SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதிதாக துவங்கிய அரசு கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பை நடத்தாமல் தேர்வுகள் நடத்த முயற்சிப்பதா? அரசுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

2020-10-29@ 00:57:22

சென்னை: புதிய அரசு கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தாமல் தேர்வுகளை எப்படி நடத்த முடியும் என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ள 10 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் இல்லாததால், ஒரு மாதத்திற்கும் மேலாக முதலாமாண்டு மாணவர்களுக்கு ‘ஆன்லைன்’  வகுப்புகள் நடத்தப்படாமல் இருப்பதற்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  

எடப்பாடி அதிமுக அரசின் ‘ஏமாற்று ராஜ்யத்தில்’ அறிவிப்பு என்றாலே, அது வீணாகும் வெற்று அறிவிப்பு தான்  என்பது இப்போது வெளிப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி, தென்காசி, விழுப்புரம், ராணிப்பேட்டை, நாகப்பட்டினம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ள இந்த அரசு கல்லூரிகளில், பெண்களுக்காக உள்ள இரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் அடக்கம். ஏறக்குறைய 2000த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் உயர் கல்வித் துறையின் குளறுபடிகளால் பாதிக்கப்பட்டு, வகுப்புப் பாடங்களை ஆன்லைன் மூலம் கற்க வாய்ப்பு இல்லாமல்  திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அனைத்துத் துறைகளிலும் கோட்டை விட்டுள்ள அதிமுக அரசு  கல்வித்துறையையும் கோட்டை விட்டு, அங்கும் சீரழிவுகளை ஏற்படுத்திவிட்டுப் போக துடிப்பது புரிகிறது.

 ‘கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு டிசம்பர் மாதத்தில் பருவத் தேர்வுகள் நடத்தப்படும்’ என்று பல்கலைக்கழகங்கள் அறிவித்துள்ளன. அதற்கு முன்பு உள் மதிப்பீட்டுத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் மாணவர்களின் தேர்ச்சியில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். ஆன்லைன் வகுப்புகளே நடக்கவில்லை என்றால், பாடமே நடத்தாமல் எப்படி ஒரு மாணவர் உள் மதிப்பீட்டுத் தேர்வை எழுத முடியும்?. அந்த மதிப்பெண் இல்லாமல் எப்படி பருவத் தேர்வினை அவர் எதிர்கொள்வார்? புதிய கல்லூரிகள் ஆரம்பித்து, அடிப்படை வசதிகளை இல்லாமல் மாணவர்களைச் சேர்த்து இப்படியொரு அவலத்தை எடப்பாடி அரசு ஏன் உருவாக்க வேண்டும்? மாணவர்களின் எதிர்காலக் கல்வியை ஏன் அதிமுக அரசு  கலைத்துச் சீர்குலைக்க வேண்டும்?.

ஆகவே, இனியும் தாமதிக்க வேண்டாம். புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர் நியமனங்கள் ஆகிய பணிகளை உடனடியாக போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு, பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்குத் தாமதமின்றி ஆன்லைன் வகுப்புகளை நடத்திட வேண்டும். அவர்கள் வெற்றிகரமாகப் பருவத் தேர்வினை எழுதுவதற்கான சூழ்நிலைகளை உருவாக்கிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். மாணவர்களின் கல்வியில் விபரீத விளையாட்டுகளை அதிமுக அரசு நடத்திட முயற்சிக்க வேண்டாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • humanbodies23

  2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு!: புகைப்படங்கள்

 • jammu23

  ஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்!: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..!!

 • yamuna23

  இனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்!: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..!!

 • chadpuja23

  சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை!: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..!!

 • isrelviva23

  இப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா!: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்