பாடல்களால் என்றென்றும் உயிர்த்திருப்பார் எஸ்.பி.பி: மு.க.ஸ்டாலின் இரங்கல்
2020-09-26@ 00:04:28

சென்னை: பாடல்களால் என்றென்றும் உயிர்த்திருப்பார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: பாடல்களால் என்றென்றும் உயிர்த்திருப்பார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். ‘ஆயிரம் நிலவே வா’ என்று, அமுதக் குரலால் தமிழ் மக்களின் அகத்தில் நுழைந்து, அரை நூற்றாண்டுக்கும் மேலாக இசை ஆட்சி நடத்தி, இந்தியாவின் பல மொழிகளிலும் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய ‘‘பாடும் நிலா’’ எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார் என்பதை ஏற்க மறுக்கிறது மனம். கொரோனா கொடுங்காலம் நம்மிடமிருந்து அந்த அற்புத இசைக் கலைஞனைப் பிரித்துவிட்டது. பரபரப்பான உலகில், இயந்திரம் போல் மாறிவிட்ட மக்களின் மன அழுத்தத்திற்கு இயற்கையான மாமருந்தாக வாய்த்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.
அவருடைய மறைவு, இசை உலகிற்கு பேரிழப்பாகும். நான் உட்பட அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள், தங்களின் சொந்த குடும்பத்தில் ஏற்பட்ட இழப்பாகவே இதனைக் கருதுகிறோம். 16 இந்திய மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியதுடன், பல படங்களுக்கு இசையமைத்தும், திரைப்படங்களில் நடித்தும், பிரபல நடிகர்களுக்கு மாற்றுக்குரல் கொடுத்தும் பல்துறை வித்தகராக விளங்கியவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இந்திய அரசின் பத்ம, பத்மவிபூஷண் விருதுகள் மற்றும் பல மாநில அரசுகள், திரைத்துறை விருதுகளால் பெருமை பெற்றவர். முத்தமிழறிஞர் கலைஞரின் அன்பிற்குரியவர்.
இனிய பாடகர் எஸ்.பி.பி. மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன், தம்பி சரண் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறையினருக்கும் ரசிகர்களுக்கும், திமுக சார்பில் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். காலம் அவரைப் பிரித்தாலும், காற்றில் தவழ்ந்து கொண்டிருக்கிறது அவரது தேன்குரல். என்றும் இளமை மாறாத அந்த இனிய குரல் தந்த பாடல்களால் என்றென்றும் உயிர்த்திருப்பார், இறவாப் புகழ் கொண்ட பாடகர் எஸ்.பி.பி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
குடும்பத்துடன் தற்கொலை முயற்சியில் 3 பேர் பலி உயிர் பிழைத்த பிளம்பர் தூக்கிட்டு தற்கொலை
எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் சிறார் மன்ற கட்டிடம்: கமிஷனர் திறந்து வைத்தார்
ஒப்பந்த காலம் முடிந்து 2 ஆண்டாகியும் ஆமை வேகத்தில் திருவொற்றியூர் மேம்பால பணி: வாகன ஓட்டிகள் கடும் அவதி
வியாசர்பாடி குற்றப்பிரிவில் பிரின்டர் பழுது எனக்கூறி சிஎஸ்ஆர் வழங்காமல் அலைகழிக்கும் போலீசார்: பொதுமக்கள் குற்றச்சாட்டு
ஜோஸ் ஆலுக்காஸின் ‘‘ஷைன் ஆன் கேர்ள்’’
அகத்தீஸ்வரர் கோயில் நிலத்தை வைத்து வங்கியில் ரூ.69 கோடி கடன் பெற்றது எப்படி? அதிகாரிகள் விசாரணை நடத்த ஆணையர் உத்தரவு
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்