SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆறுகளின் அணி என்பதால் ஆரணியானது... அயோத்தி தசரத சக்ரவர்த்திக்கு புத்திர பாக்கியம் தந்த ஈஸ்வரர்

2020-10-13@ 12:35:47

ஆர் என்றால் அத்தி, அத்தி மரங்கள் அதிகம் இருந்ததால் ஆரணி எனப்பெயர் பெற்றது. சம்ஸ்கிருதத்தில் ஆரண்யம் என்பது காடு. இப்பகுதி காடுகள் நிறைந்து காணப்பட்டதால் ஆரணி ஆயிற்று என்பர். மேலும் ஜவ்வாது மலையில் உற்பத்தியாகும் கமண்டல நதியும், கண்ணமங்கலத்தின் அருகிலிருக்கும் அமராத்தி மலையில் உற்பத்தியாகும் நாகநதியும், ஆரணி அருகில் சம்புவராயநல்லூரில் சங்கமம் ஆகிறது. ஆறுகளின் அணி என்பதால் ஆறு அணி, ஆரணி என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.

கிபி.4 ஆம் நூற்றாண்டு முதல் 9 ஆம் நூற்றாண்டு வரை பல்லவர்களின் ஆட்சியின் போது சென்னை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய தற்கால மாவட்டங்களை உள்ளடக்கிய தொண்டை மண்டலத்தின் முக்கிய வணிகத்தலமாக ஆரணி விளங்கி வந்தது. மேலும் கி.பி.1640 முதல் 1901 ஆம் ஆண்டு வரை ஆரணியை ஜாகீர்தார், சிவாஜி ஆகியோர்கள் ஆரணியை நகரமைத்து சத்திய விஜய நகரத்தை தலைமையிடமாக கொண்டு ஆண்டதாக வரலாறு உள்ளது. ஆரணிக்கு அருகே உள்ள புதுக்காமூரில் அயோத்தியை ஆண்ட தசரத சக்ரவர்த்திக்கு வாரிசு இல்லாததால், புத்திரகாமேஷ்டி யாகம் செய்ததையடுத்து புத்திரபாக்கியம் கிடைத்ததாக வரலாறு.

1951 முதல் 3ம் நிலை நகராட்சியாகவும், கடந்த 2008 ம் ஆண்டு, முதல் தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்ந்தது.    ஆரணியின் நிர்வாகம் முழுவதும் வடாற்காடு மாவட்டத்தின் அங்கமாக மாறியது. பட்டு நெசவு, அரிசி ஆலைகள், விவசாயம் வளர்ச்சியடைந்த தொழிலாக இருந்து வருகிறது.மேலும் ஆரணி என்றாலே நினைவுக்கு வருவது பாரம்பரிய கைத்தறி பட்டு சேலை தான். பல ஆயிரம் குடும்பங்களின் முதுகெலும்பாக ஆரணியில் கைத்தறி பட்டு நெசவு தொழில் உள்ளது. பட்டு நெசவைத்தவிர, விவசாயம், நெல் அரிசி உற்பத்தி தொழில்கள் முதன்மை தொழிலாக உள்ளது. இங்கு தயாரிக்கும் பட்டு நெசவானது, இந்திய அளவில் சிறப்புற்று விளங்குகிறது. அதேபோல் நெல்லினை உயர்நுட்ப தரத்துடன் அரிசியாக்கி வியாபாரம் செய்யும் 400 க்கும் மேற்பட்ட அதிநவீன ஆலைகள் உள்ளது.ஆரணி தொகுதியில் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஆரணி நகராட்சியில் மக்கள் தொகை 92,375 பேர், ஆரணி ஒன்றியம், மேற்கு ஆரணி ஒன்றியத்தில் உள்ள 75 ஊராட்சிகளில் 1,89,491 பேர் உள்ளனர்.

ஆரணி சுற்றி நெசவு, விவசாயம், அரிசி ஆலைகள் முக்கிய தொழிலாக இருந்தாலும் வெறும் தொழிலாகத்தான் உள்ளது.நெசவுத்தொழில் சார்ந்த கல்வி பயில் வெளிமாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே ஆரணியில் பட்டு பூங்கா, அரிசி உற்பத்தி பூங்கா, வேளாண் கல்லூரி, நெசவு தொழில் சார்ந்த தொழிற் கல்லூரிகள் தொடங்கினால் தொழிலும், அதை சார்ந்த படிப்புகள் மூலம் தமிழகத்தில் ஆரணி மிகப்பெரிய வர்த்தக நகரமாக உருவாகும்.
ஆரணியில் கடந்த 1965 ஆம் ஆண்டு முதல் பட்டு பூங்கா அமைக்கப்படும் என்பது தேர்தல் காலத்து வாக்குறுதியாக உள்ளது. மாவட்டத்திலேயே அனைத்து துறைகளிலும் அதிக வருவாய் ஈட்டித்தருவது ஆரணி தான். ஆனால் ஆரணி நகராட்சியாக தரம் உயர்த்தியும் முன்னேற்றமில்லை, ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் ஆமைவேகத்தில் நடந்து வருகிறது.

கால்வாய், குடிநீர் வசதிகள், தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் கேள்வி குறியாக உள்ளது. ஆரணி அரசு மருத்துவமனையில் இரவு 10 மணிக்கு மேல் மருத்துவர்கள் இல்லை. செவிலியர்கள் மட்டுமே சிகிச்சை அளிப்பதாகவும், அவர்களும் நோயாளிகளை வேலூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்து விடுவதாக புகார்கள் உள்ளது. 12 மருத்துவர்களுக்கு பதிலாக 7 மருத்துவர்கள் மட்டுமே உள்ளதால், நோயாளிகள் சிகிச்சைக்கு காத்திருக்க வேண்டியுள்ளது.
ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் தனியார் குடிநீர் தொழிற்சாலைகள் அனுமதியின்றி தொடங்கப்பட்டுள்ளது. அரசு அனுமதித்துள்ள அளவைவிட கூடுதலாக பல லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு, சுத்திகரிக்கப்படாமலேயே விற்பனை செய்வதாக புகார்கள் உள்ளது.ஆரணியில் ஒருங்கிணைந்த பஸ்நிலையம், புறவழிச்சாலை திட்டம் கிடப்பில் உள்ளது. இத்திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும். ஆரணி சுற்றுவட்டாரத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளநிலையில் ஆரணி தச்சூர் சாலையில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையை விரிவு படுத்த வேண்டும். தொழில் சார்ந்த வளர்ச்சி நகரமாக விளங்கும் ஆரணி பகுதியில் உற்பத்தி செய்த பொருட்களை வெளிமாநிலம், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யமுடியாத நிலை உள்ளது.

வர்த்தகம் சார்ந்த வாணிபம் செய்ய அரசு நிறுவனங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆரணி சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நிரந்தர சார்பதிவாளர் நியமிக்கப்படாமல் (பொறுப்பு) அலுவலர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். அதேபோல் ஆரணி சார்பதிவாளர் அலுவலகம் குதிரை லாயத்தில் இயங்கி வருவதால் போதிய இடவசதி, பத்திர பதிவு செய்ய வரும் பொதுமக்களுக்கு இருக்கை வசதி, கழிவறை வசதி இல்லாதால் நீண்ட நேரம் அலுவலக வளாகத்திலும், சாலையோரங்களில் காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே ₹1 கோடி மதிப்பில் புதிய சார்பதிவாளர் அலுவலகம் கட்டுவதாக அறிவித்த திட்டத்தை தொடங்க வேண்டும். எனவே ஆரணி மக்களின் பிரச்னைகளை போக்க அரசும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 29-05-2021

  29-05-2120 இன்றைய சிறப்பு படங்கள்

 • 27-05-2021

  27-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 15-05-2021

  15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 13-05-2021

  13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 11-05-2021

  11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்