SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆறு மாதமே உள்ள நிலையில் இலைக்கட்சியினரின் கரன்சி வேட்டைக்கு துணைபோக மறுத்த அதிகாரி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2020-10-21@ 03:44:33

‘‘பயிற்சி அதிகாரியின் ஆட்டத்தால் காவல் அதிகாரிகள் ஓட்டம்... விருப்ப ஓய்வில் செல்வதை பற்றி சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா.
சென்னையில் பணியில் இருக்கும் போலீசாருக்கு பயிற்சி வழங்குவதற்கான அலுவலகம் எழும்பூரில் உள்ளது. இங்கு, மத்தியக்குற்றப்பிரிவில் இருந்து  ஒரு எஸ்.ஐ. வந்துள்ளாராம். இவர், கடந்த சில மாதங்களாக செய்யும் பணிகளால் எல்லோரும் மன உளைச்சலால் அவதிப்படுகிறார்களாம். கொரோனா  வந்த பெண் இன்ஸ்பெக்டரிடம், நீங்கள் ஊர் சுற்றுகிறீர்களா? எங்கு இருக்கிறீர்கள். நான் நேரில் வந்து பார்க்க வேண்டும் என்று மிரட்டினாராம். இதனால்  சிகிச்சை முடிந்து வந்த பெண் அதிகாரி, விருப்ப ஓய்வில் போய் விட்டாராம். அதேபோல ஒரு ஆண் இன்ஸ்பெக்டரும் இவரது கெடுபிடி தாங்காமல்  விருப்ப ஓய்வில் சென்று விட்டாராம். இவர் மட்டும் சிறப்பு படி வாங்கிக் கொள்கிறாராம். மற்றவர்களுக்கு கொடுப்பதில்லையாம். எல்லோரை பற்றியும்  அதிகாரிகளிடம் தப்பு தப்பாக போட்டுக் கொடுக்கிறாராம். இதனால் 5 பெண் போலீசார், சிறப்பு பணி அடிப்படையில் கமிஷனர் அலுவலக பணிக்கு  ஓடிவிட்டார்களாம். இவரது ஆட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதாம். இவரது கொடுமை தாங்காமல் யாராவது ஒருநாள் எழுதி வைத்து விட்டு  தற்கொலை செய்யப் போகிறார்கள் என்கின்றனர் பெண் போலீசார்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ஆட்சிக்கு ஆயுசு கம்மி... ஆன வரை பணத்தை சுருட்டுங்க என்று ராமநாதபுரத்தில் இலை கட்சியினர் சுருட்ட ஆரம்பிச்சுட்டாங்களாமே, அப்டியா...’’  என்றார் பீட்டர் மாமா.
‘‘ராமநாதபுரம் மாவட்டத்தில் காலியாக இருந்த ஊராட்சி செயலர் பதவி நேரடி நியமனத்திற்கு, கடந்த 2019, நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியானதாம்.
மார்ச் 25ம் தேதி விண்ணப்பித்தவர்களுக்கு நேர்காணல் கடிதம் அனுப்பப்பட்டதாம். ஆனால், கொரோனா தொற்று காரணமாக நேர்காணல் ஒத்தி  வைக்கப்பட்டதாம்... பின்னர் கடந்த 9ம் தேதி காலி பணியிடத்திற்குரிய ஊராட்சி மன்றத்தில் பிடிஓக்கள் முன்னிலையில் நேர்காணல் நடந்ததாம்.  கலந்துகொண்டவர்களின் விவரங்கள் மாவட்ட (பொறுப்பு) நியமன அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாம்... ஒரு பணியிடத்திற்கு ₹6 லட்சம் முதல்  ₹15 லட்சம் வரை ‘உள்ளூர் இலை தலைகள்’ பணத்தை வாங்கியதுடன், தாங்கள் சிபாரிசு செய்யும் ஆளுக்குத்தான் பணி வழங்கவேண்டுமென  அதிகாரியை நிர்ப்பந்தம் செய்துள்ளனராம்... இதனால் உஷாரான அதிகாரி 6 மாசமே ஆயுள் உள்ள ஆட்சிக்கு உதவி செய்துவிட்டு ஆயுசுக்கும்  அவதிப்படவா என்று நினைத்து, நேர்காணலில் கலந்துகொண்டவர்களின் விவரத்தை சென்னைக்கு அனுப்பி விட்டு, ‘இந்த சீட்டே வேண்டாம்’ என்று  கூறி கலெக்டர் அலுவலகத்திற்குள்ளேயே வேறு பணியிடத்திற்கு சென்று விட்டாராம்... இதனால் பணத்தை கொடுத்தவர்கள் வேலை  கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை... நாங்கள் கொடுத்த பணம் திரும்ப வந்தால் போதும் என எதிர்பார்ப்பில் உள்ளனராம்... ’’ என்றார் விக்கியானந்தா.
‘‘துறைகள் இரண்டு பட்டதால... மாவட்ட உயரதிகாரியிடம் திட்டு வாங்கின மாங்கனி மாவட்ட அதிகாரிகளின் நிலையை நினைத்து தலைகுனிந்த  கதை எப்படி இருக்கிறது...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மாங்கனி மாவட்டத்துல அதிகார மோதலும், துறை ரீதியான சண்டையும் அப்பப்போ வருது. சமீபத்துல ரெவின்யூ பணியாளர, பெண் ஏடி வெல்பர்  ஆபீசர் திட்டி அவமானப்படுத்துனாங்க. இதக்கேட்ட ரெவின்யூ அசோசியேசன் நிர்வாகி, ஏடி வெல்பர் ஆபீசருக்கு போன் செஞ்சு, ஏகத்துக்கும்  பேசியிருக்காரு. இந்த ஆடியோ அப்படியே வெளியாகி, இரு துறை சார்ந்த பிரச்னையா வெடிச்சது. இருதரப்பும் வாட்ஸ் அப்ல மாறிமாறி மெசேஜ்  அனுப்பி சண்டை போட்டாங்க. ஒரு வழியா இந்த விவகாரம் மாவட்ட உயர் அதிகாரிகிட்ட பஞ்சாயத்துக்கு போச்சு. இரு தரப்பையும் நேர்ல வச்சு  பேசுன அவரு, பயங்கரமா டோஸ் விட்டுருக்காரு. அப்புறம், இது சம்பந்தமா என்கிட்ட நேரா புகார் தெரிவிச்சிருக்கலாம். ரெண்டு பேரும் மாவட்ட உயர்  அதிகாரியா இருக்கீங்க. எந்த பிரச்னையும் இல்லாம, சமாதானமா போயிருங்க. இனிமே எதுவா இருந்தாலும், எங்கிட்ட கம்ப்ளைண்ட் பண்ணுங்கனு,  பஞ்சாயத்த முடிச்சு வச்சாராம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கோவையில பெண் அதிகாரி குஷியாக இருக்கிறார் என்றால் ஒன்று கரன்சி... மற்றொன்று பவராக தானே இருக்க முடியும். இதுல அவருக்கு எதுல  குஷி கிடைத்து இருக்கு...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கோவை மாவட்டத்தில் பணிபுரியும் முதன்மையான கல்வித்துறை பெண் அதிகாரி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இவர், புதிய  தனியார் பள்ளிகள் துவங்க அனுமதி கேட்கும் நபர்களிடம் பல லகரங்களை கேட்கிறாராம். இதுபோன்ற விஷயங்களை நேரடியாக டீல் செய்யாமல்  பினாமி ஒருவரின் மூலமாக செய்து வருகிறாராம். அந்த பினாமி கல்வித்துறை அமைச்சருக்கு நெருங்கியவர் என கல்வித்துறை வட்டாரத்தில் பேச்சு  இருக்கிறது. இதனால், சுதந்திரமாக தன் இஷ்டத்திற்கு காயை நகர்த்தி வருகிறார் இந்த பெண் அதிகாரி.
விண்ணப்பதாரர் ஒருவரிடம், ‘‘ஏழு லட்சம் ரூபாய் வெட்டினால்தான் பைல் நகரும்’’ என ஓபன் டாக் விட்டுள்ளார். முழு நேரமும் வசூலில் மூழ்கி  கிடப்பதால், அரசு பள்ளிகளின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவது இல்லை. மாணவர் சேர்க்கை பற்றியும் கண்டுகொள்வதில்லை... சமீபத்தில் ஆர்.டி.இ.  சட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்த விவரங்கள்  கேட்கப்பட்டுள்ளது. ஆனால், இவர், முறைப்படி பதில் அளிக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார். அத்துடன், தங்களிடம் பதில் இல்லை எனவும்  கூறியுள்ளார். கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில், கல்வி கட்டணம் பெற்றோரிடம் பெறப்பட்டு வரும் நிலையில், அதுதொடர்பான  எந்த ஆய்விலும் இவர் ஈடுபடுவது கிடையாது. காரணம், சம்திங். இப்படி, தனித்தனியாக ‘கவனி’ப்பு நடப்பதால், இந்த பெண் அதிகாரிக்கு ஒரே  குஷிதான்...’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • rainpurevi111

  தமிழகத்தை மிரட்டும் புரெவி புயல்... கொட்டும் மழை; கொந்தளிக்கும் கடல் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்!!

 • radish3

  புவியீர்ப்பு சக்தியில்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கியை வெற்றிகரமாக வளர்த்த நாசா விஞ்ஞானிகள்!: புகைப்படங்கள்

 • farmers_proteeee11

  மத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து வீறுகொண்டெழுந்த விவசாயிகள்... டெல்லியில் 8வது நாளாக ஆவேச கோஷங்களை எழுப்பி போராட்டம்!!

 • 03-12-2020

  03-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 300kg11

  பிரான்சில் 300 கிலோ எடையுள்ள நபரை, வீட்டினை உடைத்து கிரேன் மூலமாக மீட்ட மீட்புப் படையினர்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்