SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விவிஐபி மாவட்டத்தில் இருக்கு... ஆனா இல்லை ரகத்தில் வெங்காயத்துக்கு மக்கள் அலைந்த கதையை சொல்கிறார்: wiki யானந்தா

2020-10-24@ 00:38:54

‘‘வெங்காயத்தின் விலை எகிறிப்போயிட்டிருக்கே..’’ என கவலையுடன் கேட்டார் பீட்டர் மாமா.
‘‘ஆமா.. இதனால பண்ணை பசுமை கடைகளில் கிலோ 45க்கு விற்கப்படும் என்று அமைச்சர் அறிவிச்சது மாநகர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஓரளவு ஆறுதலாக இருந்தது. மாங்கனி மாவட்டத்தில், இல்லாத பண்ணை பசுமை கடையை  தேடி, பப்ளிக் அலைஞ்சது பரிதவிப்பின் உச்சமாக மாறிப்போச்சு. குறைஞ்ச விலைக்கு வெங்காயம் வாங்கலாம் என்று பண்ணை பசுமை கடையை நெட்டில் தேடியதாம் பப்ளிக். அரசு அதிகாரிகள் அதிகம் வசிக்கும் அய்யந்திருமாளிகை பகுதியில் கடையிருக்கு என்று நெட்டில் காட்டவே, கூட்டம் படையெடுத்ததாம். ஆனால் அங்கு போன பிறகு தான், இல்லாத கடைக்கான அட்ரஸ் என்பது தெரியவந்ததாம். விஷயம் வைரலாகவே அதிகாரிகள், அவசரமாக பள்ளப்பட்டியில் ஒரு கடை திறந்தாங்களாம். ஆனால் இந்த கடையில் எல்லா காய்கறிகளும் இருக்காம். வெங்காயம் மட்டும் இல்லை என்பதுதான் ட்விஸ்ட். இப்போ, மாங்கனி மாநகர மக்களிடம் ‘பண்ணை பசுமை கடை இருக்கு... ஆனா... இல்லை’ என்ற வாசகமே டிரென்டிங் ஆக மாறியிருக்காம்’’ என்றார் விக்கியானந்தா.
 ‘‘காவல் அதிகாரி ஒருத்தருக்கு சிறப்பான கவனிப்பு இல்லைனு காண்டு ஆனாராமே.. அது என்ன விஷயம்..’’ என்று அடுத்த கேள்வியை கேட்டார் பீட்டர் மாமா.
 ‘‘கடந்த வாரம் தமிழக முதல்வரின் தூத்துக்குடி வருகையை ஒட்டி பந்தோபஸ்து பணிகளை கவனிக்க ‘ராஜா’ போன்று ‘மிடுக்கான’ அந்த சிறப்பு போலீஸ் அதிகாரி அல்வா மாவட்டத்திற்கு வந்திருந்தாராம். ஆயுதப்படை கெஸ்ட் ஹவுசில் தங்க விருப்பப்பட்ட அந்த அதிகாரியை, சில காரணங்களை சுட்டிக்காட்டி நைசாக நெல்லை சந்திப்பு காவலர் குடியிருப்பு கெஸ்ட் ஹவுசில் தங்க வைத்து விட்டனராம். உயர் அதிகாரிகள் எல்லோரும் முதல்வர் வருகைக்கான ஏற்பாடை கவனிக்கச் சென்றதால் இந்த அதிகாரியை வரவேற்க இன்ஸ்பெக்டர் தலைமையிலான அதிகாரிகள் கூட வரவில்லையாம். நெடுஞ்சாலைத்துறை ரோந்து வாகனத்தில் அதிகாரியை கெஸ்ட் ஹவுசில் கொண்டு போய் காவலர்கள் விட்டனராம். இதனால் அந்த அதிகாரி அடைந்த கோபத்திற்கு அளவே இல்லையாம். ‘போலீசார் அனைவரும் சோம்பேறியாகிவிட்டனர். முன்பு மாதிரி உங்களுக்கெல்லாம் பேரேடு நடத்தினால்தான் சொகுசு குறையும்’ என திட்டி விட்டு, சென்னை சென்று விட்டாராம். அங்கு சென்றவுடன் தமிழகத்தில் உயர்ந்த சிறப்பு பதவி கிடைக்க, புதிய உத்தரவை பிறப்பித்து விட்டாராம். அனைத்து காவலர்களும் சனிக்கிழமை தோறும் ஏதாவது ஒரு மைதானத்தில் ஆயுத அணிவகுப்பு நடத்த கறாராக கூறிவிட்டாராம். கொரோனா காலத்தில் இப்படி ஒரு உத்தரவா என மாவட்டங்கள் தோறும் போலீசார் புலம்புகின்றனர்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தமிழக அரசு வேளாண்மை பொறியியல் துறையில என்ன வில்லங்கம்..’’
‘‘இந்த துறை உதவி செயற்பொறியாளர் பதவி உயர்வு செப்டம்பர் 2016ல் உச்ச நீதிமன்ற தீர்ப்பு மற்றும் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக 102 உதவி பொறியாளர்களுக்கு வழங்கப்பட்டது. உதவி செயற்பொறியாளர் பதவி உயர்வினை எதிர்த்து பாதிக்கப்பட்ட பொறியாளர்கள் தொடர்ந்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் பட்டியலிடப்பட்டு இறுதி விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் நீதிமன்றத்தின் தசரா விடுமுறை காலத்தை பயன்படுத்தி, தலைமை பொறியாளர் துறையின் உயர் அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுத்து, வழக்கில் தொடர்புடைய நீதிமன்ற அவமதிப்புக்கு உட்பட்ட பொறியாளர்களுக்கு செயற்பொறியாளர் மற்றும் கண்காணிப்பு பொறியாளர் பதவி உயர்வு வழங்கிட தவறான கருத்துருவினை அரசுக்கு அனுப்பி வைத்து, அரசு வேளாண்மை துறை உயர் அதிகாரியின் ஒப்புதலை விரைவாக பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம். தற்போது நிலுவையில் இருக்கும் வழக்குகள் மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை கருத்தில் கொண்டு செயற்பொறியாளர் மற்றும் கண்காணிப்பு பொறியாளர் பதவி உயர்வு வழங்கக்கூடாது என்று பாதிக்கப்பட்ட பொறியாளர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்’’ என்றார் விக்கியானந்தா.
 ‘‘காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பேரூராட்சி செயல் அலுவலர்கள் தங்களது பெயர்களிலும், குடும்பத்தாரின் பெயர்களிலும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கி குவித்து வருகிறார்களாமே...’’ என்று ஆச்சர்யத்தோடு கேட்டார் பீட்டர் மாமா.
 ‘‘உண்மைதான்.. ஆனால் இதுபற்றிய தகவல்களை அரசுக்கு தெரியப்படுத்தவில்லை. அரசு ஊழியர்கள் அசையும் மற்றும் அசையா சொத்துகள் வாங்கும்போது அரசுக்கு முறைப்படி தெரிவிக்க வேண்டும் என்று விதி உள்ளது. ஆனால் இந்த விதி முற்றிலுமாக மீறப்பட்டுள்ளது. மேலும் இவற்றை மூடி மறைக்க குணமான பெயர் கொண்ட  செயல் அலுவலர் அனைவரிடமும் வசூலில் ஈடுபட்டு உள்ளார். இதுவரை ஒரு கோடிக்கும் மேல் ரூபாய் வசூல் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன’’ என்றார் விக்கியானந்தா.         


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • rainpurevi111

  தமிழகத்தை மிரட்டும் புரெவி புயல்... கொட்டும் மழை; கொந்தளிக்கும் கடல் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்!!

 • radish3

  புவியீர்ப்பு சக்தியில்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கியை வெற்றிகரமாக வளர்த்த நாசா விஞ்ஞானிகள்!: புகைப்படங்கள்

 • farmers_proteeee11

  மத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து வீறுகொண்டெழுந்த விவசாயிகள்... டெல்லியில் 8வது நாளாக ஆவேச கோஷங்களை எழுப்பி போராட்டம்!!

 • 03-12-2020

  03-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 300kg11

  பிரான்சில் 300 கிலோ எடையுள்ள நபரை, வீட்டினை உடைத்து கிரேன் மூலமாக மீட்ட மீட்புப் படையினர்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்