SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆர்ச்சர் அபார பந்துவீச்சு ராயல்சுக்கு 175 ரன் இலக்கு

2020-10-01@ 00:44:52

துபாய்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 175 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நடப்பு தொடரில் தொடர்ச்சியாக 2 அசத்தல் வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் முன்னிலை வகிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, தனது 3வது லீக் ஆட்டத்தில் நேற்று நைட் ரைடர்சை சந்தித்தது. ஹாட்ரிக் வெற்றி முனைப்புடன் அந்த அணி களமிறங்கிய நிலையில், தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 7வது இடத்தில் பின்தங்கியிருந்த கொல்கத்தா அணி சற்று நெருக்கடியுடன் இந்த போட்டியை எதிர்கொண்டது.

இரு அணிகளிலுமே மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. டாஸ் வென்ற ராயல்ஸ் கேப்டன் ஸ்மித் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். கொல்கத்தா தொடக்க வீரர்களாக ஷுப்மன் கில், சுனில் நரைன் களமிறங்கினர். முதல் போட்டியில் 9 ரன் எடுத்த நரைன், 2வது போட்டியில் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்திருந்தாலும், கொல்கத்தா அணி அவருக்கு மேலும் ஒரு வாய்ப்பு கொடுத்தது ஆச்சரியம்தான். ஆனால், அந்த வாய்ப்பை நரைன் வீணடித்தார். தடுமாற்றத்துடன் விளையாடிய அவர் 15 ரன் மட்டுமே எடுத்து (14 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) உனத்கட் வேகத்தில் ஸ்டம்புகள் சிதற பரிதாபமாக பெவிலியன் திரும்பினார். அடுத்து கில்லுடன் நிதிஷ் ராணா இணைந்தார். இருவரும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்த முயற்சித்தனர். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 46 ரன் சேர்த்தது. ராணா 22 ரன் எடுத்து (17 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) திவாதியா பந்துவீச்சில் பராக் வசம் பிடிபட்டார். அரை சதத்தை நெருங்கிய கில் 47 ரன் எடுத்து (34 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) ஆர்ச்சர் வேகத்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடிக் கொண்டிருந்த ராணா, கில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தது நைட் ரைடர்சுக்கு பின்னடைவை கொடுத்தது. கேப்டன் தினேஷ் கார்த்திக் 1 ரன் மட்டுமே எடுத்து ஆர்ச்சர் வேகத்தில் விக்கெட் கீப்பர் பட்லர் வசம் பிடிபட்டார். ராயல்ஸ் பந்துவீச்சில் ஆர்ச்சரின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தது. யார்க்கர், பவுன்சர், இன் ஸ்விங்கர்... என்று விதவிதமாய் போட்டு எதிரணி பேட்ஸ்மேன்களை அவர் நிலைகுலைய வைத்தார். இந்நிலையில், அதிரடி வீரர்கள் ரஸ்ஸல், மோர்கன் இருவரும் இணைந்து கொல்கத்தா ஸ்கோரை உயர்த்தினர். 3 இமாலய சிக்சர்களை பறக்கவிட்டு மிரட்டிய ரஸ்ஸல் 24 ரன் எடுத்து (14 பந்து) ராஜ்பூத் பந்துவீச்சில் உனத்காட் வசம் பிடிபட்டார்.

கம்மின்ஸ்  12 ரன் எடுத்த நிலையில், டாம் கரன் பந்துவீச்சில் சாம்சனிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். கேகேஆர் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன் குவித்தது. மோர்கன் 34 ரன் (23 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்), நாகர்கோட்டி 8 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ராயல்ஸ் பந்துவீச்சில் ஆர்ச்சர் 4 ஓவரில் 18 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். ராஜ்பூத், உனத்காட், கரன், திவாதியா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து 20 ஓவரில் 175 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல்ஸ் களமிறங்கியது. பட்லர், கேப்டன் ஸ்மித் இருவரும் துரத்தலை தொடங்கினர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jaipourelephant20

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

  • delhiformer20

    வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

  • nivarpondyvilupuram20

    நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

  • nivarkadaloorcmvisit20

    நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

  • nivarthirvannamali20

    திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்