SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆளும்கட்சியில் 3வது முதல்வர் வேட்பாளர் கோஷம் எழுந்து வருவதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2020-10-27@ 00:18:53

‘‘அரியரால சந்தோஷம்னு கேள்விப்பட்டிருக்கியா..’’ என்று கேட்டபடி வந்தார் விக்கியானந்தா. ‘‘இல்லையே.. அது என்ன புது விஷயம்...’’ என்று ஆர்வமாக கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மாங்கனி மாவட்டத்துல கொரோனாவை சாதகமாக எடுத்துக்கிட்டு, பல திரைமறைவு சமாச்சாரம் நடந்துருக்கு. யுனிவர்சிட்டியில தினக்கூலியா சேர்ந்த சிலரை, 2009வது வருஷம் விதிமுறைக்கு புறம்பா நிரந்தரம் பண்ணாங்க. அதுக்கு பிறகும், எந்தவித ரூல்ஸயும் பாலோ பண்ணாம, ஒவ்வொரு புரோமோஷனா கொடுத்துட்டு வந்தாங்க... பணிநிரந்தரத்துக்கு முன்னாடியே அவங்க யுனிவர்சிட்டி பணியாளர்னு கணக்கிட்டு, கொரோனா லாக்டவுன் காலத்துல அரியர் போட்டுருக்காங்களாம். ஒவ்வொருத்தருக்கும் 30 லகரத்துக்கு மேல கணக்கு போட்டு, சுமார் ஒரு கோடிக்கும் மேல அரியர் கிடச்சதாம். அரியர் வாங்கினவங்க சந்தோஷத்துல மூழ்கி இருக்காங்க...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தூங்கா நகர மாவட்டத்துல இலை தரப்பில் இருந்து 3வது முதலமைச்சர் கோஷம் விண்ணை பிளந்துதாமே, அப்படியா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இலை கட்சியில ஏற்கனவே முதல்வர் வேட்பாளர் யார்ங்கிறதுல, இபிஎஸ் தரப்பிலும், ஓபிஎஸ் தரப்பிலும் பெரிய பஞ்சாயத்து ஓடி ஒரு வழியாக அமைதியாச்சு. ஆனாலும், ஆங்காங்கே முதல்வர் வாழ்க கோஷத்தை ரெண்டு தரப்பும் போட்டுட்டு இருக்கு.. இது ஒருபுறமிருக்க, கோட்டையில செருப்பு போடாமல் இருந்த அமைச்சரை அவரது ஆதரவாளர்கள் ‘வருங்கால முதலமைச்சரே’ என வாழ்த்துக் கோஷம் எழுப்பி அதிமுகவில் மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி இருக்காங்க... சமீபத்துல, மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே செங்குளத்தில் சாலை திட்டப்பணியை துவக்கி வைக்க வந்த செருப்பு போடாமல் இருந்த அமைச்சர்... பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கிக் கொண்டிருந்தாராம்...

அப்போது, அமைச்சரின் ஆதரவாளர்கள் சிலர், ‘வருங்கால முதலமைச்சர் அண்ணன்’ என கோஷம் போட ஆரம்பிச்சுட்டாங்களாம்... இதனைக் காதில் கேட்ட அமைச்சரோ, சின்ன புன்னகையுடன் அங்கிருந்து கிளம்பிச் சென்றாராம்... அடுத்து என்ன நடந்ததோ தெரியலை... மறுநாள் தேவர் ஜெயந்தி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர், ‘வரவேற்பு போஸ்டர்களில் ஜெயலலிதா, முதல்வர், துணை முதல்வர் படங்களை பெரிதாக போடுங்கள்.... ஆர்வக்கோளாறில் எங்களில் யாரையாவது பெரிதாக போட்டு, ‘வருங்கால முதல்வரே’ என்று கோஷங்களை போட்டு தர்ம சங்கடத்திற்கு ஆளாக்கிடாதீங்க... தலைமைக்கு கட்டுப்பட்ட தொண்டன்தான் நான். உங்கள் அன்பை இப்படிக் காட்டி விடாதீர்கள்...’ என்று உருக்கமான கோரிக்கை வைத்தாராம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மலைக்கோட்டையில இப்போதே தீபாவளி வந்துடுச்சு போல...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தீபாவளி நெருங்கிவருவதால் வெடிக்கடைகள் அமைக்க வியாபாரிகள் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர். தற்காலிக வெடிக்கடை அமைக்க விரும்புவோர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்து உரிமம் பெற்று கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.. தாற்காலிகமாக வெடிக்கடை அமைக்க வியாபாரிகள் விண்ணப்பிக்க தொடங்கினர். ஆனால் நிரந்தரமாக வெடிக்கடை வைத்திருப்பவர்கள் சில மாதங்களுக்கு முன்பு தான் ஆண்டு தோறும் புதுப்பிக்கும் உரிமத்தை புதுப்பித்தார்களாம்... நிரந்தரமாக வெடிக்கடை வைத்திருப்பதால் விற்பனை செய்வதற்காக பல லட்சம் ரூபாய்க்கு வெடி பொருட்களும் ஆர்டர் செய்யப்பட்டதாம்... கடற்கரை மாவட்டத்தில் தீயணைப்புதுறையை சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் நிரந்தரமாக கடை வைத்திருப்பவர்கள் தற்காலிகமாக கடை போடுவதற்கும் விண்ணப்பிக்க வேண்டும்.

நிரந்தரமாக வெடி பொருட்கள் விற்பனை செய்ய வைத்திருக்கும் கடை குறுகிய இடத்தில் உள்ளது. தீபாவளி பண்டிகை கால விற்பனையின் போது பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும். வேறு ஒரு இடத்தில் பெரிய இடத்தை பிடித்து அங்கு பட்டாசுகளை விற்பனை செய்யலாம். அதற்கு தற்காலிக கடை அமைக்க விண்ணப்பிக்க வேண்டும். இல்லையெனில் பட்டாசுகள் விற்பனை செய்ய முடியாது என்று எச்சரிக்கையுடன் கூறிவிட்டாராம்... அதிர்ச்சி அடைந்த நிரந்தரமாக கடை வைத்திருக்கும் பட்டாசு வியாபாரிகள் வேறு ஒரு இடத்தில் கடையை பிடித்து தற்காலிக உரிமம் பெற அலைந்து வருகின்றார்களாம்... பட்டாசுகளை விற்பனை செய்ய நிரந்தர உரிமம் வைத்திருப்பவர்களை வேண்டும் என்றே உயர்அதிகாரி அலையவிடுகிறார் என்று வியாபாரிகள் புலம்புகின்றார்களாம்... ஒருவரின் வாழ்க்கை மற்றவர்களுக்கு வேடிக்கையாக போய்விட்டது என்று பட்டாசு வியாபாரிகள் புலம்பறாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ இன்னொரு திருச்சி மேட்டர் பிளீஸ்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் கீழ் உள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரிகளில் திறன்மிகு உதவியாளர்களாக பணியாற்று
பவர்களுக்கு, பணிமனை போதகர் பதவி உயர்வு வழங்க தேர்ந்த பெயர் பட்டியல் வெளியிடப்பட்டதாம்... பணிமனை போதகர் பதவி உயர்வு வழங்கப்படும் போது ஏற்கனவே பணிமனை போதகர்களாக பணிபுரிந்து வருபவர்களுக்கு, அவர்கள் கோரும் ஊர்களுக்கு பணியிட மாற்றம் அளிப்பது தான் வழக்கம்... அதன் பிறகு தான் திறன்மிகு உதவியாளர்களுக்கு பணிமனை போதகர் பதவி உயர்வு வழங்கப்படுவது காலம் காலமாக இருந்து வருதாம்... இந்நிலையில் திருச்சியில் இருந்து பிரிந்த மாவட்டத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் பணிபுரியும் திறன்மிகு உதவியாளர் ஒருவர், தான் பணியாற்றும் அதே கல்லூரியில் பணிமனை போதகராக பதவி உயர்வு பெற கவனிக்க வேண்டியவர்களை கவனித்து விட்டேன். அதனால் தான் பணியாற்றும் பாலிடெக்னிக் கல்லூரியிலேயே எனக்கு பதவி உயர்வு பணியிடம் கிடைத்து விடும் என்று மற்ற ஊழியர்களிடம் கூறி வருகிறாராம்... இப்படி பணம் கொடுத்தால் சொந்த ஊர்களுக்கு பணியிடமாற்றம் கோருபவர்களின் நிலைமை என்ன என்று மற்ற பணியாளர்கள் ரொம்ப புலம்பி வர்றாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.    

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • jaipourelephant20

  ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

 • delhiformer20

  வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

 • nivarpondyvilupuram20

  நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

 • nivarkadaloorcmvisit20

  நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

 • nivarthirvannamali20

  திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்