SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அலட்சியம் வேண்டாம்

2020-10-13@ 01:43:45

‘நீரின்றி அமையாது உலகு’ என்கிறார் வள்ளுவர். உலகின் அனைத்து ஜீவராசிகளுக்கும் தண்ணீர் மிகவும் அவசியம். உறை கிணற்றில் தண்ணீர் இறைத்த காலம் மாறி, ஆயிரம் அடி போர்வெல் போட்டாலும் தண்ணீர் கிடைக்காத நிலை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது. இதேநிலை தொடர்ந்தால் பெட்ரோல், டீசல் ஆகியவற்றை வெளிநாடுகளில் இருந்து வாங்குவது போல், தண்ணீரையும் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தண்ணீரின் தேவையை முதலில் அரசு உணரவேண்டும். ஒவ்வொருவரும் மழை நீரை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபடுவது நல்லது. ஒரு காலத்தில் இலவசமாக கிடைத்த குடிநீர், இன்று கிராமங்களில் கூட காசு கொடுத்தால் தான் கிடைக்கும் என்ற நிலைக்கு வந்து விட்டது. இயற்கை வளங்கள் தொடர்ந்து சூறையாடப்பட்டால், விலை உயர்ந்த உணவு பட்டியலில் தண்ணீர் முதலிடம் பிடித்து விடும் காலம் வெகுதொலைவில் இல்லை.

தற்போது தமிழகமெங்கும் பரவலாக மழை பெய்து வருகிறது. மழைநீரை வீணாக்காமல், முறையாக சேகரித்தால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். கண்மாய், ஏரி மற்றும் குளங்களை தூர்வார வேண்டியது மிக அவசியம். குடிமராமத்து பணிகளில் ஆளுங்கட்சியினரின் தலையீட்டால், பல மாவட்டங்களில் கண்மாய்களை தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் முறையாக நடப்பதில்லை. இந்த திட்டத்தில் முறைகேடு நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது தமிழக அரசின் பொறுப்பு. இயற்கை அள்ளித்தரும் மழைநீரை சேமித்தால் கோடைக்காலத்தை கண்டு அச்சம் கொள்ள தேவையில்லை.

மழையின்மை, சாலை மற்றும் பல்வேறு திட்டங்களுக்காக பல்லாயிரக்கணக்கான பரப்பளவு நிலம் கையகப்படுத்தப்படுகிறது. போதிய லாபம் கிடைக்காததால், விவசாயிகளும் விவசாயத்தை கைவிட்டு வருகின்றனர். மழைநீர் சேகரித்தால் தான், நிலத்தடி நீர்மட்டம் குறைவதை தடுக்க முடியும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே மழைநீர் வீணாக கடலில் கலந்து வருவது வேதனை தருகிறது. கோடைக்காலத்தில் குடிநீருக்காக சென்னை தொடங்கி மாநிலத்தின் முக்கிய நகரங்களில் குடங்களுடன் பெண்கள் போராட்டத்தில் ஈடுபடும் சம்பவங்களுக்கு பஞ்சமில்லை.

வளர்ச்சி என்ற பெயரில் தண்ணீர், காற்று மற்றும் இயற்கை வளங்கள் மீது ‘கை’ வைக்கப்படுவது நல்லதல்ல. இயற்கையை அழித்து வளர்ச்சியை எட்டினாலும், அதை அனுபவிக்க ஆரோக்கியமான மனித சமுதாயம் தேவை என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும். இயற்கை வளங்களை காப்பதில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த தலைமுறையினரின் ஆரோக்கியம் கேள்விக்குறியாக மாறிவிடும். தமிழகத்தில் தற்போது பருவமழையால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து வரும் அதிகாரிகள், மழைநீர் வீணாக செல்வதை தடுத்து, அதை சேமிக்கும் முயற்சியில் இறங்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மழை நீரை சேமிப்பதில் அரசின் நடவடிக்கை முன்மாதிரியாக இருக்க வேண்டும். மக்களின் நலனை கருத்தில் கொண்டு மழைநீர் வீணாவதை தடுக்கும் முயற்சியில் அரசு இறங்க வேண்டும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • jaipourelephant20

  ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

 • delhiformer20

  வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

 • nivarpondyvilupuram20

  நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

 • nivarkadaloorcmvisit20

  நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

 • nivarthirvannamali20

  திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்