SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

என்ன செய்யப் போகிறார்?

2020-10-25@ 01:21:39

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு கவர்னர் மேலும் காலம் தாழ்த்தாமல், ஒப்புதல்  வழங்க வேண்டுமென தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்த விஷயத்தில் தமிழக அரசு தரப்பில் போதிய அழுத்தம் தரப்படவில்லை  என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. மருத்துவப்படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயம் என்ற சூழல் உருவானதை தொடர்ந்து, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு  சீட் கிடைப்பது குதிரைக்கொம்பாகி விட்டது. பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் எடுத்தாலும், நீட் தேர்வில் வென்றால்தான்  மருத்துவப்படிப்பு என்ற கனவு, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நனவாகும். தற்போதைய நிலவரப்படி சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களே  அதிகமாக தேர்ச்சி பெறும் நிலை உள்ளது.

தமிழகத்தில் மட்டும் நீட் தேர்வில் அதிக கெடுபிடி காட்டுவதாகவும், மற்ற மாநிலங்களில் கெடுபிடி காட்டுவதில்லை என்றும் குற்றச்சாட்டு பரவலாக  உள்ளது. இதற்கு உதாரணமாக, வடமாநிலங்களில் நீட் தேர்வில் நடந்த ஆள் மாறாட்டத்தை குறிப்பிடலாம். தேனியில் முதல் மாணவர் ஆள்  மாறாட்டம் செய்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்து ஏராளமான மாணவர்கள் ஆள் மாறாட்டம் செய்தது  கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு  கேரளா உட்பட பல மாநிலங்களில் புரோக்கர்கள் இருப்பதும் கண்டறியப்பட்டது. இதற்காக பல லட்சங்கள் கைமாறி உள்ளன. இவர்கள் தமிழகத்தில்  தேர்வு எழுதுவதை தவிர்த்து, வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் மூலமாக மோசடி செய்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது.

இதன்மூலம் ஒரு பள்ளியில் சுமாராக படிக்கும் மாணவர் மருத்துவப்படிப்பில் சீட் பெற சில லட்சங்களை செலவழித்தால் போதும். நீட் தேர்விலும்  மோசடி செய்யலாம் என்பது தெளிவாகிறது. அதே நேரம் மாநிலக்கல்வி முறையில் சிறப்பாக படிக்கும் ஒரு அரசுப்பள்ளி மாணவன், தன் லட்சியம்  நிறைவேறுவதற்கு, நீட் தேர்வில் வென்றே ஆக வேண்டுமென்ற சூழல் உள்ளது. நடப்பாண்டில் நடந்த நீட் தேர்வில் தேனி மாணவன் ஜீவித்குமார்  அரசுப்பள்ளியளவில் முதலிடம் வென்றாலும், ஆசிரியர்கள் அந்த மாணவனுக்கு பணம் கட்டி நீட் தேர்வு பயிற்சி மையத்தில் சேர்த்துள்ளனர். இந்த  வாய்ப்பு எல்லா மாணவர்களுக்கும் கிடைத்து விடுமா என்ன?

இதை மனதில் கொண்டுதான், அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவக்கல்வியில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான  மசோதாவை, சட்டப்பேரவையில் நிறைவேற்றி, கவர்னரின் ஒப்புதலுக்கு கடந்த செப்.16ம் தேதி அனுப்பப்பட்டது. சுமார் ஒன்றரை மாதங்களை  நெருங்கியும் இதுவரை இதன்மீது கவர்னர் நடவடிக்கை எடுக்கவில்லை. உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பின்னரே, இந்த மசோதா விவகார  பைலை தூசு தட்டி உள்ளனர். இந்த வழக்கில் வரும் 29ம் தேதிக்குள், பதில் மனு தாக்கல் செய்யும்படி கவர்னரின் செயலாளரை உயர்நீதிமன்றம்  கேட்டுக் கொண்டுள்ளது.

தற்போது திமுக உள்ளிட்ட கட்சிகள், இந்த விவகாரத்தில் கவர்னர் விரைவில் முடிவெடுக்க வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுத்துள்ளன.  மசோதா விவகாரத்தில் உயர்நீதிமன்றம் தலையிட்ட பிறகே தமிழக அரசு, இந்த மசோதாவில் கவர்னர் உரிய முடிவெடுக்கும் வரை மாணவர் சேர்க்கை  தொடர்பான பணிகள் நடைபெறாது என தெரிவித்துள்ளது. மசோதா விவகாரத்தில் தமிழக அரசு போதிய அழுத்தம் காட்டவில்லை என்பதையே இது  காட்டுகிறது. கவர்னரை சந்தித்து வந்த அமைச்சர்களும் மழுப்பலாகவே பதில் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் அடுத்தடுத்து கூடுதல்  மருத்துவக்கல்லூரிகள் வர உள்ள நிலையில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஒரு அற்புத வாய்ப்பான இந்த மசோதாவுக்கு, கவர்னர் விரைவில் ஒப்புதல்  வழங்க வேண்டுமென்பதே தமிழக மக்களின் விருப்பமாகும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • humanbodies23

  2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு!: புகைப்படங்கள்

 • jammu23

  ஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்!: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..!!

 • yamuna23

  இனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்!: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..!!

 • chadpuja23

  சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை!: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..!!

 • isrelviva23

  இப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா!: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்