SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கேப்டன் எங்கும் ஓட முடியாது...தொடர்ந்து விளையாட தோனி உறுதி

2020-10-25@ 03:23:19

ஷார்ஜா: ஐபிஎல் சீசனின் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை முதல் முறையாக இழந்திருந்தாலும், ‘ஒரு கேப்டன் எங்கும் ஓடிவிட முடியாது.  எஞ்சியுள்ள மூன்று லீக் ஆட்டங்களிலும் விளையாடுவேன்’ என்று சிஎஸ்கே அணி கேப்டன் எம்.எஸ்.தோனி கூறியுள்ளார். நடப்பு சாம்பியன் மும்பை  இந்தியன்ஸ் அணியுடன் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில், 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த சென்னை சூப்பர்  கிங்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து கடைசி இடத்தில் நீடிக்கிறது. மேலும், அந்த அணி முதல் முறையாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்  வாய்ப்பை பறிகொடுத்துள்ளது. ஷார்ஜாவில் நடந்த இப்போட்டியில், சென்னை அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 114 ரன் மட்டுமே எடுத்தது.

சாம் கரன் அதிகபட்சமாக 52 ரன் விளாசினார். தோனி 16, தாகூர் 11, தாஹிர் 13* ரன் எடுக்க, மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில்  வெளியேறி ஏமாற்றமளித்தனர். முன் வரிசையில் களமிறங்கிய இளம் வீரர்கள் ருதுராஜ், ஜெகதீசன் டக் அவுட்டானது, அணிக்கு பெரும் பின்னடைவை  கொடுத்தது. மும்பை பந்துவீச்சில் போல்ட் 4 ஓவரில் 1 மெய்டன் உட்பட 18 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.
பூம்ரா, ராகுல் சாஹர் தலா 2, கோல்டர் நைல் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய மும்பை அணி 12.2 ஓவரிலேயே விக்கெட் இழப்பின்றி 116  ரன் எடுத்து மிக எளிதாக வென்றது. டி காக் 46 ரன் (37 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), இஷான் கிஷண் 68 ரன்னுடன் (37 பந்து, 6 பவுண்டரி, 5 சிக்சர்)  ஆட்டமிழக்காமல் இருந்தனர். போல்ட் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இந்த படுதோல்வி குறித்து சிஎஸ்கே கேப்டன் தோனி கூறியதாவது: இது மிகுந்த வேதனை அளிக்கிறது. எங்கு தவறு நடந்தது என்பது பற்றி ஆய்வு  செய்ய வேண்டி உள்ளது. மொத்தத்தில் இந்த ஆண்டு எங்களுக்குரியதாக இல்லை. ஒரு சில போட்டிகளில் மட்டுமே பேட்டிங் மற்றும் பந்துவீச்சில்  ஒருங்கிணைந்து செயல்பட்டோம். எத்தனை விக்கெட் வித்தியாசத்தில் தோற்கிறோம் என்பது ஒரு பொருட்டே அல்ல. எல்லா வீரர்களுமே இந்த  தோல்வியால் வேதனை அடைந்துள்ளனர். ஆனால், அவர்கள் தங்களால் இயன்ற வரை சிறப்பாகப் போராடினார்கள். எல்லா சமயத்திலும் நமது  வியூகங்கள் எடுபடுவது இல்லை. 2வது போட்டியில் இருந்தே எங்களுக்கு நேரம் சரியில்லை. ராயுடுவுக்கு காயம் ஏற்பட்டது, முன்னணி வீரர்கள்  கணிசமாக ரன் குவிக்கத் தவறியது பெரும் பின்னடைவை கொடுத்தது. இதனால் நடுவரிசை வீரர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகினர்.

சரியான தொடக்கம் கிடைக்காத போதெல்லாம், நடுவரிசை பேட்ஸ்மேன்கள் தடுமாறினர். கிரிக்கெட்டில் மோசமான காலகட்டத்தில் இருந்து மீள  ஓரளவு அதிர்ஷ்டம் கை கொடுக்க வேண்டும். இந்த தொடரில் அது எங்களுக்கு கிடைக்கவே இல்லை. மோசமாக தோற்றதால் ஏற்பட்ட வலியை  நாங்கள் வெளிக்காட்டவில்லை. கடைசி 3 போட்டிகளிலும் வெற்றியை வசப்படுத்தி கவுரவமாக வெளியேற முடியும் என நம்புகிறேன். அடுத்த  ஆண்டுக்கான அணி குறித்து சிந்திக்க வேண்டிய தருணம் இது. ஒரு தெளிவான அணுகுமுறையுடன் திட்டமிட்டு வீரர்களை தேர்வு செய்ய வேண்டிய  கட்டாயத்தில் இருக்கிறோம். அதற்கு எஞ்சியுள்ள போட்டிகள் நிச்சயம் உதவும். ஒரு கேப்டனாக எங்கும் ஓடி விட முடியாது. அனைத்து லீக்  ஆட்டங்களிலும் நான் விளையாடுவேன். இவ்வாறு தோனி கூறியுள்ளார். சென்னை அணி தனது 12வது லீக் ஆட்டத்தில் இன்று மாலை ஆர்சிபி  அணியை சந்திக்கிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 29-05-2021

  29-05-2120 இன்றைய சிறப்பு படங்கள்

 • 27-05-2021

  27-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 15-05-2021

  15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 13-05-2021

  13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 11-05-2021

  11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்