SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கலெக்டர் ஆபீசில் தாமரை கட்சியினர் செய்யும் அலம்பலை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2020-10-10@ 00:33:39

‘‘மாங்கனி மாவட்டத்தில் தாமரை கட்சிக்காரங்க செய்யும் அலம்பலுக்கு அளவே இல்லாமல் போய்விட்டதாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘ஆமா..வழக்கமாக மக்கள் பிரதிநிதிகள்தான், அதிகாரிகளிடம் சென்று பணிகள் குறித்த விவரங்களை கேட்பார்களாம். ஆனால் இங்கு மட்டும் தாமரை  கட்சியில் உறுப்பினர் கார்டு வைத்திருப்பவர்கள் கூட கேள்வி கேட்கிறாங்களாம். சமீபத்தில் கட்சி நிர்வாகிகள் என்று பத்து பேர், கலெக்டர் ஆபீசுக்கு  வந்தாங்களாம். பிரதமரின் கிஷான் திட்ட ஊழல் எப்படி நடந்தது, இந்த மாவட்டத்தில் பிரதமரின் எத்தனை திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது, அவை  எந்த நிலையில் உள்ளது, அதற்காக எவ்வளவு நிதி செலவிடப்பட்டுள்ளது என்று அடுக்கடுக்காக 20 கேள்விகளை கேட்டு அதிர வச்சாங்களாம். அதோடு  பட்டியலை கொடுத்தால் நாங்களே ஒவ்வொரு பகுதிக்கும் சென்று ஊழல் நடக்கிறதா என்று கள ஆய்வு செய்வோம் என்றும் ஒரு போடு  போட்டாங்களாம். திட்டங்களுக்கு லட்சக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்த எம்பி, எம்எல்ஏக்கள் கூட, இப்படி ஒரு விவரத்தை இதுவரை கேட்டதில்லை.  இதெல்லாம் கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு என்று புலம்புகிறார்களாம் அதிகாரிகள்’’ என்றார் விக்கியானந்தா.

 ‘‘குமரி மாவட்டத்தில் அரசு துறைகளில் பணியாற்றி வெளி மாவட்டங்களுக்கு மாறுதலாகி செல்கிறவர்கள், எப்படியாவது மீண்டும் குமரி  மாவட்டத்துக்கே திரும்பி வந்து விடுகிறார்களாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘உண்மைதான்...அதுவும் காவல்துறையில் இது மிகவும் அதிகமாக நடக்கிறது. அந்த வகையில் ஏற்கனவே குமரி மாவட்டத்தில் பணியாற்றி பல்வேறு  சர்ச்சைகளில் சிக்கி, லஞ்ச ஒழிப்பு போலீஸ் பொறியில் சிக்க வேண்டிய இரண்டு அதிகாரிகள், நூலிழையில் தப்பி வெளி மாவட்டங்களுக்கு பணியிட  மாற்றம் செய்யப்பட்டார்கள். 2, 3 ஆண்டுகள் கழித்து பிடிக்க வேண்டியவர்களை பிடித்து, மீண்டும் குமரி மாவட்டத்துக்கே வந்து விட்டார்கள்.இந்த இருவரும் இப்போது இரட்டை குழல் துப்பாக்கியாக இருந்து குமரி மாவட்டத்தில் வசூலில் கலக்கி வருகிறார்களாம். இவர்களில் ஒருவர்,  சமீபத்தில் எஸ்டேட் பிரச்னை ஒன்றில் லட்சங்களை குவித்து விட்டாராம். உள்துறைக்கே நான் 25 லட்சம் கொடுத்திருக்கிறேன். சும்மாவா இருக்க  முடியும் என நெருக்கமானவர்களிடம் மனம் விட்டு பேசும்போது சொல்லி வருகிறாராம். கொடுத்தது 25 என்றாலும் அதற்கு 3 மடங்கு வரை இப்போது  சம்பாதித்து விட்டாராம்.

இவரை போல் மற்றொரு அதிகாரி ஆடு திருடிய வழக்கில் கூட எதையும் விடுவதில்லையாம். சமீபத்தில் பிரபல ரவுடி ஒருவர்  ஆடு திருடி விட்டதாக சிக்க, அவரிடம் கறக்க வேண்டிய தொகையை கறந்து விட்டு, கேஸ் இல்லாமல் முடித்து விட்டாராம். ஆனால் இவர்கள்  இருவரும் மாவட்ட உயர் அதிகாரியை கண்டால், பவ்யமாக நடித்து எளிதில் தப்பி விடுகிறார்களாம். ஏராளமான புகார் வந்தும் என்ன செய்வதென்று  தெரியாமல் உயர் அதிகாரி குழப்பத்தில் உள்ளார்’’ என்றார் விக்கியானந்தா.  ‘‘விபத்தை மறைத்தார்களாமே அதிகாரிகள்..’’ ‘‘வேலூர் அருகில் அணையே இல்லாத கட்டு வட்டார அலுவலக வாகன ஓட்டுனர் அங்குள்ள அதிகாரிக்கும், ஒரு முக்கிய ஆளுங்கட்சி பிரமுகருக்கும்  வாகனம் ஓட்டுவாராம். கடந்த மாதம் இரவு அதிகாரியை அவரது வீட்டில் விட்டு வருவதற்காக வண்டியை ஓட்டி வந்தவர், அங்குள்ள மூலைகேட்  என்ற இடத்தில் விபத்தை ஏற்படுத்தி விட்டாராம். இந்த விபத்தில் சிறுமி ஒருவரின் கால் மீது வாகனம் ஏறி இறங்கி விட்டதாம். அந்த சிறுமி  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி போலீசில் வழக்கும் பதிவு செய்யவில்லையாம். அப்படியே மூடி மறைக்கப்பட்டதாம்.

அதோடு மருத்துவமனையில் சிறுமியின் உறவினர்களிடம் 30 முதல் 40 ஆயிரம் வரை தருவதாகவும் பேரம் நடந்ததாம். ஆனால் சிறுமியின்  தரப்பில் 2 லட்சம் வரை கேட்டார்களாம். இந்த பஞ்சாயத்து மாவட்ட உச்ச அதிகாரியிடம் சென்றதாம். இந்த விஷயத்தில் நான் ஏதும்  சொல்வதற்கில்லை. இது எப்படியாவது வெளியில் கசிந்து பேப்பரில் செய்தி ஏதாவது வந்தால் உங்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பேன் என்று  கூறி அனுப்பி விட்டாராம். இப்போது இதுதான் அணையான கட்டு ஊரில் பேச்சாக உள்ளதாம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘சென்னையில இருக்கிற இன்ஸ்பெக்டர் எல்லாம் செம கடுப்புல இருக்காங்களாமே..’’ ‘‘ம்ம்.... சென்னையில இருக்கிற காவல்நிலையங்களில் பணிபுரியும் இன்ஸ்பெக்டருங்க எல்லாம் கடந்த சில நாட்களாகவே அதிக அளவில் மீட்டிங்  வைக்கிறார்களாம். முதலில் இணை கமிஷனருடன் மீட்டிங் அட்டன் பண்ணனுமாம். அதுக்கப்புறம் துணை கமிஷனருடன் மீட்டிங். கடைசியா உதவி  கமிஷனர் மீட்டிங் கூப்பிடுவாராம்.

இதனால் ஒரு நாளைக்கு குறைந்தது நான்கு மணி நேரம் செலவாகிறது என கடுப்புல இருக்காங்களாம். இந்த தொடர் மீட்டிங்கால் பொதுமக்கள் காவல்  நிலையங்களுக்கு சென்றால் ஆய்வாளர்களை பார்க்க முடிவதில்லை. மேலும் அந்தந்த பகுதியில் இருக்கிற மெடிக்கல் ஷாப் வைத்திருப்பவர்கள்  வணிகர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் இப்படி எல்லாரையும் ஒரு திருமண மண்டபத்தில் வரவைத்து அங்கேயே மீட்டிங் நடத்த சொல்றாங்களாம் . அந்த  செலவுகளை எல்லாம் இன்ஸ்பெக்டர்கள் தான் ஏத்துகனும்னு சொல்றாங்களாம் . அதனால சென்னை இன்ஸ்பெக்டர்கள் போலீஸ் உயர் அதிகாரிகள்  மேல செம கடுப்புல இருக்காங்களாம்’’ என்றார் விக்கியானந்தா.    

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • rainpurevi111

  தமிழகத்தை மிரட்டும் புரெவி புயல்... கொட்டும் மழை; கொந்தளிக்கும் கடல் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்!!

 • radish3

  புவியீர்ப்பு சக்தியில்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கியை வெற்றிகரமாக வளர்த்த நாசா விஞ்ஞானிகள்!: புகைப்படங்கள்

 • farmers_proteeee11

  மத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து வீறுகொண்டெழுந்த விவசாயிகள்... டெல்லியில் 8வது நாளாக ஆவேச கோஷங்களை எழுப்பி போராட்டம்!!

 • 03-12-2020

  03-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 300kg11

  பிரான்சில் 300 கிலோ எடையுள்ள நபரை, வீட்டினை உடைத்து கிரேன் மூலமாக மீட்ட மீட்புப் படையினர்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்