SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒருத்தன் உப்பு தின்னுட்டு இன்னொருத்தன் தண்ணீர் குடித்த கதையை சொல்கிறார்: wiki யானந்தா

2020-09-26@ 00:08:09

‘‘பூட்டு மாவட்டத்துல இருக்கிற கோயில்ல கூட கரை வேட்டிகளின் கலெக்சன் வேட்டை நடக்குதாமே...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘பூட்டு மாவட்டத்துல இருக்கிற பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கொரோனா காரணமாக பக்தர்கள் தரிசனம் செய்ய தடை இருந்தது. ஊரடங்கு நேரத்துல பணி நியமனம் உள்ளிட்ட சில விஷயங்கள் காதோடு காது வைத்ததுபோல், அதிகாரிகள் நடத்தி முடிச்சுட்டாங்களாம். பழநி கோயிலில் நாதஸ்வரம் மற்றும் தவில் கலைஞர்கள் சிலரை பணி நிரந்தரம் செய்து உத்தரவு வந்துள்ளதாம். இதில் கரைவேட்டிகளும் அதிகாரிகளும் சத்தமே இல்லாமல் பல லட்சங்கள் அள்ளிட்டாங்களாம். கோயில்லயும் கொள்ளையா என பக்தர்கள் மனம் புழுங்குகின்றனராம்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கோவைல என்ன விவகாரம்..’’‘‘கோவை புறநகர் மாவட்ட காவல்துறையில், சமீபத்தில் புதிதாக ஒரு அதிகாரி பதவி ஏற்றுள்ளார். இவர், மீது மாவட்ட எஸ்.பி.க்கு அதிருப்தியாம். இந்த அதிகாரி, இடமாறுதலாக கோவை புறநகருக்கு வரும்போது, கூடவே ஒரு பட்டாளத்தை அழைத்து வந்து, தனது எல்லைக்குள் வேவு பார்க்க வைத்துள்ளார். சீட்டாட்ட கிளப், கஞ்சா மொத்த விற்பனை, , லாட்டரி விற்பனை, டாஸ்மாக் ‘பார்’’ மாமூல் வசூல் என அத்தனை சட்ட விரோத செயல்களையும் செய்ய ஏற்ற இடம்... அதிகமாக பணம் குவிக்கும் இடங்களை அந்த கும்பல் செலக்ட் செய்துள்ளதாம். இந்த கும்பல், மேற்கண்ட எல்லா சட்ட விரோத செயல்களையும் துணிச்சலாக செய்வதுடன், காக்கி ஐயாவுக்கு மாதம்ேதாறும் தவறாமல் மாமூல் அனுப்பிவிடுகிறது. கப்பம் சரியாக கட்டுவதால், தொழில் ஜரூராக நடக்கிறது. நிலைமை விபரீதமாகி செல்வதால், அதிரடி நடவடிக்கை எடுக்க, காக்கி உயரதிகாரி ஒருவர் களத்தில் இறங்கி உள்ளாராம். ஆனால், மேலிடத்தில் இருந்து தடை உத்தரவு வர, அவர், அதிர்ந்து கப்சிப்னு தன் அறையிலேயே உட்கார்ந்துவிட்டாராம். எல்லாம் கரன்சி செய்யும் மாயாஜாலம் என்பதை அப்போது புரிந்துகொண்டாராம்... இனிமேல் ஆபரேஷன் எல்லாம் கிடையாது.. கிடைத்ததை சாப்பிட்டுவிட்டு சம்பளத்தை வாங்கிட்டு போகணும்னு முடிவு செஞ்சுட்டாராம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பணத்தை சுருட்டியது ஒருத்தரு... அவங்க செய்த தப்புக்கு... வசூலிக்க எங்களை அனுப்புவதா என்று வேளாண் துறை அதிகாரிகள் கொந்தளித்து போய் இருக்காங்களாமே, உண்மையா...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘பி.எம் கிசான் மோசடியில் பணத்தை சுருட்டியவர்களில் சிலரை கைது செய்து இருக்காங்க... பலமான பின்னணி உள்ளவர்கள் தப்பிவிட்டார்கள்... இருந்தாலும் முறைகேடு செய்த விவசாயி இல்லாத நபர்களிடம் இருந்து பணத்தை வசூலிக்க மற்ற மாவட்டங்களில் இருந்து வேளாண் துறை அதிகாரிகளை அனுப்பி இருக்காங்க.. அதிக மோசடி நடந்த 13 மாவட்டங்களில் பணம் வசூலிக்க நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் பலவற்றில் இருந்து 22 உதவி வேளாண்மை அலுவலர்களையும், பல அதிகாரிகளையும் மாற்றுப்பணியாக கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பிஎம் கிசான் மோசடி அதிகம் நடைபெற்ற மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஏற்கனவே வேளாண்மை துறையில் அலுவலர்கள் பணியிடம் பல காலியாக இருந்து வரும் நிலையில் இருக்கின்ற பணியாளர்களையும் இப்படி மாற்றுப்பணிக்கு அனுப்பி வைத்தால் வேளாண்மை பணிகள் ஒட்டு மொத்தமாக முடங்காதா... யாரோ செய்த மோசடிக்கு நாங்கள் பரிகாரம் காண வேண்டுமா என்று கொந்தளித்து போய் இருக்காங்களாம்.. ’’ என்றார் விக்கியானந்தா.

‘‘உப்பு தின்னவன் ஒருத்தன்... தண்ணீர் குடிக்கிறது இன்னொருத்தன் என்பது வேளாண் துறையில சரியா தான் இருக்கு... அப்புறம் அல்வா மாவட்டத்துல என்ன விசேஷம்...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘அல்வா மாவட்டத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வளம் கொழிக்கச் செய்த தாமிரபரணி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மணல் கொள்ளையர்களின் கையில் சிக்கி சின்னாபின்னமானது. ஆற்றின் குறுக்கே பாதை அமைத்தும் மணல் கடத்தப்பட்டு வந்தது. மணல் கடத்தலை தடுக்கப் போன ஒரு தனிப்பிரிவு காவலர் நாங்குநேரி அருகே மணல் மாபியாவால் கொலையும் செய்யப்பட்டார். அதற்கு பிறகும் மணல் கடத்தல் தொடர்ந்தது தான் கொடுமை. மணல் கடத்தலை தடுக்க காவல்துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்த பிறகு சிறிது காலம் குறைந்த மணல் கடத்தல் மீண்டும் தலைதூக்கியது. இந்நிலையில் தற்போது பொறுப்பேற்றுள்ள மணியான காக்கி உயரதிகாரி கடத்தல்காரர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார்.

மணல் கடத்தலுக்கு உடந்தையாக போலீஸ் அதிகாரிகள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். தனது உளவுப்பிரிவு மூலம் கண்டுபிடித்த காக்கி உயரதிகாரி மணல் கடத்தலுக்கு துணை போன 2 எஸ்ஐக்கள், 5 போலீசார் என 7 பேரை கடந்த 15 நாட்களுக்குள் சஸ்பெண்ட் செய்துள்ளார். காவல்துறையின் நெல்லை மாவட்ட மாஜி உயரதிகாரிக்கு மாவட்டத்தின் அனைத்து மூலைகளில் இருந்தும் குவாரி உரிமையாளர்கள், மணல் கொள்ளையர்கள் கப்பம் கட்டி வந்தனராம். இதில் வளமாக அவர் வாரிச் சுருட்டியதால் அவரது பதவிக்கு வேட்டு வைக்கப்பட்டதாம். புதிய அதிகாரியின் அதிரடியால் மாமூல் வாங்கி கொடுத்த காக்கிகள் நமது தலை தப்புமா என கலக்கம் அடைந்துள்ளனர். யார் மூலமாவது விடிவு காலம் பிறக்கும் நினைச்சோம்... புது அதிகாரியால நிரந்தரமா வந்தா சந்தோஷம் தான்னு பொதுமக்கள் பேசிக்கிறாங்க...’’ என்றார் விக்கியானந்தா.   


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pakisthan21

  ஆப்கானிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் உள்பட 15 பேர் பலி!: புகைப்படங்கள்

 • kasirangaa21

  கொரோனா தொற்றால் மூடப்பட்டிருந்த அசாம் காசிரங்கா தேசியப்பூங்கா, உயிரியல் பூங்காக்கள் சுற்றுலாப் பயணிகள் பார்வைக்காக மீண்டும் திறப்பு!: புகைப்படங்கள்

 • kamaladance21

  அமெரிக்க தேர்தல் 2020: அனல் பறக்கும் பிரச்சாரத்திற்கு இடையே குடையுடன் கூல் நடனமாடிய கமலா ஹாரிஸ்.. வைரலாகும் புகைப்படங்கள்

 • thirupati21

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா: கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி..!!

 • police21

  காவலர் வீர வணக்க நாள்: நாட்டைப் பாதுகாப்பதற்காக, வீரதீர செயல்களில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த காவலர்களின் நினைவு சின்னத்தில் உயரதிகாரிகள் மலர்த்தூவி மரியாதை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்