SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இவ்வளவு ஓவியங்களையும் வருஷக்கணக்கில் சிறப்புடன் வரைந்தது முதலும் கடைசியுமாக சங்கர்தான்!

2020-10-21@ 14:17:00

நன்றி குங்குமம்

ஓவியர் கே.சி.சிவசங்கரனை நினைவுகூறுகிறார் மணியம் செல்வன்

‘அம்புலிமாமா’வை அலங்கரித்த ஓவியர் கே.சி.சிவசங்கரன் மறைவு என்ற செய்தி யைக் கேட்டவர்கள் மனம் துணுக்குறாமல் இருந்திருக்க முடியாது. ஓவியப் பரப்பில், காலத்தின் கைகளில் சதா அதிர்ந்து கொண்டே இருந்த பெரும் செல்வம் அவர். தோளில் தொங்கும் உடலோடு கம்பீர நடை போடும் விக்ரமாதித்தன், கீழே சீறும் பாம்பு, பயமுறுத்தும் மண்டை ஓடுகள், மரக்கிளைகளில் தீர்க்கமாக உட்கார்ந்து வெறிக்கும் ஆந்தைகள், பளபளத்து கூர்மையில் மிரட்டும் வாள்… ‘தன் முயற்சியில் சற்றும் தளராத விக்ரமாதித்தன்...’ என ஆரம்பிக்கும் அடுத்தடுத்த வரிகள். மறக்க முடியுமா மக்களே!பெரும் சிறப்புடைய அவருடன் பேசிப் பழகிய ஓவியர் மணியம் செல்வன் அவரது சிறப்புகளை நம்முடன் பகிர்ந்தார். சங்கர் அவர்களின் ஓவியம், சிறுவர் இலக்கியத்திற்கு அவர் அளித்த உரம், மனப்பக்குவம், அவர் கோடுகள், எளிமையான வாழ்க்கை பற்றி பரந்து விரிந்தது அந்த உரையாடல். அய்யா அவர்களை என் சிறுவயதிலிருந்து அறிவேன். சென்னை ஓவியக் கல்லூரியில் படித்தார். அப்பா மணியம் அவர்களின் மேல் அவருக்கு தனித்த பிரியமும், ஈடுபாடும் இருந்தது. ஆரம்பத்தில் ‘கண்ணன்’ பத்திரிகையில் இருந்து விட்டு ‘அம்புலிமாமா'வில் இணைந்தார். மீதி பணிக்காலம் முழுமையும் அங்கே இருந்து வேலை செய்ய அவருக்குப் பிடித்திருந்தது. அவர் ‘அம்புலிமாமா’வின் ஒவ்வொரு பக்கத்தையும் அணிகலன் போல் அலங்கரித்தார். அதை விரும்பிச் செய்தார். சிறு குழந்தைகளுக்கான புனைவு உலகம் அவருக்கு நன்றாகக் கை வந்தது. ஓவியர்கள் நிறையப்பேர் இருந்தார்கள். ஆனால், அவர் பாணி வித்தியாசமானது. படக்கதையை சினிமா பார்ப்பது போல் சுவாரஸ்யப்படுத்தினார். அவர் ஸ்டைல் பிரதி எடுக்க முடியாதது. பழமையின் வண்ணம் தொட்டு, அதிலிருந்து பிசகாமல் ஓவியங்களை வரைந்தார்.

ஒரு மாத இதழில், வார இதழ் போன்ற உழைப்பை வெளிப்படுத்தி வரைந்தது பெரும் சாதனை. புரவிகள் பிடரி சிலிர்க்க, பெரும் சிகை பரக்க இளவரசர்கள் மின்னல் போல் அதில் பறந்து மறைந்தார்கள். சிறுவர்கள் பால்மணம் மாறாத முகத்தில் வந்து கதை சொன்னார்கள். பழமையான ஓவியங்களில் பாரம்பர்யத்தையும் கொண்டு வரைந்தார். அவரது இளவரசிகள் நம் நேசிப்புக்கு உள்ளானார்கள். தம் மாசற்ற அழகில் அவர்கள் இளவரசர்களை மட்டுமல்ல, நம்மையும் மயக்கினார்கள். நடிகர் சிவகுமார், அவர் வீடு தேடிச் சென்று உரையாடிய பிறகு ‘அகரம்’ ஃபவுண்டேஷனில் விழா நடத்தி சிறப்பு செய்தார். இளம் வயதிலேயே அவர் ஓவியத்தை இனம் கண்டு கொண்டார். மொத்தம் 14 மொழிகளில் ‘அம்புலிமாமா’ வெளியானதால் அவர் புகழ் கொடிகட்டிப் பறந்தது. ஆனால், அது எதையும் தலைக்கேற்றாமல் அவரால் இருக்க முடிந்தது. விக்ரமாதித்தனின் பிடியிலிருந்து வெளியேறிச் செல்லும் வேதாளத்தை நாம் பயமில்லாமல் நேசத்துடன் பார்த்தோம். ‘அம்புலிமாமா’வின் ஒவ்வொரு பக்கத்தையும் ஓவியங்களோடு அவர் கொண்டு வந்தது ஆச்சர்யமானது. கதையின் உயிர்த்தன்மைக்கு படங்கள் உறுதுணையாக இருந்தன. 1984ல் ராமகிருஷ்ண மடம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அவர் ‘ராமகிருஷ்ண விஜயத்'தில் ஆன்மீகத்திற்கான ஓவியப் பணியைச் செய்தார். அது அவரின் வேறொரு பக்கமாக அமைந்தது. எந்த வடிவத்திலும் அவரால் மனதைப் போட்டு வேலை செய்ய முடிந்தது. எத்தனையோ வருடங்களாக ஒரு நிறுவனத்தில் அவர் பணிபுரிவது பற்றி பேசியிருக்கிறேன். ‘நான் அதைப்பற்றி யோசித்ததேஇல்லை.

படம் மட்டும்தான் போட்டுக் கொண்டிருந்தேன். வாழ்வில் எனக்கு குறைந்தபட்ச தேவைகள்தான். அதுவே எனக்கு போதுமானதாக இருந்தது. எந்த வருத்தங்களும் இல்லை’ என்றார். பிள்ளைகள் அவரை நல்ல படியாக கவனித்துக் கொண்டார்கள். மகள் வீட்டில் இருந்தார். மகன்கள் வெளிநாட்டில் இருந்தாலும், அப்பா, அம்மா மீதான அக்கறையைக் கைவிடவில்லை. இவ்வளவு ஓவியங்களையும் வருஷக்கணக்கில் சிறப்புடன் வரைந்தது முதலும் கடைசியுமாக அவரே என்று எனக்குத் தோன்றுகிறது. நமக்குத்தான் அந்த ஓவியங்களின் கைவரிசை பிரமிப்பு. ஆனால், சங்கர் அய்யா அதை எளிமையாகக் கடந்து சென்றார். மக்களின் ரசனை எவ்வளவோ மாறியிருந்தாலும், அந்த சிறு வயதில் பார்த்த விக்ரமாதித்தன்தான் நம் மனதில் நிற்கிறார்.அவர் வெளியே வந்திருந்தால் இன்னும் சம்பாதித்திருக்கலாம். பல நிறுவனங்கள் மாறி வசதியில் கூடியிருக்கலாம். ஆனால், சிறுவர்களுக்கான ஓவிய முன்னெடுப்பில் அவர் அதையெல்லாம் கவனத்தில் கொள்ளவில்லை. என்னோடு அவர் மிகுந்த அன்பில் உறவாடி கனிந்த அன்பில் கரம் பற்றினார். காசி யாத்திரைக்கெல்லாம் அவரோடு உடன் சென்றேன். அவரோடு அன்போடு சேர்ந்திருந்த மனைவிதான் இப்போது துயரத்தோடு இருக்கிறார். நிறைந்த வாழ்வு வாழ்ந்து 97 வயதில் அவர் மறைந்தாலும், ஓவிய உலகில் அவர் இடம் யாராலும் நிரப்ப முடியாதது. அவருடன் பழகியதும், உடன் இருந்ததும், அனுபவம் பெற்றதும் எனக்கான ஆசீர்வாதம்.

தொகுப்பு: நா.கதிர்வேலன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • rainpurevi111

  தமிழகத்தை மிரட்டும் புரெவி புயல்... கொட்டும் மழை; கொந்தளிக்கும் கடல் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்!!

 • radish3

  புவியீர்ப்பு சக்தியில்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கியை வெற்றிகரமாக வளர்த்த நாசா விஞ்ஞானிகள்!: புகைப்படங்கள்

 • farmers_proteeee11

  மத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து வீறுகொண்டெழுந்த விவசாயிகள்... டெல்லியில் 8வது நாளாக ஆவேச கோஷங்களை எழுப்பி போராட்டம்!!

 • 03-12-2020

  03-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 300kg11

  பிரான்சில் 300 கிலோ எடையுள்ள நபரை, வீட்டினை உடைத்து கிரேன் மூலமாக மீட்ட மீட்புப் படையினர்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்