SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

லஞ்ச ராஜ்ஜியம்

2020-10-19@ 01:23:15

தமிழகத்தில் சமீபகாலமாக அரசுத்துறை அலுவலகங்கள் லஞ்ச லாவண்யத்தில் கொடிகட்டி பறக்கின்றன. வருவாய் ஆய்வாளர் அலுவலகம் தொடங்கி தலைமை செயலகம் வரை எங்கு மக்கள் சென்றாலும் பணம் இல்லாமல் எதுவும் நடப்பதில்லை. சாதாரண வருமான சான்றிதழ் பெறுவதற்கு கூட பொதுமக்கள் சில நூறுகளை வாரி இறைக்க வேண்டியதுள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது விஜிலென்ஸ் அதிகாரிகள் நடத்தியுள்ள சோதனையில் அரசு அலுவலகங்களின் அவலம் நம் கண் முன்னே தெரிகிறது. ‘கழுதை மேய்த்தாலும் அது கவர்மென்ட் வேலையாக இருக்க வேண்டும்’ என கிராமங்களில் ஒரு பழமொழி உண்டு. அப்படிப்பட்ட அரசு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இன்று பணம் பல்வேறு வழிகளில் கொட்டுகிறது.

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்கிற அரசு ஊழியர்கள் லஞ்ச பணத்தை பல்வேறு இடங்களில் முதலீடு செய்வதோடு, நகைகளையும் வாங்கிக் குவித்து வருகின்றனர். விஜிலென்ஸ் சோதனைகள் அவற்றை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளன. சென்னை, சேலம், நாமக்கல், ஓசூர், வேலூர் என பல்வேறு அரசு அலுவலகங்களில் விஜிலென்ஸ் போலீசார் நடத்திய சோதனைகளில் கணக்கில் வராத பணம் கட்டுக்கட்டாய் சிக்கியுள்ளது. பத்திர பதிவுத்துறை அலுவலகங்கள், நகர ஊரமைப்பு அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் என விஜிலென்ஸ் சோதனையிட்ட துறைகள் அனைத்திலும் லட்சக்கணக்கான பணம் சிக்கியுள்ளது.

அதிலும் ஒரு சில இடங்களில் போலீசாரை கண்டதும் கையிலிருந்த பணத்தை தரையில் வீசி எறிந்து விட்டு ஓடிச் சென்ற அரசு அதிகாரிகளும் உண்டு. அதிலும் கனிமவளத்துறையில் பணம் கொழித்து கிடப்பதை சோதனையிட்ட அதிகாரிகள் கண்கூடாகவே கண்டுள்ளனர். வேலூரில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் வீட்டில் கோடிக்கணக்கில் பணம் கண்டெடுக்கப்பட்டதோடு, தங்கம், வெள்ளி நகைகளும் சிக்கின. அவர் 650 ஏக்கரில் நிலங்களை வாங்கி குவித்திருப்பது தலைச்சுற்ற வைக்கிறது. வெளி மாநிலங்களில் நிலம் வாங்கி குவிக்கும் அரசு அதிகாரிகளும் தமிழகத்தில் உள்ளனர். வீடு, கார், நகைகள் தவிர சொகுசு பங்களா கட்டும் அளவுக்கு அரசு அதிகாரிகள் தற்போது செல்வ செழிப்பில் உள்ளனர்.

‘அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம்’ என சமீபத்தில் மதுரை ஐகோர்ட் நீதிபதிகள், அரசு அதிகாரிகளை கடிந்து கொண்டனர். நெல் கொள்முதலுக்கு கூட விவசாயிகளிடம் லஞ்சம் கேட்கும் அரசு அதிகாரிகளை என்னவென்று சொல்வது? உண்மையில் தமிழகத்தில் தற்போது அரசு துறைகளில் என்னதான் நடக்கிறது என கேட்டால் லஞ்ச லாவண்யங்கள் கேட்பாரற்று காணப்படுகிறது. தமிழகத்தில் பல உள்ளாட்சி அமைப்புகளில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் இல்லை. இதையெல்லாம் சாதகமாக பயன்படுத்தி கொண்டு, கிடைத்த வரை லாபம் என அரசு அதிகாரிகள் பணத்தை வாரி சுருட்டுகின்றனர்.

இதன் விளைவு அரசு துறைகளில் லஞ்சமே வாங்காத நல்ல அதிகாரிகள் கூட கெட்ட பெயரை சம்பாதிக்க வேண்டிய சூழல் காணப்படுகிறது. அரசு துறைகளில் லஞ்ச லாவண்யத்தை கட்டுப்படுத்த ஒரு கடிவாளம் தேவை. விஜிலென்ஸ் உள்ளிட்ட அமைப்புகள் மாதம் இருமுறை சோதனைகளை நடத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 04-12-2020

  04-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • rainpurevi111

  தமிழகத்தை மிரட்டும் புரெவி புயல்... கொட்டும் மழை; கொந்தளிக்கும் கடல் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்!!

 • radish3

  புவியீர்ப்பு சக்தியில்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கியை வெற்றிகரமாக வளர்த்த நாசா விஞ்ஞானிகள்!: புகைப்படங்கள்

 • farmers_proteeee11

  மத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து வீறுகொண்டெழுந்த விவசாயிகள்... டெல்லியில் 8வது நாளாக ஆவேச கோஷங்களை எழுப்பி போராட்டம்!!

 • 03-12-2020

  03-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்