SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தண்ணீர்.. தண்ணீர்..

2020-10-10@ 00:32:44

தமிழகம் உள்பட நாடு முழுவதும்  இயற்கை வளங்களை சுரண்டி அதன் மூலம் தங்கள் வாழ்வை வளமாக்கி கொள்பவர்கள்  அதிகரித்து  வருகின்றனர். முதலீடு இல்லாமல் பலர் பெருத்த லாபமடைந்து  வருகின்றனர். அதில் ஒன்று தான் நிலத்தடி நீரை உறிஞ்சி குடிநீராக விற்பனை   செய்வது. உரிமம் பெற்று நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்து குடிநீராக  கேன்களில் சப்ளை செய்யும் நிறுவனங்கள் ஒருபுறம் இயங்கி வந்தாலும்,  சட்டவிரோதமாக  தமிழகம் முழுவதும் நிலத்தடி நீரை உறிஞ்சி பணம்  பார்ப்பவர்களும் உள்ளனர். இதுபோன்ற தண்ணீர் கள்வர்கள்  மீதும் அந்த  நிறுவனங்கள் மீதும்  நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு  உத்தரவிட்டுள்ளது. கொரோனா பேரிடர் காலத்தை முன்னிட்டு தண்ணீர் நிறுவனம்  நடத்த உரிமம் கோரி விண்ணப்பித்துள்ள அனைத்து நிறுவனங்களும் தற்காலிகமாக   இயங்க அனுமதிக்கலாம் என்றும் இந்த நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் தண்ணீரில்  

15 சதவீதத்தை ஏழைகளுக்கு உதவும் வகையில் அரசிடம் வழங்க வேண்டும் என்றும்  உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் நீதிமன்ற உத்தரவை 143  நிறுவனங்கள்  நிறைவேற்றியுள்ளது என்றும், 367 நிறுவனங்கள் நிறைவேற்றவில்லை என்றும் அரசு  தரப்பில் கூறப்பட்டுள்ளது. கொரோனா பேரிடர் காலத்தில் ஏழைகளுக்கு உதவும்  வகையில் தண்ணீர் வழங்காத நிறுவனங்களை தொடர்ந்து செயல்பட அனுமதிக்க   வேண்டியதில்லை என்று நீதிமன்றம் கடிந்து  கொண்டுள்ளது.  போர்வெல் போடுவது,  நிலத்தடி நீரை ஒரு நாளைக்கு இவ்வளவு சதவீதம் தான்  எடுக்க வேண்டும் போன்ற  விதிமுறைகள் இருந்தாலும், அதையெல்லாம் காற்றில் பறக்கவிடும் நிறுவனங்கள்  இரவு பகலாக நிலத்தடி நீரை உறிஞ்சி  வியாபாரம் செய்து வருகின்றன. இதனால்  அந்த குறிப்பிட்ட பகுதியில் நிலத்தடி நீர் ஆதாரம் குறைவதுடன் கட்டிடங்களும்  பாதிக்கப்படுகின்றன.  நிலத்தடி நீர் குறைவதால் பூகம்பம், நிலநடுக்கம் போன்ற  இயற்கை சீற்றங்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

இதனால், சென்னை உள்பட  தமிழகம் முழுவதும் விதிகளை மீறி அளவுக்கு அதிகமாக தண்ணீர் எடுக்கும்  நிறுவனங்கள் மீது அரசு உடனடியாக  நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலத்தில்  இருந்து எடுக்கப்படும் தண்ணீர் அளவை கணக்கிடும் கருவிகள் பொருத்தவும்  நடவடிக்கை மேற்கொள்ள  வேண்டும். விவசாய நிலங்கள் முதல் வீடுகள் வரை போர்வெல்  போட்டு நிலத்தடி நீரை எடுப்பதற்கும் விதிமுறைகளை அரசு வகுத்துள்ளது.   நிலத்தடி நீரை பாதுகாப்பதற்காகத்தான் மழைநீர் சேகரிப்பு திட்டம், ஏரி,  குளங்களை தூர்வாரி தண்ணீரை சேமித்தல் போன்ற நடவடிக்கைகளை  மேற்கொள்ள  அவ்வப்போது நீதிமன்றமும் அரசை வலியுறுத்தி வருகிறது. நகரங்களில்  குடியிருப்புகள் பெருகி நெருக்கடிகள் அதிகரிக்கும் போது  தண்ணீருக்காக  கடுமையாக அலைய வேண்டிய நிலை எதிர்காலத்தில் ஏற்பட்டுவிடும். எனவே,  தண்ணீரின் முக்கியத்துவத்தை சாதாரண மக்கள்  முதல் பொறுப்பில் உள்ளவர்கள் வரை  அனைவரும் உணர வேண்டிய தருணமிது. தண்ணீர் மனிதனுக்கு மட்டுமல்ல..  நிலத்துக்கும் அவசியம். சிக்கனமாக பயன்படுத்தி சேமிக்க தவறிவிட்டால்  தங்கத்தின் விலை தண்ணீருக்கும்  மக்கள் தர வேண்டியதிருக்கும் என்பது  குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 02-12-2020

  02-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • pramos1

  கப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..!!

 • pamaka1

  20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்!!

 • jammuele1

  ஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்!: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..!!

 • nuclearscientist1

  ஈரானில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியின் உடல் டெஹ்ரான் நகரில் அடக்‍கம்!: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்