SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வீட்டை காலி செய்யும்போது பல லட்சம் மதிப்பு மாநகராட்சி பொருட்களை கையோடு எடுத்து சென்ற அதிகாரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2020-10-22@ 00:39:20

‘‘கலெக்டர், கலெக்டர் அலுவலகம் பெயரில் ஏமாற்றிய அரசியல் கட்சி பிரமுகரை பற்றிச் சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘குமரி மாவட்ட கலெக்டர் பெயரில் இ-மெயில் போலி ஐடி ஒன்றை தயாரித்து அதன் மூலம் அதிகாரிகளிடம் கேள்விகளை கேட்டு மெயில் அனுப்பிய விவகாரம் கலெக்டர் கவனத்திற்கு வந்ததாம். இதையடுத்து நேசமணிநகர் காவல் நிலையத்திற்கு அலுவலக ஊழியர் தரப்பில் ஆன்லைனில் புகார் அளித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் சிறைபறவையின் கட்சியில் உள்ள பெண் நிர்வாகி ஒருவர், ‘நான் கலெக்டர் அலுவலகத்தில் வேலை பார்க்கிறேன், கலெக்டர் வாயிலாக எங்கள் கட்சியின் ஏற்பாட்டில் தனி நபர் ஒருவருக்கு ரூ.10 லட்சம் வரை லோன் எடுத்து தருவேன். அதற்கு 2.5 லட்சம் பங்கு தொகையாக கட்ட வேண்டும் என்று கூறி ரூ.74 லட்சம் வரை மோசடி செய்துள்ளாராம். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் அழுது கொண்டே கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுத்தாங்களாம்... வெளிநபர்கள் தான் மோசடி செய்வார்கள் என்றால்... நம்ம அலுவலகத்தின் மீதே புகாரா என்று அதிகாரிகள் அதிர்ந்து போய் இருக்கிறார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘டிரான்ஸ்பரில் பங்களாவை காலி செய்துவிட்டு வீட்டை சுத்தமாக துடைத்து விட்டு சென்ற அதிகாரியிடம் மாநகராட்சிக்கு சொந்தமான பொருளை கேட்பது எப்படி என மண்டையை பிய்த்து கொண்டு உள்ளார்களாமே  ஊழியர்கள்...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கோவை மாநகராட்சியில் 2 ஆண்டுக்கு மேலாக கமிஷனராக பணியாற்றியவரை கடந்த மாசத்துக்கு முன்னாடி மாத்திட்டாங்க. நகரமைப்பு பிரிவில் கட்டிட வரன்முறை, பைல் பெண்டிங், கொரோனா பணி முடக்கம் என ஏகப்பட்ட விவகாரத்தில் இவர் சிக்கியதால் ‘டிரான்ஸ்பர்’ செஞ்சுட்டாங்க. சமீபத்தில் அவர் வசித்து வந்த ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பங்களாவை காலி செஞ்சுட்டாரு.

வீட்டை பூட்டி சாவி ஒப்படைச்ச பின்னாடி புது கமிஷனருக்காக வீட்டை தயார் செய்ய போன மாநகராட்சி அதிகாரிகள் அதிர்ந்து போயிட்டாங்க. ஏன்னா வீட்டில் இருந்த மாநகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான 7 ஏசி மெசின், 10 பேன், வாட்டர் ஹீட்டர், சிம்னி, டேபிள், சேர் என எல்லாத்தையும் மாஜி கமிஷனரு எடுத்துக்கிட்டு போயிட்டாராம். எப்படி அந்த ‘ஐ.ஏ.எஸ்.’ அதிகாரிகிட்ட இந்த விவரத்தை கேட்கிறதுன்னு தயக்கத்தோட இருந்த மாநகராட்சி அதிகாரிகள், சென்னை நகராட்சி நிர்வாக கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் சொல்லியிருக்காங்க. பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களை கமிஷனர் திரும்ப ஒப்படைக்க சொல்லி கேட்டிருக்காங்க. ஆனா அவரு அதை பத்தி எதுவும் கண்டுக்காம இருக்கிறாராம். மாநகராட்சி கமிஷனர் பங்களா பராமரிப்பு பணி, பொருட்கள் தொடர்பாக தணிக்கை ஆய்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதில் மாஜி கமிஷனர் சுருட்டிய பொருட்களை எப்படி கணக்கு காட்டுவது? என தெரியாமல் மாநகராட்சி மேற்கு மண்டல அதிகாரிகள் விழி பிதுங்கி தவிக்கிறாங்க...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மாங்கனி மாவட்டத்துல எல்லாம் தலைகீழாக நடக்குது போல...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மாங்கனி மாவட்ட கார்ப்பரேசன்ல இருக்குற 60 வார்டுலையும் குப்பை அள்ளுவதற்கு 225 பேட்டரி வண்டிங்க வாங்கினாங்க. டீசல் செலவை குறைக்கணும் என்பது தான், பேட்டரி வண்டி வாங்குனதோட முக்கிய நோக்கமாம். ஆனா, இந்த வண்டி வந்த பிறகும், டீசல் செலவுன்னு மாசத்துக்கு ரூ.30 லட்சம் பில் வந்ததாம். இதுபற்றி என்னான்னு கேட்டப்போ, பெரிய வண்டி மூலமாக குப்பைய அள்ளுறோம்னு பதில் வந்திருக்காம். ஆனா உண்மையாகவே, வண்டிய நகர்த்தாம டீசல் போட்டதுக்கான பில்லை போலியா தயாரிக்க, கார்ப்பரேசன்ல ஹெல்த் இன்ஸ்பெக்டருங்க ஆதரவோடு பெரிய நெட்வொர்க் இயங்குதாம். ஒவ்வொரு மண்டலத்துலயும் இருக்குற சுகாதார ஆபீசருங்கதான், உயர் அதிகாரிகள கவனிச்சுக்கிட்டு, இந்த வேலைய செய்யறாங்கன்னு சில அதிகாரிங்களே புலம்புறாங்களாம்... கேட்க வேண்டிய அதிகாரி மவுனம் சாதிப்பது தான் இதுல ஹைலைட்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ஹனிபீ மாவட்டத்துல பால்ய விவாகம் நிறைய நடக்குதாமே, யாரும் கண்டுகொள்ளவில்லையா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கொரோனா ஊரடங்கின்போது, ஹனிபீ மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் அதிகரித்துள்ளதாம். இதற்கு குழந்தைகள் பாதுகாப்பு துறையில களப்பணியாளர்கள் பற்றாக்குறைதான் காரணமாம். ஹனிபீ  மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்படுகிறது... இங்கே தலைமை அதிகாரி மற்றும் நிர்வாக அலுவலர்கள் மட்டுமே இருக்காங்களாம்... இதனால் மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளதாம்... குழந்தைகளுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்து விசாரிக்க குழந்தைகள் நலக்குழு ஒன்றும் உள்ளது.

இந்தக் குழுவிற்கும் பாதுகாப்புக் குழுவுக்கும் ஒருங்கிணைப்பு இல்லாத நிலை தொடர்கிறதாம்... இந்த மாதம் தேவதானப்பட்டி அருகே ஒரு கிராமத்தில் ஒரு வருடத்திற்கு முன்பு குழந்தை திருமணம் முடிந்து, அந்த சிறுமி குழந்தையை பெற்றெடுத்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது. இதற்கு தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள கொடுமையும் நடந்துள்ளது. எனவே, களப்பணியாளர்களை அதிகரித்து, தேனி மாவட்டத்தில் குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளதாம்...’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • rainpurevi111

  தமிழகத்தை மிரட்டும் புரெவி புயல்... கொட்டும் மழை; கொந்தளிக்கும் கடல் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்!!

 • radish3

  புவியீர்ப்பு சக்தியில்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கியை வெற்றிகரமாக வளர்த்த நாசா விஞ்ஞானிகள்!: புகைப்படங்கள்

 • farmers_proteeee11

  மத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து வீறுகொண்டெழுந்த விவசாயிகள்... டெல்லியில் 8வது நாளாக ஆவேச கோஷங்களை எழுப்பி போராட்டம்!!

 • 03-12-2020

  03-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 300kg11

  பிரான்சில் 300 கிலோ எடையுள்ள நபரை, வீட்டினை உடைத்து கிரேன் மூலமாக மீட்ட மீட்புப் படையினர்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்