SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இதற்குமா லஞ்சம்

2020-10-17@ 06:35:42

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியில் தற்போது 95 சதவீதம் அறுவடை பணி முடிந்து, சம்பா சாகுபடி பணி தொடங்கியுள்ளனர். இந்தாண்டு குறிப்பிட்ட நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் குறுவை விளைச்சல் அதிகரித்துள்ளது. அரசின் நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டிருந்ததால் விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்தனர். இந்நிலையில் கொள்முதல் நிலையங்களை திறந்து தினமும் 1000 மூட்டைகள் கொள்முதல் செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டது. இதையடுத்து  நெல் கொள்முதல் நடந்து வருகிறது. கொள்முதல் நிறுத்தப்பட்ட நேரத்தில் டெல்டா  மாவட்ட கொள்முதல் நிலையங்களிலும் கூடுதலாக நெல் மூட்டைகள் குவிந்தது.

நெல் மூட்டைகள் ஈரமாக இருப்பதாகவும், போதிய சாக்கு இல்லாததை காரணம் காட்டியும் தினமும்  700 மூட்டைகள் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் நெல்மூட்டைகளை விற்பனை செய்ய முடியாமல் சாலையோரத்தில் அடுக்கி வைத்தும், கொட்டி காய வைத்தும் விவசாயிகள் நாள்கணக்கில் காத்துக்கிடக்கும் நிலை உருவானது.  விவசாயிகளின் இந்த அவலநிலை குறித்த வழக்கை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்ற மதுரை கிளை, விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலை இல்லை. மழையால் நனைந்து வீணாகும் நெல்மூட்டைகளை பாதுகாக்க எடுத்த நடவடிக்கை என்ன என்று அரசை கேள்வி கேட்டுள்ளது. மேலும், ஒரு மூட்டை நெல் கொள்முதல் செய்ய ரூ.40 விவசாயிகளிடம் லஞ்சமாக அதிகாரிகள் பெறுவது பிச்சை எடுப்பதற்கு சமம் என்றும் கடிந்துகொண்டது.

வீணாகும் ஒவ்வொரு நெல்மணிக்கும் அதற்கு காரணமான அதிகாரியிடம் உரிய பணத்தை வசூலிக்க வேண்டும் என்று விவசாயிகளின் மனசாட்சியாக நின்று நீதிபதிகள் சரமாரியாக கேள்வி கேட்டுள்ளனர். இந்நிலையில், மன்னார்குடி அருகே நெல்கொள்முதலில் முறைகேடு நடந்துள்ளதை லஞ்ச
ஒழிப்பு துறை கண்டுபிடித்தது. கிடங்குக்கு கொண்டு சென்ற ெநல்மூட்டைகளை மீண்டும் கொண்டு வந்து கொள்முதல் செய்தது போன்று அதிகாரிகள் கணக்கு காட்டியுள்ளனர். மேலும் கணக்கில் வராத பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. தனது வியர்வை சிந்தி இரவும், பகலுமாக பயிரை பாதுகாத்து நெல் அறுவடை செய்து அதை விற்பனை செய்ய வரும் விவசாயிக்கு பணம் கைக்கு வருவதற்குள் இத்தனை இடையூறுகள், பிரச்னைகள் இருந்தால், எப்படி விவசாய குடும்பம் நிம்மதியாக வாழ முடியும். விவசாய விளைபொருள் கொள்முதலில் அரசு தேவையான மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும். விவசாயிகள் நெல் மூட்டைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பல நாட்களாக சாலையோரங்களில் விளைபொருட்களுடன் விவசாயிகள் காத்துக்கிடப்பதை தவிர்க்கவும், உடனடியாக கொள்முதல் செய்து அவர்களை மகிழ்ச்சியுடன் அனுப்பிவைக்கும் நிலையையும் அரசு அதிகாரிகள் உருவாக்க வேண்டும். வயல்வெளியில் உழைத்து பயிரை பாதுகாத்து விவசாய அறுவடைக்கு கூலி கொடுத்து விளைபொருளை விற்க வரும் நேரத்தில் விவசாயிகளிடம் கொஞ்சமும் மனிதாபிமானமின்றி லஞ்சம் பெறுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. அன்னம் அளக்கும் கைகளுக்கு அன்புப்பரிசை அரசுதான் தர வேண்டும். அதற்கு அனைத்து தகுதியை பெற்ற விவசாயிகளுக்கு அனைத்து வகையிலும் அரசு பாதுகாப்பாகவும், உதவியாகவும் இருக்க வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாகும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • jaipourelephant20

  ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

 • delhiformer20

  வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

 • nivarpondyvilupuram20

  நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

 • nivarkadaloorcmvisit20

  நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

 • nivarthirvannamali20

  திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்