SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிசான் முறைகேடு குறித்து யார் கேட்டாலும் வாய் திறக்கக் கூடாது என்ற மேலிட உத்தரவு பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2020-09-28@ 02:43:04

‘‘தப்பை செய்துட்டு... அதை எப்படி மறைப்பது என்று தெரியாமல் அதிகாரிகளும், மேலிடமும் திணறி வருகிறதாமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கிசான் நிதியுதவி திட்டத்தில் நடந்துள்ள முறைகேடுகள் இந்திய அளவில் தமிழகத்துக்கு பெரிய தலைகுனிவை ஏற்படுத்தி இருக்காம்... இது தொடர்பாக நிறைய கேள்விகளை கேட்டு மத்திய அரசு துளைத்தெடுத்து வருகிறதாம். இதை சமாளிக்கவே சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டாங்க... இதுவரை பலரை கைது செய்தும் ஊழல் நூலின் ஆரம்பம் எது என்று தெரியாமல் சிபிசிஐடி அதிகாரிகள் திணறி வர்றாங்க.. அவங்க கைது செய்தவங்க எல்லாம் சிறிய பதவியில் இருக்கிறவங்களாம்... இந்த நிலையில தான் கிசான் திட்ட மோசடியில் உயரதிகாரிகளை வளைக்கும் முடிவுக்கு சிபிசிஐடி முடிவு செய்து இருக்காம்.

இதற்கும் ஒரு காரணம் இருக்குனு மாங்கனி மாவட்டத்துல சொல்றாங்க... கைதானவங்க... சஸ்பெண்ட் ஆனவங்க... பணியில் இருக்கும் வேளாண் துறையை சேர்ந்தவர்கள் யாரும் கிசான் மோசடி குறித்து யார் என்ன கேட்டாலும் வாய் திறக்கக்கூடாதுனு மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்திருக்காம். அதிலும் மாங்கனி மாவட்டத்துல சஸ்பெண்ட் செய்யப்பட்ட வேளாண்துறை தற்காலிக ஊழியர், பயனாளி சேர்க்கைக்காக பணம் கொடுத்த ஒருவரிடம் பேசும்போது, தான் வசூலித்த பணத்தையெல்லாம் உயரதிகாரிகளிடம் தான் கொடுத்தேனு கூறிட்டாராம்.

அந்த ஆடியோ அப்படியே வெளியாயிடுச்சாம். இதனால இனிமேல் யாரும் யார் கிட்டேயும் பேசக்கூடாதுனு சொல்லியிருக்காங்களாம். மாவட்ட உயரதிகாரிகள், தற்போது செயல்பாட்டில் இருக்கும் திட்டங்களை பற்றி கூட சொல்லக்கூடாதுனு ஒரு உத்தரவு வந்திருக்காம். அதனால யாருகிட்டேயும் பேசாம, ரோபோ மாதிரி ஆபீசுக்கு வந்து போறாங்களாம் அதிகாரிகள். எங்கே ஊழல் வெளிச்சத்திற்கு வந்திருமோனு அனைத்து அதிகாரிகளுக்கும் வாய் பூட்டு போடப்பட்டிருக்குனு ஊழியர்கள் மத்தியில் பரபரப்பான பேச்சா இருக்கு...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ஆட்டை கடிச்சு, மாட்டை கடிச்சு... இப்போது எங்கள் தொகுதியிலேயே கை வைக்கிறீங்களான்னு தாமரை மேல, இலை நிர்வாகிகள் கோபத்துல இருக்காங்களாமே, உண்மையா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில், மதுரை கிழக்கு தொகுதி முக்கியமானது. இந்த ஒரு தொகுதியில மட்டும் 2.50 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் இருக்காங்க. இத்தொகுதியில் இலை தரப்பில் போட்டியிட சரியான வேட்பாளர் கிடைக்கலையாம். இதனை தெரிந்து கொண்ட தாமரையை சேர்ந்தவர்கள், இந்த தொகுதியை தங்களுக்கு ஒதுக்கியது போல், இப்போதே தொகுதி முழுவதும் சின்னம் வரைந்து, கட்சி பெயரையும் எழுதி வர்றாங்க...

இது இலை தரப்பு நிர்வாகிகளிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்காம். இன்னும் கூட்டணியே முடிவாகவில்லை. எந்த தொகுதி யாருக்குன்னு பங்கீடு முடியல. இது எதுவும் நடைபெறாத நிலையில், பாஜவினர் எல்லை மீறி போறாங்க... நாங்க பார்த்துட்டு சும்மா இருக்க மாட்டோம்னு இலை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கோபத்தில் இருக்காங்களாம். இதுவரை இலை போட்டியிட்டு வந்த இத்தொகுதியை கூட்டணிக்கு கொடுக்கக்கூடாது எனவும், தாமரை பிரசாரத்துக்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைத்து தடுக்க வேண்டும் எனவும் இலையின் உள்ளூர் நிர்வாகிகள் கட்சி மேலிட தலைமையின் கவனத்துக்கு கொண்டு போய் இருக்காங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பணம் திருடிட்டு தான் சிறைக்கு வந்தோம்... சிறையிலும் பணத்தை கேட்டு அடிபட்டு சாகனுமா...’’ என்று கைதிகள் அழறாங்களாமே.. கொடுமையாக இருக்கே...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘வெயில் கொளுத்தும் ஊரில் உள்ள மத்திய சிறையில் பரபரப்புக்கும், பிரச்னைக்கும் பஞ்சமே இல்லை. வெயில் ஊர் சரக சிறைத்துறை உயரதிகாரி ஜெயமானவருக்கும், கண்காணிப்பாளர் ஸ்ரீவில்லிபுத்தூர் அம்மன் பெயரை கொண்டவருக்கும் ஒத்து போவதில்லையாம். சிறையில் செல்போன், கஞ்சா உள்ளிட்டவை ஆய்வு செய்யும் க்யூஆர் குழுவில் உள்ளவர்கள், உயரதிகாரிக்கு வேண்டிய ஆட்கள் என்பதால், கண்காணிப்பாளரை மதிப்பதில்லையாம். பணிக்கு சீருடையில் வராமல், விருப்பம்போல மப்டியில் சிறைக்கு வந்து செல்கின்றனராம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு க்யூஆர் டீமில் உள்ளவர்களை கண்காணிப்பாளர் மாற்றியபோதே, நாங்கள் உயரதிகாரியின் ஆட்கள், மீண்டும் அந்த இடத்திற்கு வந்து விடுவோம் என சவால் விட்டு, மீண்டும் அவர்களை அதே இடத்திற்கு அவரின் ஆசியோடு மாற்றப்பட்டனராம்...

இந்நிலையில், வெயிலூரில் மணல் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நபரிடம், நீ தான் மணல் கடத்தலில் கட்டு, கட்டாக பணத்தை சேர்த்து இருக்கிற... எங்கள் செலவுக்கு ரூ.2 லட்சம் பணம் தர வேண்டும்... இல்லையென்றால் அடித்து உதைப்போம் என மிரட்டினாங்களாம். இதுகுறித்து கைதி, அவரது மனைவியிடம் தகவல் தெரிவித்து முதல்கட்டமாக ரூ.50 ஆயிரத்தை கைதியிடம் கொடுத்துள்ளாராம். மீதி பணத்தை கேட்டு தொந்தரவு செய்துள்ளனராம். ஜாமீனில் வெளியே வந்த கைதி, சிறையில் தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து, சிறைத்துறை தலைமையக உயரதிகாரிக்கு புகார் மனு அனுப்பி வைத்துள்ளாராம்.

இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்னு கண்காணிப்பாளருக்கு உத்தரவு வந்ததாம். இதையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு கைதி மற்றும் அவரது மனைவியை அழைத்து கண்காணிப்பாளர் ஒரு மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினாராம். இதையடுத்து க்யூஆர் டீம் காவலர்கள் முன்னெச்சரிக்கையாக தங்களிடம் உள்ள ஆதாரங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்காங்களாம்.. வெயில் ஊர் மத்திய சிறையில் க்யூஆர் டீமில் உள்ள காவலர்கள் பணம் கேட்டு கைதிகளை அடித்து துன்புறுத்தி பணம் பறித்து அதிகாரிகளுக்கு வழங்குவது தொடர் கதையாக உள்ளதாக சிறை காவலர்கள் ரகசியமாக பேசிக் கொள்கிறார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pakisthan21

  ஆப்கானிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் உள்பட 15 பேர் பலி!: புகைப்படங்கள்

 • kasirangaa21

  கொரோனா தொற்றால் மூடப்பட்டிருந்த அசாம் காசிரங்கா தேசியப்பூங்கா, உயிரியல் பூங்காக்கள் சுற்றுலாப் பயணிகள் பார்வைக்காக மீண்டும் திறப்பு!: புகைப்படங்கள்

 • kamaladance21

  அமெரிக்க தேர்தல் 2020: அனல் பறக்கும் பிரச்சாரத்திற்கு இடையே குடையுடன் கூல் நடனமாடிய கமலா ஹாரிஸ்.. வைரலாகும் புகைப்படங்கள்

 • thirupati21

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா: கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி..!!

 • police21

  காவலர் வீர வணக்க நாள்: நாட்டைப் பாதுகாப்பதற்காக, வீரதீர செயல்களில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த காவலர்களின் நினைவு சின்னத்தில் உயரதிகாரிகள் மலர்த்தூவி மரியாதை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்