SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாற்றம் வேண்டும்

2020-10-16@ 00:18:04

விளையாட்டு உட்பட பல்வேறு பிரிவுகளில் சாதனை புரியும் மாற்றுத்திறனாளிகள் மீது அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையில் செயல்படுவதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுதொடர்பாக ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுக்களில், இந்தியாவிலுள்ள சிறப்புத்திறன் மற்றும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளில் அதிகளவில் பதக்கம் பெறுகின்றனர். இவர்களுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை மத்திய அரசு ரொக்கப்பரிசு வழங்குகிறது. மாநில அரசு ரூ.20 ஆயிரம்  முதல் ரூ.50 ஆயிரம் வரை வழங்குகிறது.

அதேநேரம், பிரதான ஒலிம்பிக்கில் பதக்கம் பெறுவோருக்கு ரூ.30 லட்சம் முதல் ரூ.75 லட்சம் வரை விருது மற்றும் பரிசுகள் வழங்கப்படுகிறது. மாநில அரசு ரூ.50 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை வழங்குகிறது. சட்டப்படி அனைத்து விளையாட்டு வீரர்களும் சமம். எனவே, தமிழகத்திலும் சிறப்புத்திறன் மற்றும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு அனைத்து சலுகைகளையும், ஒரே மாதிரி வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.
மனுக்களை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர், ‘‘ஒரு மனுதாரர் சர்வதேச மற்றும் தேசிய அளவில் தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளார். அவர் தமிழக அரசில் அலுவலக உதவியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

10ம் வகுப்பு படித்து கிரிக்கெட்டில் சாதனை படைத்த சச்சின் டெண்டுல்கரை அலுவலக உதவியாளராக நியமிக்க முடியுமா? விளையாட்டில் சாதிக்கும் மாற்றுத்திறனாளிகளை உலக நாடுகள் அங்கீகரிக்கின்றன. ஆனால், இங்கு அதுபோன்ற நிலை இல்லை. 90 பதக்கம் பெற்ற ஒருவர் அலுவலக உதவியாளராக பணியாற்றுகிறார். சாமானியர்களும், ஏழை, எளிய பிரிவினரும் விளையாட்டில் சாதிக்க விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து, மத்திய, மாநில அரசுகள் தரப்பில் பதிலளிக்கவேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு பல்வேறு சலுகைகள் வழங்கி வருகிறது. மறுப்பதற்கில்லை. ஆனால், மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்குவதில்லை. தங்களது உடல் திறனை மீறி சாதிக்கும் அவர்களில் பலர், வெளிநாடுகளில் நடக்கும் சிறப்பு ஒலிம்பிக் (பாராலிம்பிக்) போன்ற போட்டிகளில் கூட பங்கேற்க முடியாத சூழலில் உள்ளனர். அவர்களுக்கு எந்த நிறுவனமும் ஸ்பான்சர் செய்வதில்லை. அரசும் கைவிட்டு விடுவதால், திறமையான பலர் சர்வதேச அளவில் ஜொலிக்க முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

விளையாட்டில் சாதித்த மாற்றுத்திறனாளிகளுக்கு வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு, பொருளாதார உதவிகள் தாராளமாக கிடைக்கின்றன. ஆனால், இந்தியாவில் கிரிக்கெட்டை தவிர மற்ற விளையாட்டுகளுக்கு பெரிய முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இதனால்தான் நமது தேசிய விளையாட்டான ஹாக்கியில் கூட, பின்தங்கிய நிலையில் உள்ளோம். எனவே, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அனைத்து வகையான விளையாட்டையும் அங்கீகரிக்க வேண்டும். மாற்றுத்திறனாளி வீரர்களையும் பாரபட்சம் பார்க்காமல் ஊக்குவித்து, அவர்களின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும். மேற்கண்ட வழக்கில் கூட 90 பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளி, அலுவலக உதவியாளராக நியமிக்கப்படுகிறார். 10ம் வகுப்பு முடித்ததால், சச்சினை கல்வித்தகுதியின் அடிப்படையில் அந்தப்பணியில் நியமிப்பீர்களா என நீதிபதிகள் கேள்வி கேட்கின்றனர். எனவே, மாற்றுத்திறனாளிகளையும் சமமாக பார்க்கும் மனநிலை அனைவருக்கும் ஏற்பட வேண்டும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • jaipourelephant20

  ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

 • delhiformer20

  வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

 • nivarpondyvilupuram20

  நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

 • nivarkadaloorcmvisit20

  நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

 • nivarthirvannamali20

  திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்