SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மார்ச்1 முதல் ஆகஸ்ட் 31வரையிலான 6 மாதத்திற்கு வட்டிக்கு வட்டி இல்லை : உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்று மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

2020-10-24@ 14:52:18

புதுடெல்லி,:கொரோனா நோய் தொற்றை அடிப்படையாகக் கொண்டு வங்கிக் கடன் வாங்கியோர்க்கு கடந்த மார்ச் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 31ம் வரையிலான ஆறு மாத காலத்திற்கு வட்டிக்கு வட்டி இல்லை என மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் விதிக்கப்பட்ட முழு ஊரடங்கை அடிப்படையாகக் கொண்டு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் வாங்கிய கடனுக்கான மாதத்தவணையை திருப்பி செலுத்துவதில் இருந்து கடந்த மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் 31 வரை 6 மாதம் மத்திய அரசு அவகாசம் வழங்கியது. இருப்பினும் இந்த காலக்கட்டதில்  மாதத்தவணை செலுத்ததாதவர்களுக்கு வட்டிக்கு வட்டி விதிக்கப்படும் என்று வங்கிகள் அறிவித்தன. இதனால் சலுகையை பயன்படுத்தியவர்கள் அனைவரும் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகினார்கள். இதையடுத்து மாத தவணை தள்ளிவைப்பு சலுகையை பயன்படுத்தியவர்களுக்கு வட்டிக்கு வட்டி விதிக்கப்படும் நடைமுயை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இதுகுறித்து மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து ரிசர்வ் வங்கி தரப்பு பதிலில்,'காமாத் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வழங்கப்பட்ட ஆறு மாத கால இ.எம்.ஐ தடைக்காலத்தில் ரூ 2 கோடி வரையிலான அனைத்து கடன்களுக்குமான கூட்டு வட்டியை தள்ளுபடி செய்ய ஒப்புக்கொள்வதாக தெரிவித்த மத்திய அரசின் அறிவிப்பை ஏற்றுகொள்கிறோம். ஆனால் வங்கிக் கடன் தவணைகள் ஒத்திவைப்பு காலத்தை 6 மாதத்திற்கு மேல் நீட்டிப்பது சாத்தியமில்லை. அதேப்போன்று கூடுதல் புதிய சலுகை என்பதும் மேற்கொண்டு வழங்க முடியாது. இதனால் கடன் வாங்கியவர், வாங்குபர் ஆகியோரின் நடத்தை முற்றிலும் பாதிக்கும் விதமாக அமைந்து விடும். மேலும் இதனால் பொருளாதார குற்றங்கள் மற்றும் அதுசார்ந்த அபாயங்களை ஏற்படுத்தி விடும் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை. முக்கியமாக இதுபோன்ற நவடிக்கை நாட்டின் பொருளாதாக பலவீனத்தை ஏற்படுத்தி விடும். இதில் பாரபட்சம் இல்லாமல் சிறு, குறு மற்றும் பெருங்கடன் என வாங்குபர்கள் யாராக இருந்தாலும் அவர்களால் கடன் கலாச்சார தாக்கங்கள் ஏற்படும் விதமாக அமைந்து விடும் என குறிப்பிடப்பட்டது.

இதையடுத்து நடந்த விசாரணையின் போது,'இந்த விவகாரத்தில் வட்டிக்கு வட்டி முழுமையாக தள்ளுபடி செய்வது குறித்து ஏன் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி தரப்பில் யோசிக்கவில்லை. வேண்டாம் என விட்டுவிட்டீர்களா? என்பது புரியவில்லை. இதில் ரூ.2 கோடி வரையிலான கடன்களுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்ய தயார் என சொன்னீர்கள், ஆனால் அதனையும் உடனடியாக நடைமுறைப் படுத்தவில்லை. இதுபோன்ற காரணங்களை தெரிவிக்க தான் உங்களுக்கு மாதக் கணக்கில் கால அவகாசம் தேவைப்படுகிறதா?.
மேலும் இந்த விவகாரத்தில் மக்கள் மற்றும் ஒரு சாதாரண மனிதனின் அவநிலை என்பது உங்களுக்கு புரியவில்லையா. கொஞ்சம் அதனை நினைத்துப் பாருங்கள். இதுதொடர்பாக மத்திய அரசு, ரிசர்வ் வங்கி ஆகியோர் தரப்பில் ஒரு முடிவெடுத்து 10 நாட்களுக்கு மேல் ஆகிறது. ஆனால் அதுதொடர்பான உத்தரவை வங்கிகளுக்கு பிறப்பிக்காதது ஏன். இனி வரும் காலங்களில் தீபாவளி பண்டிகை உட்பட அனைத்து விழாக்காலங்களும் வரவுள்ளது. இதில் நாட்டின் ஒரு சாதாரண குடிமகனின் மகிழ்ச்சி என்பது நீங்கள் மேற்கண்ட திட்டத்தை விரைவில் நடைமுறைப் படுத்துவதில் தான் உள்ளது என மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், வழக்கை நவம்பர் 2ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும், அதற்குள் இந்த விவகாரத்தில் ஒரு பொருத்தமான மற்றும் தீர்க்கமான முடிவை எடுத்து மக்களின் கவலையை கருத்தில் கொண்டு திட்டத்தை உடனடியாக செயல்படுத்தி விடுவீர்கள் என நீதிமன்றம் நம்புகிறது என கடந்த 14ம் தேதி உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடிப்படையாகக் கொண்டு மேற்கண்ட விவகாரத்தில் மத்திய நிதி அமைச்சகம் தரப்பில் ஒரு அதிரடி அறிவிப்பு  வெளியிடப்பட்டுள்ளது. அதில்,'அரசாங்கத்தால் குறிப்பிடப்பட்ட வகைகளுக்கு கடன் வாங்குபவர் இ.எம்.ஐ தடைக்காலத்தைப் பயன்படுத்தினாரா என்பதைப் பொருட்படுத்தாமல் 2 கோடிக்கு மிகாமல் கடன் பெற்ற அனைவருக்கும் கடன் மீதான வட்டிக்கு வட்டி வசூல் செய்வதை தள்ளுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக வாடிக்கையாளர்கள் வாங்கிய சிறு குறு, கல்வி, வீட்டுவசதி, நுகர்வோர் பொருட்கள், வாகன கடன்கள், கிரெடிட் கார்டு மற்றும் தனிநபர் கடன் என அனைத்து நிலுவைகளுக்கும் இந்த வட்டி தள்ளுபடி என்பது பொருந்தும். இது கடந்த மார்ச் 1ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 31ம் தேதி வரையிலான கடன்களுக்கு மட்டுமே ஆகும். இதில் 6 மாதத்திற்கு வங்கியின் சட்ட விதிகளின் படி முறையாக தவணையை திருப்பி செலுத்தியவர்களுக்கு கூடுதல் வட்டிக்கு இணையான தொகை திருப்பி அளிக்கப்படும். இதுகுறித்த விவரங்கள் அடங்கிய அறிவிப்பாணை நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற தொற்றுநோய் சமயத்தில் வட்டி தள்ளுபடி மூலம் ஏற்படும் மக்களின் சுமையை அரசாங்கமே ஏற்பது தான் ஒரே தீர்வாக இருக்கக்கூடும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • jaipourelephant20

  ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

 • delhiformer20

  வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

 • nivarpondyvilupuram20

  நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

 • nivarkadaloorcmvisit20

  நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

 • nivarthirvannamali20

  திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்