SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசு யோசிக்குமா?

2020-10-18@ 00:56:07

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் நாடு முழுவதும் 7 லட்சத்து 71 ஆயிரத்து 500 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தை பொருத்தவரை நடப்பாண்டில் 1 லட்சத்து 21 ஆயிரத்து 617 மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இவர்களில் 99,610 பேர் தேர்வு எழுதினர். இதில் 57,215 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். தேர்ச்சி சதவீதம் 57.44. கடந்த ஆண்டு 1 லட்சத்து 23 ஆயிரத்து 78 பேர் தேர்வு எழுதினர். இதில் 59,785 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 48.57. இங்கே நாம் ஒரு விஷயத்தை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.  தமிழகத்தில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் 23,468 மாணவர்கள் குறைவாக நீட் தேர்வு எழுதி உள்ளனர். ஆனால், கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் தேர்ச்சி சதவீதம் 8.87 ஆக உயர்ந்துள்ளது. நீட் தேர்வில் அரசு பள்ளிகளில் படித்து வென்றவர்களில், தேனி மாணவர் ஜீவித்குமார் முதலிடம் பிடித்துள்ளார். ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகனான இவர், 720க்கு 664 மதிப்பெண் பெற்றுள்ளார்.

இவர் கடந்த 2018-19ம் கல்வியாண்டில் நடந்த நீட் தேர்வில் 193 மதிப்பெண் பெற்றார். இவரின் ஆர்வத்தை உணர்ந்த பள்ளி ஆசிரியர்கள் நிதி திரட்டி சேலத்தில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் சேர்த்துள்ளனர். அங்கு ஓராண்டாக பயிற்சி பெற்ற ஜீவித்குமார் தற்போது இந்திய அளவில் சாதித்திருக்கிறார். ஒருவேளை குடும்பச்சூழல் காரணமாக அவரால் நீட் தேர்வு எழுத முடியாமல் போனால்...? தமிழக அளவில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவதற்கும், 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் அச்சத்தில் உயிரிழப்பதற்கு இதுவும் ஒரு காரணம் ஆகும். மாநில கல்விக்கொள்கையில் படிக்கும் மாணவர், எப்படி மத்திய பாடத்திட்டத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும்?. இதே நிலை நீடித்தால் அரசுப்பள்ளி மாணவனுக்கு மருத்துவப்படிப்பு கனவாகவே போய் விடும்.

தமிழக மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக ஐகோர்ட் மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவிக்கிறது.   அப்போது நீதிபதிகள், ‘‘அரசுப்பள்ளி மாணவர்கள் பலர் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கவே முன்வரவில்லை என்பதன்மூலம் அவர்கள் உளவியல்ரீதியாக எந்தளவுக்கு பாதித்துள்ளனர் என்பது தெரிய வருகிறது. உள் இடஒதுக்கீட்டால் மருத்துவ சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு கிடைக்கும். 5 லட்சம் வரையில் கட்டணம் செலுத்தி தனியார் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற முடியாத நிலையில் பலர் உள்ளனர். கிராமப்புற மாணவர்களின் சிரமத்தையும், வேதனையையும் அளவிட முடியாது’’ எனக்கூறியபோது நீதிபதி கிருபாகரன், கண்ணீர் விட்டு அழுதார்.

அப்போது, ‘‘மசோதாவின் மீது தமிழக ஆளுநர் முடிவெடுக்கும் வரை மாணவர் சேர்க்கை தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாது’’ என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் நீதிபதியே கண் கலங்கும் அளவில்தான், இன்று ஏழை மாணவர்களின் கல்வி நிலை உள்ளது என்பதை அரசுகள் உணர வேண்டும். கல்வி என்பது ஏழை, பணக்காரர் பாகுபாடின்றி அனைவருக்கும் சமமாக கிடைப்பதை அரசுகள் உறுதி செய்ய வேண்டும். அதனால்தான் கடைக்கோடி கடல் கிராமத்தில் இருந்து ஒரு தலைசிறந்த விஞ்ஞானியாக, நாட்டின் ஜனாதிபதியாக அப்துல் கலாம் உருவாக முடிந்தது.  இனியாவது அரசுகள் யோசிக்குமா?

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • jaipourelephant20

  ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

 • delhiformer20

  வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

 • nivarpondyvilupuram20

  நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

 • nivarkadaloorcmvisit20

  நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

 • nivarthirvannamali20

  திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்