SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

‘சீல்’ வச்சிருவேன்னு ஜவுளிக்கடையை மிரட்டி சொந்தபந்தங்களை கூட்டி வந்து துணிகளை அள்ளிப்போன தாசில்தார் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2020-10-25@ 02:03:43

‘‘கரன்சி வாங்கினா கண்டு பிடிச்சுடுவாங்க... ஆனா சொந்தபந்தத்தை அழைத்து பர்சேஸ் செய்தால் லஞ்ச ஒழிப்பு துறை ஒன்றும் செய்ய முடியாதுன்னு  கணக்கு போட்டு கலக்குறாராமே ஒரு வட்டாட்சியர்..’’ என்று ஆச்சர்யத்தோடு கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டால்,  அரசுத்துறையை சேர்ந்த அதிகாரிகள் காட்டில் பண மழை, பட்டாசு மழை, சுவீட்  மழையாக தான் இருக்கும்...  சிலர் கரன்சியை வைத்து ெகாண்டு மற்றவற்றை கீழ் உள்ள ஊழியர்களுக்கு கொடுத்துவிடுவாங்க... இன்னும் சிலர் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு  காலத்தில் தான் லஞ்ச ஒழிப்பு துறை நீண்ட தூக்கத்தில் இருந்து எழும்.... என்பது குறித்து தெரிந்த கில்லாடி அதிகாரிகள் வேறு ரூட்டில் பணத்தை  வாங்குவார்கள்... விஷயம் தெரியாதவர்கள் மாட்டிக் கொள்வது வழக்கம்... ஆனால், கோவை தாசில்தார் கொரோனாவை பயன்படுத்தியும் தீபாவளியை  கணக்கில் வைத்தும் களத்தில் இறங்கி இருக்காராம்... அதாவது, மாமூல் வசூலிப்பதற்கு பதிலாக தனக்கும், தனது குடும்பத்துக்கும் வேண்டிய  ெபாருட்களை அள்ளிக்குவிக்கிறார். சமீபத்தில், கோவை உப்பிலிபாளையம் மசக்காளிபாளையம் பகுதியில் கொரோனா தொற்று விதிமீறல் காரணமாக  ஒரு ஜவுளிக்கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. தண்டனை காலம் முடிந்து மீண்டும் கடை திறக்கப்பட்டது. தற்போது, இந்த ஜவுளிக்கடை செயல்பாட்டில்  உள்ளது. ஆனாலும், கொரோனா விதிமீறல் தொடர்வதாக புகார் வருகிறது. இந்த தகவல் தனது காதுக்கு எட்டியதும் கில்லாடி தாசில்தார், அரசாங்க  ஜீப்பில் அங்கு பறந்தார். இன்னொரு வாகனத்தில் குடும்ப உறவுகளை வரவழைத்தார். அனைவரும் கடைக்குள் புகுந்து, பட்டுச்சேலைகளை அள்ளி  குவித்தனர். இதைப்பார்த்து, கடை முதலாளி மிரண்டு போய்விட்டார். மீண்டும் கடையை பூட்டி, சீல் வைத்து விடுவார்கள் என்ற அச்சத்தில் எதுவும்  பேசவில்லை. எல்லாம் முடிந்தபிறகு, ‘ரொம்ப ஜாக்கிரதை..’ என அட்வைஸ் கொடுத்துவிட்டு பறந்தார் அந்த தாசில்தார். என்னா... டெக்னிக் என்று  வடிவேலு பாணியில் அங்கிருந்த தொழிலாளர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கொரோனா இருந்தா லகரம்... இல்லாட்டியும் லகரம்னு செயல்படும் மருத்துவமனை பற்றி சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து, தனியார் ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை அளிக்க அரசு அனுமதித்துள்ளது. அதே  நேரத்தில் அறிவித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், பல தனியார் ஆஸ்பத்திரிகள், அரசின்  அறிவிப்பை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கலை என்பது அறிந்த விஷயம் தான். ஆனால் மாங்கனி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பே  இல்லாதவரிடம் ஏகத்துக்கும் பில்லை தீட்டியதுதான் பெரும் கொடுமையாம். மாங்கனி மாவட்டத்தின் புறநகர் பகுதியில் இருக்கும் பிரபல தனியார்  தனியார் ஆஸ்பத்திரிக்கு, அரசு பஸ் டிரைவர் ஒருவர், அறிகுறிகள் இருப்பதால் சிகிச்சைக்காக சென்றாராம். அவருக்கு சிடி, கொரோனா டெஸ்ட் என்று  அனைத்தும் வெளியில் எடுத்தாங்களாம். இதன் முடிவில் கொரோனா இல்லை என்று ரிசல்ட் வந்ததால் டிஸ்சார்ஜ் செய்யும்படி கேட்டுக் கொண்டாராம்  டிரைவர். ஆனால் ₹95 ஆயிரத்திற்கான பில்லை கொடுத்து, இதை கட்டிவிட்டு புறப்படுங்கள் என்றதாம் தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகம். அதிர்ச்சியில்  உறைந்தவர், தனக்கு தெரிந்த சுகாதாரத்துறை அதிகாரி மூலம் பேசிய பிறகு, கட்டணத்தில் பாதி குறைக்கப்பட்டதாம். ‘தொற்று இல்லாத எனக்கு உயர்  ரக மருந்து கொடுத்ததாக சொல்லி பில்லை தீட்டியிருக்காங்க. நிஜமாகவே தொற்று இருந்திருந்தா, என் சொத்து முழுவதையும் எழுதிக்கொடுத்துட்டு  தான் வந்திருக்கணும்’ என்று புலம்பிக்கிட்டே இருக்காராம் பாதிக்கப்பட்ட டிரைவர்... ஏற்கெனவே மேலே நான் சொன்னது வருவாய் துறை கொள்ளை...  மாங்கனி மாவட்டத்தில் நடந்தது மருத்துவ கொள்ளை...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கமிஷன் தராவிட்டால் கண்டிப்பாக டிரான்ஸ்பர் தான்னு கூலாக இருக்க வேண்டிய ஏசி அனல் கக்கறாராமே, உண்மையா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கோவைக்கு சமீபத்தில் இடமாறுதலாகி வந்த ஒரு உதவி கமிஷனர் மாச மாமுல் விஷயத்தில் ரொம்பவும் கறார். உரிய பங்கு முறையாக போய்  சேராவிட்டால் தனக்கு கீழ் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மீது பாய்ந்து விடுகிறார். ஏதாவது ஒரு விஷயத்தில் சிறு குறை கண்டுபிடித்து  நசுக்கி விடுவதால், இவருக்கு கீழ் பணிபுரிய விருப்பம் இல்லாமல், பலர் இடம்மாறி ஓடுறாங்க. வசூலில் இப்படி மூழ்கி கிடந்தால், சட்டம்-ஒழுங்கை  எப்படி காப்பாற்ற முடியும்... குற்றச்செயல்களை எப்படி தடுக்க முடியும் என நேர்மையான போலீசார் சிலர் புலம்புகின்றனர். பணத்தை கொட்டினால்  குற்றறவாளிகள் ஜாலியாக நடமாடலாம் என்பது இவர்களின் லாஜிக்கில் ஒன்று... மற்றொன்று குற்றவாளிகளிடம் பறிமுதல் செய்வதில் கால் பங்கு  ஸ்டேஷன் கோட்டாவில் சேர்த்துவிடுகிறார்களாம்... இதனால் பண மழையில் அந்த ஸ்டேஷனே நடக்குதாம்...’’ என்றார் விக்கியானந்தா.
 ‘‘விஐபி பக்தர்களிடம் செல்வத்தை கறந்து செல்வந்தராகுறாங்களே கோயில் ஊழியர்கள்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ஜவுளித்துறை மாவட்டமான தாந்தோணிமலையில் தென் திருப்பதி என அழைக்கப்படும் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் உள்ளது.  சிபாரிசுகளுடன் கோயிலுக்கு வரும் விஐபிக்கள், வெளி மாநில பக்தர்களை அணுகி கல்லா கட்டி வரும் பெருமாள் பெயரை கொண்ட நபர்  செல்வந்தராகவே மாறிவிட்டாராம்... வெளிமாநிலம், பிற மாவட்டங்களில் இருந்து கோயிலுக்கு வரும் விஐபி பக்தர்களை குறி வைத்து அவர்களிடம்  பவ்யமாக பேசி கோயில் மூலவர் சிலை வரை அழைத்துச் சென்று பல்வேறு அபிஷேக ஆராதனைகளை செய்து அவர்களை அனுப்பி வைப்பதோடு,  அவர்களிடம் இருந்து பணமும் வசூலித்து விடுகிறாராம்... இந்த ஊழல் பெருச்சாளிக்கு யார் மணி கட்டுவது என்று ஊழியர்கள் புலம்பறாங்களாம்...’’  என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • jaipourelephant20

  ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

 • delhiformer20

  வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

 • nivarpondyvilupuram20

  நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

 • nivarkadaloorcmvisit20

  நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

 • nivarthirvannamali20

  திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்