SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆற்று மணலை அண்டை மாநிலத்துக்கு கடத்தி லாபம் பார்த்த அதிகாரிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2020-10-19@ 02:05:59

‘‘மாவட்ட உயரதிகாரி எங்கே போனாலும் வேலை செய்ய விட மாட்டேன் என்று பெண் அதிகாரி சபதம் போட்டுள்ளாராமே, எதற்கு...’’ என்றார் பீட்டர் மாமா.  ‘‘கடற்கரை மாவட்டம் ஒன்றில் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராக பெண் ஒருவர் கொடி கட்டி பறந்தாராம். மகாவின் பெயர் கொண்ட இவர், கடந்த 3 ஆண்டுக்கு மேலாக தனிப்பிரிவில் இன்ஸ்பெக்டராக கோலோச்சி வந்துள்ளார்... இதனால் இந்த மாவட்டத்திற்கு புதிதாக எந்த எஸ்பி வந்தாலும் இவரது ராஜ்ஜியம் மட்டுமே செல்லுமாம்... அதற்கு ஏற்ப மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் தனக்கு விசுவாசியான நபர்களை மட்டுமே தனிப்பிரிவு ஏட்டாக நியமித்து விடுவாராம்...

சமீபத்தில் சென்னைக்கு பணியிட மாற்றம் சென்ற ராஜாவின் பெயர் கொண்ட எஸ்பி, அவர் பணியாற்றிய காலத்தில் தனிப்பிரிவு பெண் இன்ஸ்பெக்டர் மீது எழுந்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை மேலிடத்திற்கு தெரிவித்தாராம்... இதையடுத்து தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சில தினங்களுக்கு முன் நெற்களஞ்சிய மாவட்டத்திற்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார். சமீபத்தில் சென்னையில் இருந்து புதிதாக பொறுப்பேற்ற எஸ்பியை அந்த மாவட்டத்தில் பணிசெய்ய விடமாட்டேன். சொந்த மாநிலத்தை சேர்ந்த ராஜாவின் பெயர் கொண்ட எஸ்பியை மேலிடத்தில் போட்டுகொடுத்து அவரை மாற்றி விட்ட நான்...

வடமாநிலத்தில் இருந்து வந்த எஸ்பியை மாற்ற எவ்வளவு நேரமாகும் என சொடுக்கு போட்டு சக காக்கி அதிகாரிகளிடம் சபதம் போட்டுள்ளாராம்... நெற்களஞ்சிய மாவட்டத்திற்கு தனிப்பிரிவு பெண் அதிகாரி மாறுதலாகி சென்றாலும் கடற்கரை மாவட்டம் மீது இன்னும் ஒரு கண்வைத்து கொண்டு இருக்கிறாராம்... விரைவில் பவர்புல்லாக வருவேன் என்று சொல்லி வருகிறாராம்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தும்மினதுக்காக திட்டு வாங்கிய ஊழியர்கள்... நடுநடுங்க வைக்கும் அளவுக்கு ஏசி போட்டது தப்பில்லையானு கோபத்துல கொந்தளிக்கிறாங்களாமே, உண்மையா...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘மாங்கனி மாநகர காவல்துறையில் துணையானவராக இருப்பவர் மீது புகாருக்கு பஞ்சமே இல்லையாம். இப்போ புதுவகையா ஒரு குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்காராம். துணையானவரை பார்த்து, கையெழுத்து பெறுவதற்காக அமைச்சு பணியாளர்கள் 2 பேர், அவரது அறைக்கு சென்றார்களாம். அங்கு, புல் ஏசி இருந்துச்சாம். ஏசி காற்று குளிரில், ஒரு அமைச்சு பணியாளர் திடீரென தும்மிட்டாராம். கொதித்தெழுந்த துணையானவர், ஆவேசமாக திட்டி வெளியே அனுப்பிட்டாராம். அடுத்த சில நொடிகளில் உடன் சென்ற மற்றொரு அமைச்சு பணியாளரும் தும்மல் போட்டாராம். வெகுண்டெழுந்த துணையானவர், அவரையும் வறுத்தெடுத்து வெளியே அனுப்பிட்டாராம்.

இந்த சம்பவத்தால் அவமானமடைந்த 2 ஊழியர்களும், தங்கள் சங்கத்தின் மாநில தலைமைக்கு தகவலை தட்டி விட்டாங்களாம். உடனே மாநில நிர்வாகிகள் எல்லாம் ஆலோசித்து, அந்த துணை அதிகாரிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உயர் அதிகாரிகளிடம் கொடுக்க முடிவு செஞ்சிருக்காங்களாம். ஓரிரு நாளில் இதற்காக அவசர செயற்குழுவையே கூட்ட திட்டமிட்டிருப்பதாக கொசுறு தகவலும் கிடைச்சிருக்கு...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘அல்வா மாநகராட்சியில பஸ் ஸ்டாண்ட் அடியில் கிடைத்த ஆற்று மணல் புதையல்ல லகரங்களை பாக்கெட்டில் போட்டு நிரப்பியவர்களை பற்றி சொல்லுங்க...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘நெல்லை மாநகராட்சியை முறைகேடு சூறாவளி மையம் கொண்டுள்ளது. நெல்லை மாநகராட்சி சந்திப்பு பஸ் ஸ்டாண்டை இடித்து விட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ₹78 கோடியில் அடுக்கு மாடி பஸ் ஸ்டாண்ட் கட்ட கடந்த 2018ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. கட்டிடங்களை ஒவ்வொன்றாக தட்டி எடுத்து விட்டு பஸ் ஸ்டாண்ட் அமைக்க குழி தோண்டிய போது தான் புதையல் போன்று ஆற்று மணல் குவியல், குவியலாய் வந்தது. தற்போது தான் ஆற்று மணல் தங்கத்திற்கு நிகரான விலையாச்சே. சும்மா விடுவார்களா அதிகாரிகள். பல அடி ஆழத்திற்கு தோண்டி, தோண்டி மணலை எடுத்த அதிகாரிகள், தமிழகத்தில் விற்றால் தானே விவகாரமாகும்.

நாங்கள் எல்லையை தாண்டி விடுகிறோம் என்று டன் கணக்கில் கேரளாவிற்கு ஆற்று மணல் அனைத்தையும் கொண்டு சென்று கரன்சியாக்கி விட்டனர். இந்த விவகாரத்தை அறிந்த ஒரு சிலர் புரளி கிளப்பி விட, அந்த மணல் கட்டுமானத்திற்கு உகந்ததல்ல என ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுப்பி சான்றும் பெற்று விட்டனர். ஆனால் தற்போது அந்த விவகாரம் மதுரை ஐகோர்ட் கதவுகளை தட்டியுள்ளது. அங்கும் மணல் கடத்தல் விவகாரத்தை மறைக்க, ஒருவரை கைது செய்தோம் என ஒப்புக்கு ஐகோர்ட்டில் பதில் தெரிவிக்க லாரி, லாரியாக கடத்தப்பட்ட மணலுக்கு ஒருவர் தான் கைதா என ஐகோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மணல் விவகாரத்தில் ‘சிறப்பாக’ செயல்பட்ட மாநகராட்சி அதிகாரிகளின் மீது கத்தி தொங்குவதாக ஊழியர்களே ஒருவருக்கொருவர் புகைந்து கொள்கின்றனர்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘விஸ்வரூபமெடுக்கும் பெண் மருத்துவர் பிரச்னை என்னாச்சு...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘நெல்லை மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றில் பணியாற்றிய பெண் மருத்துவருக்கும், அவரது மருத்துவ உயர் அதிகாரிக்கும் ஏற்பட்ட மோதல் விவகாரம் போலீசில் புகார், விசாரணை என்ற அளவில் சென்றது. இதனையடுத்து பெண் டாக்டர் நெல்லையில் இருந்து குமரி மாவட்டத்திற்கு கடலோர பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றிற்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்ததார்.

இந்தநிலையில் தற்போது குமரி மாவட்டத்தில் உள்ள உயர் அதிகாரியும், பெண் டாக்டரை டார்ச்சர் செய்வதாக பெண் டாக்டர் மீண்டும் புகார் பட்டியல் வாசிக்க தொடங்கியுள்ளார். இதற்கு நெல்லை அதிகாரியின் தூண்டுதலும் காரணம் என்பதும் அவரது குற்றச்சாட்டு. குமரி சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்போ பெண் டாக்டர் உரிய நேரத்தில் பணியிடத்திற்கு செல்வது இல்லை, விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு கொடுப்பது இல்லை என்கிறார்கள். ஆனால் பெண் டாக்டர் தரப்போ.. உயர் அதிகாரிகளுடன் பேசிய ஆடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துகிறார்.. இந்த விஷயத்துல முடிவு காண முடியாம சுகாதாரத்துறையினர் அச்சத்தில் இருக்காங்க...’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • rainpurevi111

  தமிழகத்தை மிரட்டும் புரெவி புயல்... கொட்டும் மழை; கொந்தளிக்கும் கடல் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்!!

 • radish3

  புவியீர்ப்பு சக்தியில்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கியை வெற்றிகரமாக வளர்த்த நாசா விஞ்ஞானிகள்!: புகைப்படங்கள்

 • farmers_proteeee11

  மத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து வீறுகொண்டெழுந்த விவசாயிகள்... டெல்லியில் 8வது நாளாக ஆவேச கோஷங்களை எழுப்பி போராட்டம்!!

 • 03-12-2020

  03-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 300kg11

  பிரான்சில் 300 கிலோ எடையுள்ள நபரை, வீட்டினை உடைத்து கிரேன் மூலமாக மீட்ட மீட்புப் படையினர்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்