SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்றுவரும் துரைக்கண்ணுவின் விவசாய அமைச்சர் பதவியை கேட்டு சி.வி.சண்முகம் திடீர் போர்க்கொடி: தமிழக அமைச்சரவையில் பரபரப்பு

2020-10-29@ 00:36:28

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் அமைச்சர் துரைகண்ணுவின் விவசாயத்துறை பதவியை கூடுதலாக கேட்டு அமைச்சர் சி.வி.சண்முகம் திடீரென போர்க்கொடி தூக்கியுள்ளார். அவர் அமைச்சரவையில் சாதி கோஷத்தை எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் தஞ்சை மாவட்டச் செயலாளராகவும், விவசாயத்துறை அமைச்சராகவும் இருப்பவர் துரைக்கண்ணு. இவருக்கு கடந்த 13ம் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தஞ்சையில் இருந்து சேலம் செல்லும் வழியில் விழுப்புரம் அருகே உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அங்கு உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் அவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதோடு, இதயக்கோளாறு மற்றும் சுவாசக்கோளாறும் இருப்பது தெரிந்தது. இதனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 2 முறை மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் சென்று அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தார். ஆனால் அவருக்கு ஒரே நேரத்தில் பல்வேறு நோய்களும் தாக்கியுள்ளதால், உடல்நிலை மோசமடைந்தது. டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தாலும் அவரை காப்பாற்ற முடியாமல் போராடி வருகின்றனர். அவர் கடந்த 15 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், அவரது இலாகா பணிகள் கவனிக்க முடியாமல், கோப்புகள் அனைத்தும் தேங்கியுள்ளது. இதனால், அந்த பதவியை தற்சமயமாக யாருக்கு ஒதுக்கலாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மூத்த அமைச்சர்களுடன் ஆலோசன நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

வேளாண் சட்டங்கள், நெல் கொள்முதல் விவகாரம் போன்ற பூதாகரமான பிரச்னைகள் தற்போது எழுந்துள்ளன. இதை சரி செய்ய அந்த துறையை மற்றொருவருக்கு மாற்றிக் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த தகவல் வெளியானதும், விழுப்புரம் மாவட்டச் செயலாளராகவும், சட்டம் மற்றும் கனிம வளத்துறை அமைச்சராக உள்ள சி.வி.சண்முகம், துரைக்கண்ணுவின் பதவியை தனக்கு கூடுதலாக ஒதுக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கியுள்ளார்.
துரைக்கண்ணு, வன்னியர்சமூகத்தைச் சேர்ந்தவர். இதனால் அவரது பதவியை மற்றொரு வன்னிய சமூக அமைச்சருக்குத்தான் கொடுக்க வேண்டும். அதனால் தனக்கு கொடுக்க வேண்டும். ராமநாதபுரத்தைச் சேர்ந்த தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டனின் பதவி பறிக்கப்பட்டது. இதனால் அந்தப் பதவிக்கு புதிய அமைச்சர் நியமிக்கப்படாமல், அதே சமூகத்தைச் சேர்ந்த ஆர்.பி.உதயகுமாருக்கு கொடுக்கப்பட்டது. அதேபோலத்தான் வன்னியசமூக அமைச்சரான தனக்கு வழங்க வேண்டும் என்று சி.வி.சண்முகம் போர்க்கொடி தூக்கியுள்ளார்.

ஆனால் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மூத்த அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் டெல்டா மாவட்ட அமைச்சரின் பதவியை அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களுக்குத்தான் ஒதுக்க வேண்டும். விவசாயத்துறை டெல்டாவைச் சேர்ந்தவர்களுக்கு ஒதுக்குவதுதான் முறை. அங்குதான் விவசாயம் செழிப்பாக உள்ளது. இதனால் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், காமராஜ், புதுக்கோட்டை விஜயபாஸ்கர் ஆகியோரில் ஒருவருக்குத்தான் ஒதுக்க வேண்டும் என்று கூறுகின்றனர். குறிப்பாக காமராஜூக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் காமராஜூக்கு ஒதுக்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், சி.வி.சண்முகத்தை சமாதானப்படுத்தி விட்டு வழங்கலாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கருதுகிறார். இதனால்தான் கடந்த 15 நாட்களாக விவசாயத்துறையை யாருக்கு ஒதுக்குவது என்று முடிவு எடுக்கப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது. இது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* அதிமுகவுக்கு மாறும் அமமுக துணை செயலாளர்
அமமுகவின் துணை பொதுச் செயலாளராக இருப்பவர் ரங்கசாமி. இவர், அதிமுகவில் தஞ்சை மாவட்ட செயலாளராக இருந்தார். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் தஞ்சை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டார். ஆனால் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் அதிமுக ஆட்சியை பிடித்தது. பின்னர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது நடந்த இடைத்தேர்தலில்தான் ரங்கசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர், முன் கூட்டியே வெற்றி பெற்றிருந்தால், அமைச்சராகியிருப்பார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் பல்வேறு குழப்பங்களால் அமைச்சராகவில்லை. பின்னர் டிடிவி அணிக்குச் சென்றதால் எம்எல்ஏ பதவியை இழந்தார். தற்போது டிடிவி அணியில் கடும் அதிருப்தியில் உள்ளார். இதனால் அவரை அதிமுகவுக்கு இழுக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் அவர் அணிமாறுவார் என்கின்றனர் அதிமுகவினர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • humanbodies23

    2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு!: புகைப்படங்கள்

  • jammu23

    ஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்!: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..!!

  • yamuna23

    இனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்!: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..!!

  • chadpuja23

    சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை!: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..!!

  • isrelviva23

    இப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா!: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்