SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நேரடி விவாதத்தில் டிரம்ப் - பிடென் மோதல்: சீனாவிடம் பணம் வாங்கினியா?- டிரம்ப்: என்ன பணம் வாங்கினியா? - பிடென்

2020-10-24@ 00:55:20

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான, டிரம்ப்-பிடென் இடையிலான இறுதி கட்ட விவாதத்தில் கொரோனா, குடியுரிமை சட்டம், இனவெறி, பருவநிலை மாற்றம் உள்ளிட்டவை குறித்து அனல் பறக்க விவாதிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த மாதம் 3ம் தேதி நடைபெற உள்ளது. இதில், குடியரசுக் கட்சி சார்பில் மீண்டும் அதிபர் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடெனும் போட்டியிடுகின்றனர். அதிபர் வேட்பாளர்களுக்கு இடையிலான முதல்  நேரடி விவாத  நிகழ்ச்சி ஒகியோவில் உள்ள கிளிவ்லேண்டில் கடந்த மாதம் 29ம் தேதி நடந்தது. முதல் விவாதத்தின் போது, இருவரும் தனிப்பட்ட முறையில் தனிநபர், குடும்பத்தை தாக்கிப் பேசினர். இதில், ஜோ பிடெனை பேச விடாமல், டிரம்ப் தொடர்ந்து குறுக்கிட்டார்.  பிறகு, டிரம்ப் கொரோனா பாதிப்புக்குள்ளாகி, வால்டர் ரீட் ராணுவ  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியதால், 2வது நேரடி விவாதம் காணொலி மூலம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், நேரடி விவாதத்தில் மட்டுமே பங்கேற்பேன் என்று டிரம்ப் பிடிவாதம் பிடித்ததால், அந்நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், 3வது மற்றும் இறுதி கட்ட நேரடி விவாதம் டென்னிசி மாகாணத்தில் உள்ள நாஷ்வில்லே நகரில் நேற்று முன்தினம் நடந்தது. இதற்கு கிறிசென் வெல்கர் நடுவராக இருந்தார். இந்த இறுதிக்கட்ட விவாதம் 15 நிமிட கால அளவில், 6 பிரிவுகளாக நடைபெற்றது. முதல் 2 நிமிடங்கள் இருவரும் தடையின்றி பேச அனுமதிக்கப்பட்டனர். மேலும், ஒருவர் பேசும் போது மற்றவரின் மைக் அணைக்கப்பட்டது.

இதில் முதலில் பேசிய அதிபர் டிரம்ப் கூறியதாவது:
* கொரோனா தொற்று அமெரிக்காவில் பரவ சீனாவே முழு காரணம். ஆனாலும், அமெரிக்கா இந்த நோய் தொற்றை திறம்பட கையாண்டதாக பல நாடுகள் பாராட்டி உள்ளன. இதற்கான தடுப்பு மருந்து விரைவில் கண்டுபிடிக்கப்பட்டதும், ராணுவத்தினர் மூலம் அனைவருக்கும் கிடைக்க செய்யப்படும். இதற்காக 10 கோடி தடுப்பு மருந்துகள் கொள்முதல் செய்யப்பட உள்ளது.
* கடந்த 35 வருடங்களில் அமெரிக்கா வெளியிடும் கார்பன் அளவு சரியாக உள்ளது. சீனாவை பாருங்கள் அவ்வளவு அசுத்தமாக உள்ளது, இந்தியா, சீனா மற்றும் ரஷ்யாவின் காற்று அசுத்தமானது. இது குறித்து அவை கவலைப்படுவதில்லை. கோடிக்கணக்கான டாலர்களை இழப்பதை தவிர்க்கவே, பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறினேன்.
* கருப்பின மக்களுக்காக என்னை போல் வேறு யாரும் உதவியது கிடையாது. ஆபிரகாம் லிங்கனை தவிர, நான் செய்தவற்றை போல வேறு எந்தவொரு முன்னாள் அதிபரும் செய்தது கிடையாது.
* குடியுரிமை சட்டத்தை பொருத்தவரை, எல்லையில் பெற்றோரை பிரிந்த 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் நன்றாக பராமரித்து, பாதுகாக்கப்பட்டார்கள். மிகவும் சுத்தமான இடத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
* பண விஷயத்தில் சீனா, உக்ரைன், ரஷ்யாவிடம் இருந்து நான் ஒரு பைசா கூட பெற்றதில்லை. ஆனால், நீங்கள் வாங்கி இருக்கிறீர்கள். நீங்கள் இந்த நாடுகளிடம் இருந்து ரூ. 2,590 கோடி வாங்கி உள்ளீர்கள்.
* இந்த தேர்தல் வெற்றி அமெரிக்காவை ஒருங்கிணைக்க உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கு பதில் அளித்து பிடென் பேசியதாவது:
* கொரோனாவை முறையாக கையாள அரசு நிர்வாகம் தவறிவிட்டது. இதனை தடுப்பதற்கான திட்டம் எதுவும் அரசிடம் இல்லை. அடுத்தாண்டு ஜூன் மாதத்துக்குள் கொரோனா தடுப்பு மருந்து வழங்க முடியாது. கேட்டால், மக்கள் கொரோனாவுடன் வாழ பழகி விட்டார்கள், சாக பழகி விட்டார்கள் என்று பேசுகிறார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இதனை ஒழிப்பதற்கு எங்களிடம் திட்டம் உள்ளது.
*  அமெரிக்க வரலாற்றிலேயே இனவாதம் பிடித்த இவரை போன்ற அதிபரை பார்த்ததில்லை. ஒவ்வொரு இனவெறி தாக்குதலின் போதும் எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுபவர்.
*  இவருடைய குடியுரிமை கொள்கைகளினால் குடும்பங்கள் பிரிக்கப்படுகின்றன. எல்லையில் பெற்றோரை பிரிந்து குழந்தைகள் வாடுகின்றனர். இது அமெரிக்காவின் நிலைப்பாட்டிற்கு எதிரானது.
* சீனா பற்றி நீங்கள் கூறிய விவகாரத்தில் எனது மகன் பணம் பெறவில்லை. சீனாவிடம் இருந்து பணம் பெற்ற ஒரே நபர் நீங்கள்தான். நீங்கள் மட்டும்தான். வேறு யாரும் சீனாவிடம் இருந்து பணம் வாங்கவில்லை.
* நாட்டின் தலையெழுத்து வாக்கு சீட்டில் உள்ளது.
இவ்வாறு பிடென் பதிலடி கொடுத்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • humanbodies23

  2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு!: புகைப்படங்கள்

 • jammu23

  ஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்!: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..!!

 • yamuna23

  இனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்!: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..!!

 • chadpuja23

  சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை!: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..!!

 • isrelviva23

  இப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா!: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்