SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வலுக்கும் எதிர்ப்புகள்

2020-09-28@ 03:28:46

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்களுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. இம் மசோதாக்களை ஏற்கக்கூடாது என எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றாக சென்று வலியுறுத்தியும் ஜனாதிபதி இதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விளைபொருட்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களுமே விவசாயிகளுக்கு கடும் பாதிப்பை உருவாக்க கூடியவையாகும். ரயில்வே, பிஎஸ்என்எல் என மத்திய அரசு துறைகள் ஒவ்வொன்றாக தனியார் மயமாகும் சூழலில், விவசாயத்தையும் தனியார் கார்ப்பரேட்டுகள் கையில் ஒப்படைக்கும் யுக்தியாக வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட பஞ்சாபில் வேளாண் மசோதாக்களை எதிர்த்து விவசாயிகள் ரயில் மறியல், பஸ் மறியல் செய்து வருகின்றனர். விவசாயிகளின் தொடர் போராட்டத்தால் அங்கு போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இம்மசோதா நிறைவேற்றத்தால் பாஜ கூட்டணியிலும் பிளவு தொடங்கியுள்ளது. பாஜ தலைமையிலான கூட்டணியில் கடந்த 22 ஆண்டு காலமாக அங்கம் வகித்து வந்த சிரோன்மணி அகாலிதளம், மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டணியில் இருந்து விலகிவிட்டது. கடந்த வாரமே அக்கட்சியை சேர்ந்த ஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது மத்திய அமைச்சர் பதவியை அதிரடியாக ராஜினாமா செய்தார். பஞ்சாப் மக்களின் மனோநிலையை துல்லியாக கணித்த சிரோன்மணி அகாலிதளத்தின் நடவடிக்கைக்கு நாடு முழுவதும் வரவேற்பு காணப்படுகிறது.

தமிழகத்திலும் மசோதா நிறைவேறிய நாளில் இருந்து விவசாயிகள் தங்கள் எதிர்ப்புகளை மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தெரிவித்து வருகின்றனர். கடந்த 25ம் தேதியன்று தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டு அரசுகளுக்கு எதிராக மறியல் போராட்டம் நடத்தினர். தமிழகம் முழுவதும் இன்று திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன. ஆனால் ஆளும் அதிமுக அரசு, விவசாயிகளின் போராட்டங்களையோ, எதிர்க்கட்சிகளின் கருத்துகளையோ கவனத்தில் கொள்ள மறுக்கிறது. வேளாண் மசோதாக்கள் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என தொடர்ந்து மத்திய அரசுக்கு பக்கபாட்டு பாடி வருகின்றனர். தமிழக மருத்துவ மாணவர்களின் எதிர்காலத்தை சூனியமாக்கிய நீட் போன்ற தேர்வுகளையே கண்டு கொள்ளாத அதிமுக அரசு, வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றத்தில் விவசாயிகளை நட்டாற்றில் விட்டு விட்டது.

பஞ்சாப் விவசாயிகளின் மனோநிலையை உணர்ந்து அகாலிதளம், தனது மத்திய அமைச்சர் பதவியை தூக்கி எறிந்து விட்டது. ஆனால் தமிழகத்தில் அதிமுக அரசு குறைந்தபட்சம் பாஜவுக்கு எதிராக குரல் கொடுக்க கூட தயக்கம் காட்டுகிறது. அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதாவின்படி வெங்காயம், உருளைகிழங்கு உள்ளிட்ட பொருட்கள் கூட வரும்காலங்களில் பதுக்கி வைக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. சுருக்கமாக சொல்லப்போனால் ஜிஎஸ்டி வந்த பிறகு வியாபாரிகள் எந்தளவுக்கு பாதிக்கப்பட்டார்களோ, அதே போன்ற ஒரு இழிநிலையை வேளாண் மசோதாக்களால் விவசாயிகளும் அடைவர். ஆட்சியையும், கட்சியையும் காப்பாற்ற வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கும் அதிமுகவினர், மத்திய அரசின் கைப்பாவையாக மாறிவிட்டனர். விவசாயிகளின் சாபங்களை பெறும் மத்திய, மாநில அரசுகள் விரைவில் அதற்கு பதில் சொல்ல வேண்டியது வரும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • twins22

  தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

 • mumbaitrain22

  7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

 • dinosauregg22

  பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

 • locusts22

  எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

 • rainbowtree22

  உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்