SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தூய்மை பாரத திட்டத்தில் கொள்ளை போகும் மக்கள் வரிப்பணம் குறித்து சொல்கிறார்: wiki யானந்தா

2020-10-15@ 02:06:37

‘‘தேனி மாவட்டம்னாலே மர்மமான மாவட்டமாகத்தான் இருக்கு...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘அடுத்த அரசியல் மேட்டரா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘அந்த மேட்டர் இல்லைப்பா... தேனி மாவட்ட கலெக்டர் பற்றித்தான்.. அவர் எங்கே போறார்? எந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் போன்ற விபரங்கள் அடங்கிய விவரப்பட்டியல் ஒரு வாரம் அல்லது இரு வாரத்திற்கு ஒரு முறை தயார் செய்யப்படுவது வழக்கமானதுதான்... இந்த விபரப்பட்டியல்படி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தகவல் தரப்படும். இத்தகவல் செய்தி துறைக்கும் தெரிய வரும். அப்போது செய்தி துறையினரும் கலெக்டர் நிகழ்ச்சி அறிந்து கலந்து கொண்டு கலெக்டர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளை மக்களுக்கு கொண்டு செல்ல முடியும். ஆனால், சமீப காலமாக தேனி கலெக்டர் விபர பட்டியல் தயாரிப்பே நடப்பதில்லையாம்... இதனால் கலெக்டரின் வெளிபயண விபரம் தெரியாமல் கலெக்டருக்கான தனி அதிகாரிகளை தினமும் தொடர்பு கொண்டு விபரம் பெற வேண்டியதாக உள்ளது என துறை அதிகாரிகள் புலம்பி வருகின்றனராம்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பி.எம் கிசான் சம்மான் திட்ட ஊழல் விவகாரம் எப்பிடிப் போகுது..’’
‘‘இதில் ரூ.110 கோடி அளவுக்கு மோசடிகள் நடைபெற்றன. போலி விவசாயிகள் லட்சக்கணக்கில் பலன் பெற்றனர். இவர்களிடம் இருந்து பணத்தை திரும்ப பெற 13 மாவட்டங்களில் அதி தீவிர பணிகள் நடைபெற்றன. வங்கி கணக்குகளை முடக்கி சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியாமலேயே பணம் எடுத்தது, கணக்கில் பணம் இல்லாதவர்களின் வீடுகளுக்கு வருவாய்துறை, காவல்துறை, வேளாண்மை துறை அதிகாரிகள் குழுவாக சென்று பணத்தை வங்கி கணக்கில் செலுத்த செய்தது, பிற மாவட்ட அலுவலர்களை ஆன் டூட்டியில் வரவழைத்து வசூல் என்று பல வகையிலும் ‘ரெக்கவரி’ நடைபெற்று தற்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.

ஏறக்குறைய ரூ.100 கோடி அளவில் பணம் திரும்ப வந்துவிட்டதால் வேளாண்மை துறை உயர் அதிகாரிகள் தற்போது மகிழ்ச்சியில் உள்ளார்களாம். இது தொடர்பாக வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆய்வு கூட்டம் நடந்தபோது ரூ.110 கோடியில் ரூ.100 கோடியை திரும்ப பெற்றுவிட்டோம், இதுவே பெரிய சாதனை என்ற அளவில் உயர் அதிகாரிகள் பெருமை பேசிக்கொண்டார்களாம். இதையெல்லாமா சாதனையாக நினைத்துக்கொள்வது என்று கீழ்நிலையில் உள்ள அதிகாரிகள் தலையில் அடித்துக்கொண்டார்களாம்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘குமரி மாவட்ட விவகாரம் எதுவும் இருக்கா..’’
‘‘தமிழக முதல்வருக்கும், குமரி மாவட்டத்திற்கும் அப்படி என்ன பொருத்தமோ தெரியவில்லை ஒவ்வொரு முறை அவரது பயண திட்டம் வகுக்கும்போதும் தடங்கல்கள் ஏற்பட்டு தள்ளிப்போவது, மூன்றாவது அல்லது நான்காவது முறையாக பயண திட்டத்தில் அவர் வந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. கடந்த ஆண்டு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கு வருகைக்கு திட்டமிடப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு நான்கைந்து முறை அது தள்ளிப்போனது. பின்னர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தார். இப்போது கொரோனா ஆய்வுக்காகவும், வளர்ச்சி பணிகளை தொடங்கி வைக்கவும் அக்டோபர் 14ம் தேதி முதல்வர் வருகைக்கு திட்டமிட்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு பந்தல் அமைக்கும் பணிகள் வரை நிறைவு பெற்றிருந்தது.

பங்கேற்பாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு முடிவும் வந்தது. ஆனால் அவரது தாயார் மறைவையொட்டி நிகழ்ச்சிகள் ரத்தானது. ஏற்கனவே அவரது வருகைக்காக போடப்பட்ட சாலைகள் மழையால் உடைந்து சீரழிந்த இடங்களில் மீண்டும் சாலைகள் போடப்பட்டு சீர் செய்யப்பட்டது. மீண்டும் மழைக்காலம் தொடங்கிவிட்டதால் அந்த ஒட்டுபோட்ட சாலைகள் எப்படியும் உடைந்து தெறிக்கும் என்பதால் அடுத்த வருகையின்போது மீண்டும் அந்த சாலையை சீரமைக்க வேண்டுமே என்ற கவலையில் மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறையினர் உள்ளனர்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தூய்மை பாரத திட்டத்தில் மக்கள் வரிப்பணம் கொள்ளை போகுதாமே..’’
‘‘கிரிவல மாவட்டத்தில் நடைபெறும் தூய்மை பாரத திட்டத்தினால், மக்களுக்கு பலன் கிடைத்ததோ இல்லையோ, அதை செயல்படுத்தும் அதிகாரிகளுக்கு கைமேல் பலன் கிடைத்துவிடுகிறது. ஊரக வளர்ச்சி மாவட்ட அதிகாரி அலுவலகத்தில், இத்திட்டத்தின் கண்காணிப்பாளராக இருக்கும் அமிர்தமானவரின் ‘போன்’ வந்தாலே மாவட்டத்தில் உள்ள பிடிஓக்கள் அலறுகிறார்களாம். தூய்மை பாரத திட்டத்தில், மாவட்டம் முழுவதுக்குமான பிளீச்சிங் பவுடர் முதல் குப்பைத்தொட்டி வரை எல்லாவற்றையும் அமிர்தமே கொள்முதல் செய்துவிடுகிறாராம். எங்கே வாங்கினார், எவ்வளவு வாங்கினார், என்ன விலைக்கு வாங்கினார் என்பதெல்லாம் மர்மம்.

ஆனால், அமிர்தம் குறிப்பிடும் தொகையை உடனுக்குடன் பிடிஓக்கள் ‘செக்’ போட்டு கொடுத்துவிட வேண்டும் என்பது உத்தரவு. ஒட்டுமொத்த கொள்முதலில் வரும் ‘கமிஷனை’ அனுபவிப்பது ஒருத்தர், செக்கில் கையெழுத்து போட்டுவிட்டு ஆடிட்டிங் நடக்கும் போது, கைகட்டி பதில் சொல்லவது மட்டும் நாங்களா என பிடிஓக்கள் புலம்புகின்றனர். இவரது ‘டார்ச்சர்’ தாங்க முடியாமல் தவித்தாலும், அவரை எதுவும் செய்ய முடியாதாம். காரணம், அந்த துறையின் மாவட்ட உயர் அதிகாரிக்கு தெரிந்தே வெகுஜோராக இந்த பகல் கொள்ளை நடக்கிறதாம்’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • rainpurevi111

  தமிழகத்தை மிரட்டும் புரெவி புயல்... கொட்டும் மழை; கொந்தளிக்கும் கடல் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்!!

 • radish3

  புவியீர்ப்பு சக்தியில்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கியை வெற்றிகரமாக வளர்த்த நாசா விஞ்ஞானிகள்!: புகைப்படங்கள்

 • farmers_proteeee11

  மத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து வீறுகொண்டெழுந்த விவசாயிகள்... டெல்லியில் 8வது நாளாக ஆவேச கோஷங்களை எழுப்பி போராட்டம்!!

 • 03-12-2020

  03-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 300kg11

  பிரான்சில் 300 கிலோ எடையுள்ள நபரை, வீட்டினை உடைத்து கிரேன் மூலமாக மீட்ட மீட்புப் படையினர்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்