SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அச்சுறுத்தும் காற்று

2020-10-27@ 00:19:20

உலகம் முழுவதும் காற்று மாசுபாடு மனிதர்களை அச்சுறுத்தும் பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. ஆண்டுக்கு சுமார் 46 லட்சம் பேர் சுவாச பிரச்னை காரணமாக இறப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. கடந்த 2019ம் ஆண்டில் இந்தியாவில் மட்டும், காற்று மாசு காரணமாக 1,16,000 பச்சிளம் குழந்தைகள் பிறந்த ஒரு மாதத்தில் இறந்து விட்டன என ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் சுத்தமான காற்றை விலை கொடுத்து வாங்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டு விடும்.

காற்று மாசு அதிகரித்தால் இதய நோய், புற்றுநோய் உள்பட பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. நகரம் முதல் கிராமம் வரை காற்று மாசுபாடு அதிகரித்து வருவது வேதனைக்குரியது. ஆங்காங்கே குப்பை, மரக்கட்டை உள்பட பல்வேறு கழிவுகளை தீயிட்டு எரிப்பதை தவிர்ப்பது நல்லது. காற்று மாசுபாட்டை குறைக்க தனிநபர் ஒவ்வொருவரும் முயற்சி எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். தூய காற்றின் தோழனான மரங்களை அதிகளவில் வளர்க்க வேண்டியது நம் அனைவரின் கடமை.

சாலை விரிவாக்கம் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிக்காக மரங்களை வெட்டினால், கண்டிப்பாக அதற்கு பதிலாக கூடுதல் மரங்களை நட வேண்டும் என்கிறது நீதிமன்றம். அவ்வாறு நடப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு அதிகாரிகளுக்கு உள்ளது. இவ்விஷயத்தில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. 2015-16ம் ஆண்டில் 2.20 கோடி வாகனங்கள், 2016-17ம் ஆண்டில் 2.38 கோடி வாகனங்கள், 2017-18ம் ஆண்டில் 2.56 கோடி வாகனங்கள், 2018-19ம் ஆண்டில் 2.76 கோடி வாகனங்கள் என வாகனப் பெருக்கம் கூடிக்கொண்டே செல்கிறது.  

இதைத் தவிர, கொரோனா நோய் தொற்றை அடுத்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பொதுமக்களிடம் இரு சக்கர வாகன பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கையும் கூடியுள்ளது. கோடிக்கணக்கிலான வாகனங்கள் உமிழும் புகை, காற்று மாசின் பெரும் காரணமாக இருக்கிறது. எனவே, பேட்டரி வாகனங்களை ஊக்கப்படுத்தும் முயற்சியில் அரசு இறங்க வேண்டும். காற்று மாசுபடுவதை தவிர்க்க மக்கள் அதிகளவில் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும்.

காற்று மாசுபடுதலில் ஈடுபடுபவர்களின் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை உறுதி செய்யும் வகையில் அரசின் நடவடிக்கை இருக்க வேண்டும். மற்ற பிரச்னைகளில் இருப்பது போல, காற்று மாசு பிரச்னையிலும் ஆட்சியாளர்கள் மவுனம் காத்திட வேண்டாம். மக்களின் ஆரோக்கியத்தை கவனத்தில் கொண்டு தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தின் முக்கிய நகரங்களில் திடீரென காற்று மாசு அதிகரித்தால், உடனே அதற்கான காரணத்தை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் காற்றின் தரத்தை அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும்.

அப்போது தான் காற்றின் தரத்தை பாதுகாக்க முடியும். வளர்ச்சிப்பணிகள் தேவை தான். ஆனால், தூய காற்று வளர்ச்சியை விட மிக முக்கியமானது. உயிர் வாழ தேவையான காற்று மீது அனைவருக்கும் அக்கறை கண்டிப்பாக இருக்க வேண்டும். தற்போது காற்று மாசு என்பதை அரசியல் பிரச்னையாக எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அப்போது தான் இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். காற்று மாசு காரணமாக இனி இறப்புகள் இருக்காது. அனைவருக்கும் தூய காற்று கிடைக்கும் என்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • humanbodies23

  2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு!: புகைப்படங்கள்

 • jammu23

  ஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்!: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..!!

 • yamuna23

  இனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்!: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..!!

 • chadpuja23

  சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை!: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..!!

 • isrelviva23

  இப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா!: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்