SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பவானி ஆற்றில் தொடரும் மணல் திருட்டு அணை போட்டு தடுக்க மறுக்கும் அதிகாரிகள்

2020-10-25@ 13:55:56

ஈரோடு : ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், பவானி ஆற்றின் வழியாக 70 கிலோ மீட்டர் தூரம் பயணித்து பவானி கூடுதுறையில் உள்ள காவிரி ஆற்றில் கலக்கிறது. பெரும்பாலான நாட்கள் தண்ணீர் செல்வதால் ஆற்றில் மணல் ஆங்காங்கே திட்டுகளாக படிகின்றது. அவ்வாறு சேகரமாகும் மணலை கொள்ளையடித்து வருகின்றனர். பவானி ஆற்றில் மணல் அள்ள அரசு தடை விதித்துள்ளது. ஆனாலும், தடையை மீறி மணல் கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் இரவு, பகலாக மணல் கடத்தி வருகின்றனர்.

பரிசலில் ஆற்றின் மைய பகுதிக்கு செல்லும் இக்கும்பல், தண்ணீரில் குதித்து, மூச்சை அடக்கியவாறு ஆற்றின் அடிப்பகுதிக்கு சென்று வாளிகளில் மணல் அள்ளி வந்து பரிசலில் கொட்டுகின்றனர். அதன்பின் இரவு நேரத்தில் டிராக்டர்கள், மாட்டு வண்டிகளில் கடத்திச்சென்று விற்கின்றனர். பவானி ஆற்று மணல், கட்டுமான பணிகளுக்கு தரமானதாக இல்லை என்பதால், மணல் அள்ள பொதுப்பணி துறையினர் அனுமதிப்பதில்லை. ஆனாலும், ஆற்றின் இருகரைகளிலும் பல கிலோ மீட்டர் தூரம் மணல் திருட்டு சர்வ சாதாரணமாக நடக்கிறது. எலவமலை, காலிங்கராயன்பாளையம், ஜம்பை, அத்தாணி, பவானி, ஆப்பக்கூடல், பங்களாபுதூர், கள்ளிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மணல் திருட்டு அதிகளவில் நடக்கிறது. ஒரு மாட்டு வண்டி மணல் ரூ.1,000 முதல் ரூ.1,300 வரை விற்பனை செய்கின்றனர்.

மணல் கடத்தலை கண்காணித்து தடுக்க வேண்டிய பொதுப்பணி துறையினரும், வருவாய் துறையினரும் கண்டுகொள்வதில்லை. ஏன் இப்படி கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்? என்பது மர்மமாக உள்ளது என்கிறார்கள் இயற்கை நல ஆர்வலர்கள். பெயரளவில் வழக்குகளை போட்டு கணக்கு காட்டும் அதிகாரிகள், மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் செயல்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பவானி ஆற்று மணல் கட்டுமான பணிகளுக்கு உகந்தது அல்ல என்பதால், காவிரி ஆற்று மணலுடன் கலந்து முறைகேடாக விற்பனை செய்து, கொள்ளை லாபம் ஈட்டுகின்றனர். ‘‘பவானி ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்படும், வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு கூடுதல் அபராதம் விதிக்கப்படும்’’ என கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்தது.

இந்த எச்சரிக்கையால் ஒரு சில மாதங்கள் மட்டுமே கட்டுக்குள் இருந்த மணல் கடத்தல், மீண்டும் விஸ்வரூபம் எடுக்க துவங்கியுள்ளது. மணல் கடத்தலில் ஈடுபடுவோருக்கு முன்ஜாமீன் கிடையாது என்றும், மணல் கடத்தலை தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனாலும், பவானி ஆற்றில் மணல் திருட்டை தடுக்காமல் அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பது கவலையளிக்கிறது என்கிறார்கள் இப்பகுதி மக்கள்.
இது குறித்து வழக்கறிஞர் பவானி சிவராமன் கூறியதாவது: பவானி ஆற்றில் மணல் கொள்ளை என்பது இன்று, நேற்றல்ல.

 பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் கரையோரத்தில் உள்ள கிராமத்தின் பொதுப்பயன்பாட்டிற்கு என்று ஆரம்பித்து இன்று மிகப்பெரிய வணிகமாக உருவெடுத்துவிட்டது. அரசு நிர்வாகம் நினைத்தால் இந்த சட்டவிரோத மாபியா கும்பலை அடியோடு அழித்துவிட முடியும். ஆனால், அரசு இக்கும்பலுக்கு துணை போவது கவலை தரக்கூடியதாக உள்ளது. திருட்டு மணலை, வாகனத்துடன் பொதுமக்கள் பிடித்து கொடுத்தால்கூட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. பெயரளவுக்கு ஒரு வழக்குப்பதிவு செய்துவிட்டு, விடுவித்து விடுகிறார்கள்.

வழக்குப்பதிவு செய்யப்பட்ட அதே நபர் மீண்டும் மணல் கடத்தலில் ஈடுபடுகிறார். மணல் கடத்தல் கும்பல்களுக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது. குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என நீதிமன்றம் பல முறை உத்தரவிட்டும், அரசு அந்த உத்தரவுகளை அமல்படுத்துவது இல்லை. பவானி ஆற்றின் இரு கரைகளிலும் ஆங்காங்கே மணல் கொள்ளை நடப்பதை தடுக்காவிட்டால், நிலத்தடி நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போகும். மணல் கடத்தல் மூலம், நீர் வழிப்பாதைகள் தடுக்கப்படுவதால் ஆற்றின் கரைகள் பாதிக்கப்பட்டு வெள்ளநீர் கரைபுரண்டு ஓடும் நிலை ஏற்படும்.

எல்லாவற்றிற்கும் மேலாக குடிநீர் ஆதாரங்கள் அடியோடு பாதிக்கும். பவானி ஆற்றில் ஏராளமான கூட்டுக்குடிநீர் திட்டங்கள் பயன்பாட்டில் இருக்கிறது. இத்திட்டங்களுக்கு தொடர்ந்து தண்ணீர் கிடைக்க வேண்டுமென்றால், மாவட்ட நிர்வாகம் தீவிர கவனம் செலுத்த வேண்டும். மணல் கொள்ளையை அடியோடு தடுக்க வேண்டும். இவ்வாறு சிவராமன் கூறினார்.


ஆற்று மணல் உருவாவது எப்படி?

ஆறுகளில் ஓடும் தண்ணீரை சுத்தப்படுத்தும் அரும்பணியை, மணல் செய்கிறது. ஆற்றின் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மணல் முக்கிய பங்கு வகிக்கிறது. குளிர்காலங்களில் இறுக்கமாகவும், வெயில் காலத்தில் விரிவடைந்து இலகுவாகியும் நொறுங்கும் பாறைகள், தண்ணீரின் வேகத்தால் உருட்டப்பட்டு, உடைந்து சிறுசிறு துகள்களாகி மணலாக மாற்றம் அடைகின்றன. இவ்வாறு இயற்கையாக உருவாகும் மணலை, செயற்கையாக உருவாக்க முடியாது. ஒரு கன அடி மணல் உருவாக குறைந்தபட்சம் 100 வருடத்துக்கு மேல் ஆகும் என்கிறார்கள் நிபுணர்கள்.  

நொய்யல் ஆற்றிலும் கொள்ளை

பவானி ஆற்றைப்போலவே, நொய்யல் ஆற்றிலும் மணல் கொள்ளை படு ஜோராக நடக்கிறது. இரவு நேரங்களில் மணல் திருடும் கும்பல், மாட்டு வண்டி, கழுதை, டிராக்டர், சிறு சிறு லாரி ஆகியவற்றில் கடத்திச்சென்று, ஒரு இடத்தில் கும்பலாக சேர்த்து, அங்கிருந்து பெரிய லாரிகளில் கடத்திச்செல்கின்றனர். பல ஆண்டுகளாக தொடரும் இந்த மணல் கொள்ளையை தடுக்க எந்த அதிகாரிக்கும் முதுகெலும்பு இல்லை. கனிம வளத்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, காவல்துறை என எல்லா துறை அதிகாரிகளும் வாயடைத்து போவது ஏன்? என தெரியவில்லை.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • humanbodies23

  2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு!: புகைப்படங்கள்

 • jammu23

  ஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்!: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..!!

 • yamuna23

  இனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்!: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..!!

 • chadpuja23

  சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை!: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..!!

 • isrelviva23

  இப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா!: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்