SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பதில் சொல்லுமா அரசு?

2020-10-11@ 00:38:41

தமிழகத்தில் ஆண்டுதோறும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக மாநில குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டில் போக்சோ வழக்குகள் 39 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.உத்திரபிரதேச மாநிலத்தில் இளம்பெண் கொடூரமான முறையில், கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். நாக்கு அறுக்கப்பட்ட நிலையில் படுகாயங்களுடன்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உ.பி. மாநிலத்தில் இதுபோன்ற  சம்பவங்கள் தொடர்கதையாக நடந்து வரும் நிலையில், தமிழகமும் மற்றொரு உ.பியாக மாறி விடுமோ என்ற அச்சம் நிலவி வருகிறது.

கடந்தாண்டு திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே முடி திருத்தும் தொழிலாளியின், 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில், வாயில், மூக்கில் மின்சாரம் பாய்ச்சி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளியாக கருதப்பட்ட வாலிபரை, திண்டுக்கல் மாவட்ட மகிளா நீதிமன்றம் போதிய ஆதாரங்கள் இல்லையெனக்கூறி விடுதலை செய்தது. சிறுமி பலாத்கார கொலையை  கண்டித்தும், மேல்முறையீடு கோரியும், நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் 3.50 லட்சம் சலூன் கடைகள் அடைக்கப்பட்டன. இந்த சிறுமி மட்டுமல்ல... தமிழகத்தில் 18 வயதிற்குட்பட்ட சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டு கொலையாவது தொடர்ந்து நடந்து வருகிறது. சென்னை அயனாவரம், அடுக்குமாடி குடியிருப்பில் 12 வயதான மாற்றுத்திறனாளி  சிறுமியை லிப்ட் ஆபரேட்டர், காவலாளி உட்பட 17 பேர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம்  தமிழகத்தையே அதிர வைத்தது. காஞ்சிபுரம்  மாவட்டத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கும்பலிடமிருந்து தப்பிய 16 வயது சிறுமி,திண்டுக்கல் மாவட்டம், பழநியில் 7ம் வகுப்பு மாணவி, அதே மாவட்டத்தில் 13 வயது  சிறுமி, சிவகங்கையில் 9ம் வகுப்பு மாணவி, கோவை  பன்னிமடை பகுதியில்  ஒரு சிறுமி, தேனி மாவட்டம், பூதிப்புரத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான 7 வயது சிறுமி,  திருச்சி மாவட்டத்தில்  மனவளர்ச்சி குன்றிய 14 வயது சிறுமி என தமிழகமெங்கும் ஏராளமான
சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் அவலம் தொடர்கிறது. இவர்களில் பலர் கூட்டு பாலியல் பலாத்கார கொடுமையையும் சந்திக்கின்றனர்.

பெண்ணின் திருமண வயது 18 என நிர்ணயிக்கப்பட்டிருக்கும் சூழலில், விபரமறியாத சிறுமிகள் சீரழிக்கப்படுவதை தடுக்க பாலியல் வன்கொடுமை  சட்டங்களை கடுமையாக்க வேண்டும். இதுதொடர்பாக விசாரிக்க மாவட்டந்தோறும் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படுமென முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். மாதர்  சங்கங்களும் இதையே வலியுறுத்தி வருகின்றன. ஆனால், இதுவரை நிறைவேற்றப்படவில்லை.பாலியல் புகார் வந்தால் உடனடியாக வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை கைது  செய்ய வேண்டும். விரைவாக விசாரித்து 6 மாதங்களுக்குள்  தண்டனை வழங்கப்படுவதை  உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற குற்றங்கள் கட்டுப்படுத்தப்படும். இதற்கான ஏற்பாடுகளை அரசு  உடனடியாக  மேற்கொள்ள வேண்டும். பாலியல் வன்கொடுமை சட்டங்களை கடுமையாக்குவதே உத்திரபிரதேசம், வடமதுரை சம்பவங்கள் தொடராமல்  இருப்பதற்கு உதவும்.

தனது மகளின் கொலைக்கு உரிய நீதி கிடைக்கவில்லையே என்ற பெருஞ்சோகத்தில், வடமதுரை சிறுமியின் தாய் கூறிய வார்த்தைகள் மனதை  தைக்கின்றன... ‘‘நீதியும் எங்களை கைவிட்டா நாங்க எங்கே போறது? அப்போ சொல்லுங்க... என் புள்ளை எப்படித்தான் செத்தா? யார் தான் கொன்னது?  பொம்பள பிள்ளைய பெத்தா இதுதான் கதியா?’’ என கதறி அழுகிறார். இந்த தாயின் கண்ணீருக்கு, அரசுகள்தான் இனி பதில் சொல்ல வேண்டும்?

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 02-12-2020

  02-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • pramos1

  கப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..!!

 • pamaka1

  20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்!!

 • jammuele1

  ஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்!: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..!!

 • nuclearscientist1

  ஈரானில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியின் உடல் டெஹ்ரான் நகரில் அடக்‍கம்!: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்