SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

300 ஏக்கரில் காட்டை உருவாக்கிய தனி மனிதர்!

2020-10-15@ 13:03:40

நன்றி குங்குமம்

மணிப்பூரில் உள்ளது மரு லங்கோல் மலைத்தொடர். அங்கே 300 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கிறது ஒரு காடு. அதன் பெயர் பன்சிலோக். 250 விதமான தாவரங்களும் 25 விதமான மூங்கில் மரங்களும் காட்டை அலங்கரிக்கின்றன. இதுபோக நூற்றுக்கணக்கான பறவைகளுக்கும், பாம்பு, எறும்புதின்னி, மான், முள்ளம்பன்றி போன்ற பல்லுயிர்களுக்கும் இந்தக் காடுதான் வீடு. ‘வாழ்வின் வசந்தம்’ என்று பொருள்படும் பன்சிலோக்கை உருவாக்கியவர் மொய்ராங்தம் லோயா என்ற தனி மனிதர்!அமேசான் முதல் அனைத்து வகையான காடுகளும் அழிக்கப்பட்டு வரும் சூழலில் ஒரு காட்டை உருவாக்கி தனித்து நிற்கிறார் லோயா. உலகளவில் இயற்கையைப் பாதுகாக்க விரும்பும் இளசுகளுக்கு எல்லாம் இவர்தான் இப்போது ரோல் மாடல். ‘‘என்னை ஒரு ஓவியனாகக் கருதுகிறேன். மற்ற கலைஞர்கள் ஓவியம் தீட்ட கேன்வாஸ், தூரிகை, வண்ணங்களைப் பயன்படுத்துவார்கள். ஆனால், எனக்கு மலைதான் ேகன்வாஸ். அங்கே நடுகின்ற மரங்களும், அதில் பூக்கின்ற மலர்களும்தான் நான் வரைந்த ஓவியம். இந்த ஓவியத்தை வரைய வாழ்நாளே தேவைப்படும். இதுதான் வாழும் கலை...’’ என்கிற லோயா பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது கொபுறு என்ற மலைக்கு அடிக்கடி செல்வார். அதன் ரம்மியமான பசுமை மீதும் அங்கு வாழும் பறவைகளின் மீதும் அவருக்குக் கொள்ளைப் பிரியம். கல்லூரியில் சேர்ந்த பிறகு மலைக்கு அடிக்கடி போக முடியவில்லை. படிப்பு முடிந்து 2000ம் ஆண்டு கொபுறுவைக் காண லோயா ஆர்வத்துடன் சென்றார். இந்த முறை பசுமையான மலை வறண்டு போயிருந்தது. ஒரு மரத்தைக் கூட காணவில்லை. நெல் விவசாயத்திற்காக மரங்கள் எரிக்கப்பட்ட விஷயத்தை அறிந்து நிலைகுலைந்துபோனார் லோயா.

அவரால் உறங்க முடியவில்லை. கொபுறுவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் காடழிப்பு நடப்பது அவரைக் கவலைக்குள்ளாக்கியது. இயற்கையைப் பாதுகாக்க ஏதாவது செய்ய வேண்டும் என்ற குரல் ஒரு சுத்தியைப் போல அவரது தலைமீது அடித்துக்கொண்டே இருந்தது. நண்பர்களுடன் இணைந்து WAHPS (Wildlife And Habitat Protection Society) என்ற அமைப்பை உருவாக்கினார். அவரது முதல் திட்டமே ஒரு காட்டை உருவாக்குவதுதான். ஆனால், காட்டுக்கான இடம் அவ்வளவு சீக்கிரமாக கிடைக்கவில்லை. சில மாதங்கள் அலைந்து திரிந்து மருலங்கோல் மலையைக் கண்டடைந்தார். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பசுமையே இல்லை. இத்தனைக்கும் அது வனத்துறைக்குச் சொந்தமான இடம். ஒவ்வொரு தனி மனிதனும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க இந்தியச் சட்டத்தில் இடமிருப்பதால் அவருக்கு எந்த தடையும் இல்லை. தவிர, அந்த இடத்தில் சட்டத்துக்கு மீறி கட்டப்பட்டிருந்த வீடுகளை வனத்துறையே அகற்றியது. காட்டை உருவாக்குவதற்கான எல்லா பாதைகளும் சீரான பிறகு, தான் பார்த்து வந்த மருத்துவப் பிரதிநிதி வேலையை விட்டுவிட்டு, கையில் சில அத்தியாவசியப் பொருட்களுடன் மருலங்கோல் மலைக்கு 2002ல் வந்து சேர்ந்தார் லோயா.

மலையில் ஒரு குடிசையைக் கட்டி அங்கேயே தங்கினார். ஆரம்பத்தில் ஓக், மூங்கில், பலா மரங்களை நடவு செய்தார். அவரது நோக்கத்தைப் பார்த்து பல நண்பர்கள் இணைந்தனர். உள்ளூர் மக்களும் உதவி செய்தனர். வீட்டுக்குக் கூட செல்லாமல் ஆறு வருடங்கள் அந்தக் குடிசையிலேயே தங்கி பன்சிலோக்கிற்கு அடித்தளமிட்டார். லோயாவின் 17 ஆண்டுக் கால அயராத உழைப்பில் 300 ஏக்கர் பரப்பளவுக்கு பசுமை பூமியாக மாறிவிட்டது பன்சிலோக். 2016ம் ஆண்டு போராளி இரோம் சர்மிளா பன்சிலோக்கிற்கு விசிட் அடித்து ஒரு காட்டு மாங்காய் கன்றை நட்டு வைத்தார். லோயாவின் காட்டைப் பற்றி கேள்விப்பட்டு அயல்நாடுகளில் இருந்தெல்லாம் மணிப்பூருக்குப் படையெடுக்கின்றனர். காட்டைச் சுற்றியிருப்பவர்கள் ‘இப்போதுதான் பறவைகளின் சத்தத்தைக் கேட்கிறோம்’ என்கின்றனர். தவிர, காட்டைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் பருவநிலை மாற்றம் சீரடைந்துள்ளதாகச் சொல்கின்றனர். இவ்வளவு பெரிய காரியத்தைச்  செய்த லோயா நிச்சயம் ஒரு வாழும் கலைஞர்தான்!

தொகுப்பு: த.சக்திவேல்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • humanbodies23

  2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு!: புகைப்படங்கள்

 • jammu23

  ஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்!: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..!!

 • yamuna23

  இனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்!: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..!!

 • chadpuja23

  சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை!: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..!!

 • isrelviva23

  இப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா!: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்