SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மரங்கள் இல்லாமல் காகிதம்!

2020-10-20@ 14:25:00

எத்தனை டிஜிட்டல் மையமாக உலகம் வளர்ந்தாலும் கையில் புத்தகம் எடுத்து புரட்டிப் பார்த்து படிக்கும் பழக்கத்தை மட்டும் நிச்சயம் விட முடியாது. என்னதான் பக்கம் பக்கமாக டைப் அடித்தாலும் பேனா கொண்டு பேப்பரில் எழுதும் பழக்கமும் அப்படிதான். ஆனால், இந்தக் காகித உருவாக்கத்தில் மட்டும் சுமார் 3.3 மில்லியன் ஹெக்டர் காடுகளை ஒவ்வொரு வருடமும் நாம் அழித்து வருகிறோம் எனில் இதற்கு மாற்று வழி என்ன? ‘‘ஒரு மரத்தைக் கூட வெட்டாமல் காகிதம் தயாரிக்கலாம்!’’ என பெருமையாக சொல்கிறார் காவ்யா மாதப்பா. ‘‘காகிதத்துக்காக வருஷம் முழுக்க மரங்களை அழிக்கிறது கொடுமை. அதிலும் நான் கர்நாடகா கூர்க் மாதிரி இயற்கை வளம் நிறைந்த பகுதியில பிறந்து வளர்ந்தவ. இதுக்கு மாற்று வழியே இல்லையானு சிந்திச்சேன். அப்படி ஆராய்ச்சிகள்ல இறங்கினப்பதான் காகிதம் தயாரிக்க முக்கிய மூலப்பொருட்களா செல்லுலோஸ் அடங்கின கூழ், தண்ணீர் இதுதான் தேவைனு புரிஞ்சது. அதாவது 68% செல்லுலோஸ் அடங்கிய கூழ்தான் முக்கிய மூலப்பொருள்.இந்த ஆராய்ச்சிதான் ‘புளூகேட் பேப்பர்’ உருவாகக் காரணம்...’’ என்னும் காவ்யா மரங்கள் இல்லாமல் எப்படி காகிதம் தயாரிக்கலாம் என்பதை விளக்கினார்.  ‘‘பருத்தி கந்தல், ஆளி, எலுமிச்சை புல், மல்பெரி, வைக்கோல், காபியுடைய உமி, வாழை நார்கள், தேங்காய் நார் மற்றும் யானையின் சானம்... இந்த மாதிரி இரண்டாம் நிலை வேளாண் மற்றும் தொழில்துறை கழிவுகளைப் பயன்படுத்தி காகிதம் செய்யலாம்னு முடிவு செய்தேன்.

ஒவ்வொரு வருடமும் கழிவுகளா சொல்லப்படுகிற வைக்கோல், உமி, தவிடு, காபி உமி, வாழை நார்... இதையெல்லாம் நேரடியாக விவசாயிகள் கிட்ட ஒரு குறிப்பிட்ட விலைக்கு வாங்கி, காட்டன் கந்தல் மாதிரியான பொருட்களை தொழிற்சாலை கழிவுகளா சேகரிச்சு காகிதம் தயாரிக்க ஆரம்பிச்சேன். மரக்கூழை விட 30 - 40% செல்லுலோஸ் இந்தக் கூழ்கள்ல அதிகம் இருக்கும். மேலும் எப்போதுமான காகிதங்கள் மெல்லியதா தயாரிக்க 60 - 80 வகையான கெமிக்கல் பயன்படுத்தறாங்க. ஆனா, நான் செய்கிற பேப்பர்கள்ல இந்த கெம்மிக்கல் பயன்பாடு கிடையாது. நூற்றுக்கும் மேலான விவசாயிகள் அறுவடைக்குப் பின்னாடியான கழிவுகள் மூலமும் சம்பாதிக்கிறாங்க. 100 டன் கணக்கில இந்த இரண்டாம் நிலை வேளாண் கழிவுகளை நாங்க வாங்குறோம்...’’ என்னும் காவ்யா இந்த காகிதத் தயாரிப்பில் ஒரு நாளைக்கு 55 ஆயிரம் லிட்டர் தண்ணீர் சேமிக்கப்படுவதாகவும் சொல்கிறார். ‘‘இந்தக் காகிதம் மூலம் மாசத்துக்கு 100 டன்கள் வீதம் மரங்கள் அழிவதைத் தடுத்திருக்கிறோம்...’’ என்னும் காவ்யாவிற்கு ப்ளூ கேட் பேப்பர் முதல் தொழில்முனைவோர் முயற்சி அல்ல. 2000ம் ஆண்டில் பெங்களூருவில் உள்ள செயின்ட் ஜோசப் நிறுவனத்தில் வணிகத்தில் இளங்கலை பட்டம் பெற்ற பிறகு, அவர் இன்டர்நேஷனல் நெடெர்லாண்டன் க்ரூப் (ஐஎன்ஜி) வங்கியில் பணிபுரிந்தார். அங்கே, அவர் காப்பீட்டு சேவைகளை கவனித்துக் கொண்டிருந்தார்.

அதை விட்டுவிட்டு கூர்க் திரும்பியவர் ஒரு ஸ்பா ரிசார்ட் நிறுவியதில் தொடங்கியிருக்கிறது இந்த காகிதத் தயாரிப்பு எண்ணம். ‘‘ஒரு ஸ்பா ரிசார்ட்டை நடத்தும்போது, எங்களுக்கு நிறைய புத்தகங்கள், அவுலெட்டுகள் ரிலீஸ் பண்ண வேண்டிய கட்டாயம் இருந்தது, எங்களை அறியாமலேயே காகித பயன்பாடு அதிகமா இருந்தது. ஆனா, அந்தக் காகிதம் மரங்களை அழிச்சு அதிலே கிடைக்கறதை ஏத்துக்க முடியலை. இதுக்கான மாற்றுதான் ‘புளூகேட் பேப்பர்’.என்னதான் காகிதங்களை நாம் மரங்கள் உதவியில்லாம உருவாக்கினாலும் இதற்கான மெஷின்கள் எல்லாமே மரங்கள் சார்ந்துதான் இருக்கு. மறுபடியும் அதுக்காக நாம மரங்களை வெட்ட வேண்டிய சூழல். இதை மாத்தி மரங்களில்லா மெஷின்களை உருவாக்கதான் நிறைய பணம் செலவிட வேண்டி இருந்தது. முடிந்தவரை உலோக கான்செப்ட் கொண்டு வந்தோம். அதேபோல் பெங்களூரிலிருந்து 60 கி.மீ. தூரத்துல இருக்கிற ராமநகரில், பட்டு வளர்ப்பு பயிற்சி செய்றாங்க. அதில் பட்டுப்புழுக்களுக்காக மல்பெரி மரங்களை வளர்க்கிறாங்க. ஆனா, பட்டுப்புழுக்கள் இலைகளை மட்டுமே சாப்பிடும், மீதி கிளைகளை வீணாக்கறாங்க. இதை நாங்க குறிப்பிட்ட விலைக்கு வாங்கி மெஷின் தயாரிக்கறோம்...’’ என்னும் காய்வா மாதப்பா இந்த ‘டிரி ஃப்ரீ’ காகித உற்பத்தியில் ஏராள மான பெண்கள், வீட்டுத் தலைவிகளை வேலைக்கு அமர்த்தியிருக்கிறார்!   

தொகுப்பு: ஷாலினி நியூட்டன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • rainpurevi111

  தமிழகத்தை மிரட்டும் புரெவி புயல்... கொட்டும் மழை; கொந்தளிக்கும் கடல் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்!!

 • radish3

  புவியீர்ப்பு சக்தியில்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கியை வெற்றிகரமாக வளர்த்த நாசா விஞ்ஞானிகள்!: புகைப்படங்கள்

 • farmers_proteeee11

  மத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து வீறுகொண்டெழுந்த விவசாயிகள்... டெல்லியில் 8வது நாளாக ஆவேச கோஷங்களை எழுப்பி போராட்டம்!!

 • 03-12-2020

  03-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 300kg11

  பிரான்சில் 300 கிலோ எடையுள்ள நபரை, வீட்டினை உடைத்து கிரேன் மூலமாக மீட்ட மீட்புப் படையினர்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்