..!!

 • wheel-uae-25

  250 மீ. உயரம்...1,750 பேர் பயணிக்கலாம்!: உலகிலேயே மிகப்பெரிய ராட்டினம் ஐக்கிய அரபு அமீரகத்தில் திறப்பு..!!

 • mahaa12

  100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

 • police-21

  காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்