SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அங்கீகாரம் வேண்டும்

2020-10-20@ 01:06:31

அறிவியல் ஆராய்ச்சியில் இந்திய விஞ்ஞானிகள் தனித்துவம் வாய்ந்தவர்கள் என்பதை பலமுறை நிரூபித்துள்ளனர். அதிக மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் மருந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களுக்கு பிற நாடுகளை சார்ந்திருப்பது நல்லதல்ல. அறிவியல் உள்ளிட்ட தொழில்நுட்பத்துறைகளில் தன்னிறைவு காணவேண்டியது கட்டாயம். புதிய கண்டுபிடிப்புக்களை உருவாக்கும் வகையில் இளம் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் கூடுதல் அக்கறை காட்டவேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் அறிவியல் கண்டுபிடிப்புகள் கண்டிப்பாக தேவை. பல கண்டுபிடிப்புகளை உருவாக்கியும், உரிய அங்கீகாரம் கிடைக்காத காரணத்தால், ஆராய்ச்சியாளர்கள் பலர் வெளிநாடுகள் செல்லும் நிலை இனி ஏற்படக்கூடாது.

இவ்விஷயத்தில் அரசு மிகுந்த பொறுப்புடன் செயல்பட வேண்டும். அறிவியலில் ‘அரசியல்’ இருக்கக்கூடாது. திறமையானவர்களை கவுரவிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் சித்த மருத்துவ பிரிவுக்காக ஆண்டுதோறும் பல கோடி ஒதுக்குகின்றன. ஆராய்ச்சிக்கு நிதி முக்கியம். ஆனால், நிதி மட்டுமே அறிவியலில் முழு வெற்றியை தந்து விடாது. விண்வெளி, மருத்துவத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறிய கண்டுபிடிப்பாக இருந்தாலும், அரசு ஊக்குவித்தால் மட்டுமே ஆராய்ச்சியாளர்கள் அடுத்தகட்டத்துக்கு பயணிக்க முடியும். ஆனால், இங்கு நிலைமை தலைகீழாக இருப்பது தான் வேதனைக்குரியது.

வாழ்நாள் முழுவதும் ஆராய்ச்சிக்காக செலவிட்டு, அங்கீகாரம் கிடைக்காததால் பல பேர் ஆராய்ச்சியை நிறுத்தி விடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கண்டுபிடிப்புகள் என்பவை, பல ஆண்டுகள் இரவு பகலாக கண்விழித்து உருவாக்கும் மிகப்பெரிய ‘பொக்கிஷம்’ என்பதை புரிந்து கொள்ளவேண்டும். புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவது எளிது. ஆனால், ‘அரசியல் புகுந்து விடுவதால்’ அதை வெளிக்கொண்டு வருவது தான் மிகப்பெரிய சவாலாக உள்ளது. கொரோனாவை குணப்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள சித்த மருந்துகளை உடனே வரையறுக்கப்பட்ட ஆய்வுக்கு உட்படுத்தி, அதன் தரம் குறித்து தெரிவித்திருக்கலாம். காலதாமதம் செய்தது ஏன்? சிகிச்சை முறைகளில் மாற்றங்கள் இருந்தாலும், அனைத்து வகையான மருந்துகளுக்கும் மக்களின் நலன் காப்பதே நோக்கம் என்பதால் ஏற்றத்தாழ்வுகள் தேவையில்லை.

பல நோய்களுக்கு வெளிநாட்டு மருந்துகளை நம்பி இருப்பது நல்லதல்ல. இங்கு ஆராய்ச்சியாளர்களுக்கு பஞ்சமில்லை. ஆனால், அறிவியல் கண்டுபிடிப்புகளை நடைமுறைக்கு கொண்டு வருவது தான் மிகப்பெரிய சிக்கல். இந்த நிலை மாறவேண்டும். வல்லரசு என்ற இலக்கை அடைய அறிவியல் மற்றும் மருத்துவத் துறையில் அதிக கண்டுபிடிப்புகள் தேவை. அறிவியல் ஆராய்ச்சிகளை ஊக்குவித்து வருகிறோம் என்ற வார்த்தை மட்டும், அறிவியலை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்லாது என்பதை அரசுகள் புரிந்து கொள்ள வேண்டும். ஆராய்ச்சிகளில் தோல்வியே கிடையாது. அடுத்தடுத்த முயற்சிகளே, வெற்றியை தரும்.

ஆராய்ச்சியாளர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டியது அவசியம். குறிப்பாக, மாணவர்களின் கண்டுபிடிப்புகளை அதிகளவில் ஊக்குவித்து, அறிவியல் சம்பந்தமான விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும். மருத்துவம் உள்பட எந்த துறையிலும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை வெளிச்சத்தை ஆராய்ச்சியாளர்களின் மனதில் உருவாக்கும் வகையில், இனியாவது அரசின் நடவடிக்கை இருக்கவேண்டும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 04-12-2020

  04-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • rainpurevi111

  தமிழகத்தை மிரட்டும் புரெவி புயல்... கொட்டும் மழை; கொந்தளிக்கும் கடல் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்!!

 • radish3

  புவியீர்ப்பு சக்தியில்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கியை வெற்றிகரமாக வளர்த்த நாசா விஞ்ஞானிகள்!: புகைப்படங்கள்

 • farmers_proteeee11

  மத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து வீறுகொண்டெழுந்த விவசாயிகள்... டெல்லியில் 8வது நாளாக ஆவேச கோஷங்களை எழுப்பி போராட்டம்!!

 • 03-12-2020

  03-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்