SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராஜ கீதமே....!

2020-09-26@ 00:03:22

இசைவானில் பாடும் நிலவாய், சிறகடித்து பறந்த இசைக்குயில் தனது மூச்சை நிறுத்திக் கொண்டது. ஆம், திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் (74) உயிரிழந்த செய்தி இசை ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் எனப்படும் எஸ்.பி.பாலசுப்ரமணியம், 1946ம் ஆண்டு, ஜூன் 4ம் தேதி ஆந்திர மாநிலம், நெல்லூரில் பிறந்தவர். இசையின் மீது இளம் வயதிலேயே தீராத ஆர்வம் கொண்டவர். 1966ல் ஒரு தெலுங்கு படத்தின் மூலம் பின்னணி பாடகராக அறிமுகம் ஆனார். தமிழில் முதல்முறையாக எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் ‘ஹோட்டல் ரம்பா’ என்ற படத்தில், ‘அத்தானோடு இப்படியிருந்து எத்தனை நாளாச்சு’ என்ற பாடல் மூலம் அறிமுகமானார். அந்த படம் வெளியாகாததால், பின் 1969ல் ‘சாந்தி நிலையம்’ படத்தில் ‘இயற்கை என்னும் இளைய கன்னி’ என்ற பாடலின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் எம்.ஜி.ஆருக்காக அவர் பாடிய, ‘ஆயிரம் நிலவே வா’ இவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமடைய வைத்தது.

இசையமைப்பாளர் இளையராஜாவுடன் துவக்கத்தில் பாவலர் பிரதர்ஸ் இசைக்குழுவில் பாடகராக பயணித்தபோது, இருவருக்கும் நட்பு மலர்ந்தது. இளையராஜா திரைப்படங்களில் இசையமைக்க துவங்கியபோது, இருவர் கூட்டணியில் ஏராளமான பாடல்கள் சூப்பர் ஹிட் ஆயின. ‘மன்றம் வந்த தென்றலுக்கு’, ‘இளையநிலா பொழிகிறதே’, ‘சங்கீத ஜாதி முல்லை’, ‘காதலின் தீபமொன்று’, ‘சங்கீத மேகம்...தேன் சிந்தும் நேரம்’, ‘பொன்மானே சங்கீதம் பாட வா’ இப்படி ஆயிரக்கணக்கான பாடல்களில் இந்த கூட்டணி தமிழ் ரசிகர்களின் இதயத்தை கொள்ளை அடித்தது. குறிப்பாக, மூச்சு விடாமல் இவர் பாடிய, ‘மண்ணில் இந்த காதலின்றி’ என்ற பாடல் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. இதுவரை 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் சுமார் 50 படங்களுக்கு இசையமைத்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் உட்பட பல முன்னணி நடிகர்களின் டப்பிங் படங்களுக்கு தெலுங்கில் பின்னணி குரல் தந்துள்ளார். குறிப்பாக, கமலுக்கு 100க்கும் மேற்பட்ட படங்களுக்கும், காந்தியாக நடித்த பென் கிங்ஸ்லிக்கும் இவரே டப்பிங் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கில் ‘பெல்லண்டி நூரெல்ல பந்த’ என்ற படத்தின் மூலம் முதன்முறையாக நடிகராகவும் களமிறங்கினார். தமிழில் ‘மனதில் உறுதி வேண்டும்’ படத்தின் மூலம் குணச்சித்திர நடிகராக அறிமுகமாகி, ‘கேளடி கண்மணி’, ‘சிகரம்’ போன்ற படங்களில், ஹீரோவாகவும் நடித்துள்ளார்.  1979ல் சங்கராபரணம் படத்தில் ‘ஓம் காரநாதானு’ என்ற பாடலுக்கு இவருக்கு முதன்முறையாக தேசிய விருது கிடைத்தது. தொடர்ந்து ‘ஏக் துஜே கேலியே’ இந்தி படத்திற்காகவும், ‘சாகர சங்கமம்’, ‘ருத்ர வீணா’ போன்ற தெலுங்கு படங்கள், தமிழில் ‘மின்சார கனவு’ படத்தில் இடம் பெற்ற ‘தங்கத்தாமரை மகளே’ ஆகிய பாடலுக்கும் என இதுவரை 6 தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.

தெலுங்கில் நடிகர் அஜித்குமார் அறிமுகமான ‘பிரேம புஸ்தகம்’ படத்தின் தயாரிப்பாளரும் எஸ்.பி.பி.தான். தெலுங்கு, தமிழில் ஏராளமான திரைப்படங்களை தயாரித்துள்ளார். தமிழில் சமீபத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த ‘தர்பார்’ படத்தில், ‘நான்தான்டா இனிமேலு’ என்ற இவரது பாடல் சூப்பர் ஹிட் ஆனது. கடந்த 55 ஆண்டுகளாக இசையுலகில் ராஜகீதமாய் வாழ்ந்து வந்த எஸ்.பி.பி.யின் மறைவில் இருந்து இசை ரசிகர்கள் மீண்டு வர நாட்களாகும். ‘இந்த தேகம் மறைந்தாலும், இசையாய் மலர்வேன்’ என்று பாடினார். காற்று வீசும் வரை இவரின் கானத்துக்கு என்றும் அழிவில்லை.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • twins22

  தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

 • mumbaitrain22

  7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

 • dinosauregg22

  பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

 • locusts22

  எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

 • rainbowtree22

  உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்