SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜனநாயகத்திற்கு தலைகுனிவு

2020-10-12@ 00:03:47

சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகளாகியும் தமிழகத்தில் ஜாதி ஒழியவில்லை என்பதற்கு   புவனகிரி சம்பவம் நேரடியாக சாட்சியம் கூறுகிறது. கடலூர் மாவட்டம் மேல்புவனகிரி அருகே தெற்கு திட்டை ஊராட்சி பெண் தலைவரான  ராஜேஸ்வரியை தரையில் அமர வைத்து அவமரியாதை செய்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை உருவாக்கியுள்ளது. தலித் ஊராட்சி தலைவர் என்பதால் அவருக்கு அமர ஒரு நாற்காலி கூட கொடுக்கப்படவில்லை. சுதந்திர இந்தியாவில்  இத்தகைய நிகழ்வுகள் ஜனநாயகத்திற்கே தலைகுனிவை உருவாக்கி வருகின்றன.

இடஒதுக்கீடு அடிப்படையில் உள்ளாட்சிக்கு தேர்வு செய்யப்படும் தலித் தலைவர்கள், ஏற்கனவே இருக்கும் சாதிய கட்டுமானங்களால் பல்வேறு தொல்லைகளுக்கு உள்ளாகின்றனர். இட ஒதுக்கீடு அடிப்படையில் ஒடுக்கப்பட்டவர்கள் தேர்வு  செய்யப்படும்போது, பெரும்பாலும் அவர்கள் மேல்வர்க்கத்தின் கைப்பாவையாகவே இருக்கின்றனர். உள்ளாட்சி கூட்டங்களில் அவர்கள் காட்சி பொருளாகவே வந்து செல்ல வேண்டும். தாழ்த்தப்பட்ட பஞ்சாயத்து தலைவர்களுக்கு ஏற்படும்  அவமானங்களும் அதிகம். அதிலும் அதிமுக ஆட்சியில் இத்தகைய சம்பவங்கள் மென்மேலும் அதிகரித்து வருகின்றன.

கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு ஊராட்சி மன்ற தலைவரை சுதந்திர தினத்தன்று கொடியேற்ற விடாமல் தடுத்தனர். விழுப்புரம் மாவட்டம் சேந்தநாடு ஊராட்சியிலும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்தது.  திருவண்ணாமலை மாவட்டத்தில் பழங்குடி சமுதாயத்தை சேர்ந்த ஊராட்சி தலைவரை சவக்குழி தோண்ட வைத்தனர். இப்போது நடந்துள்ள புவனகிரி சம்பவத்திலும் கூட தெற்கு திட்டை ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி, தன்னை தரையில்  அமர வைத்து அவமானப்படுத்தியதை யாரிடமும் வாய் திறந்து சொல்லவில்லை. சமூக வலைதளங்களில் பரவிய படங்கள் மூலமே அந்நிகழ்வு வெளிச்சத்திற்கு வந்தது.

சக மனிதர்களுக்கு கொடுக்கிற மரியாதையை கூட ஒரு ஊராட்சியின் தலைவருக்கு வழங்க மறுக்கும் மனித ஜென்மங்களை என்னவென்று சொல்வது?. இத்தகைய சூழலில் ஓட்டுபோட்ட மக்கள் அவருக்கு என்ன மரியாதை கொடுப்பர்?  அவரிடம் பொதுமக்கள் ஊர் பிரச்னையை எப்படி முறையிடுவர்? என்பதெல்லாம் அடுத்தடுத்து வரும் கேள்விகள். இட ஒதுக்கீடு அடிப்படையில் பெயருக்கு வெற்றி பெறுவதோடு தலித் தலைவர்களின் பங்களிப்பு முடிந்து விடுகிறது. அதன்  பின்னர் நிர்வாகத்தை நடத்துவதில் இருந்து, நிதியை செலவழிப்பது வரை அவர்கள் ரப்பர் ஸ்டாம்பாக இயங்க வேண்டிய அவலம் உள்ளாட்சி அமைப்புகளில் காணப்படுகிறது.

தமிழகத்தில் முன்பு பாப்பாப்பட்டி, கீரிப்பட்டியில் பஞ்சாயத்து தேர்தல் நடத்தக்கூட பல ஆண்டுகள் போராட வேண்டியதிருந்தது. தெற்கு திட்டை நிகழ்வு இன்னமும் ஜாதிய பிம்பங்களின் வக்கிர வடிவங்களை நம் கண் முன்னே நிறுத்தி  கொண்டிருக்கின்றன. தலித் தலைவர்கள் தரையில் அமர்ந்திருக்கும்போது, ஜனநாயகம் தலைநிமிர வாய்ப்பில்லை.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • jaipourelephant20

  ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

 • delhiformer20

  வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

 • nivarpondyvilupuram20

  நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

 • nivarkadaloorcmvisit20

  நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

 • nivarthirvannamali20

  திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்