SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இளைஞர்களை கரன்சி காட்டி கட்சிக்குள் வளைக்கும் இலை கட்சியின் தந்திரம் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2020-09-25@ 00:04:06

‘‘கோவையில என்ன நடக்குது... எல்லா டிபார்ட்மென்ட்டும் கலெக்‌ஷன்... கலெக்‌ஷன்... கலெக்‌ஷன்னு ஒரே பல்லவி தான் பாடுது போல...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘டாஸ்மாக், மாநகராட்சிக்கு அப்புறம் காக்கி சட்டை போட்ட போலீஸ் பற்றி கேள்விப்பட்டோம்... இப்போது காக்கி சட்டை போடாத உளவு காக்கிகள் கலெக்‌ஷன்ல சத்தமே இல்லாம கலக்குறாங்களாம்.. அதை சொல்றேன் கேளு.. கோவையில முட்டல் மோதல், கலவரம், வன்முறைகள், குற்றங்கள் நடக்காமல் தடுப்பது குறித்த தகவல்களை சேகரித்து காக்கி மேலிடத்தில் தெரிவிக்க வேண்டும். ஆனால், கோவை காக்கிகள் வேலையை காற்றில் பறக்கவிட்டு... கரன்சி நோட்டு எங்கெல்லாம் புரள்கிறது என மோப்பம் பிடிக்க துவங்கிவிட்டாங்க. மாநகரில், ஒவ்வொரு டாஸ்மாக் கடை மற்றும் ‘பார்’’களில் விதிமீறி கூடுதல் நேரம் சரக்கு விற்கப்படுகிறது.

இதை கண்டறிந்து, மேலதிகாரிகளுக்கு ரிப்போர்ட் அனுப்ப வேண்டியதும் இவர்களது கடமை. ஆனால், இவர்கள், டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் ‘பார்’’ காண்ட்டிராக்டர்களிடம் கூட்டணி வைத்து கொண்டு, வசூல்ல தட்டி எடுக்கிறாங்களாம். குறிப்பாக, அவினாசி ரோட்டில் உள்ள ஒரு காவல்நிலைய எல்லைக்குள் பணிபுரியும் உளவுப்பிரிவு காக்கிகளின் ஆட்டம் தாங்கலையாம். அப்புறம் பெட்டி, பெட்டியாக டாஸ்மாக் கடையில் இருந்து சரக்கு வரவழைத்து, தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு சப்ளை செய்யறாங்க.. மாதம்தோறும் மாமூல் வசூல் வேறு. ஒவ்வொரு துறை அதிகாரிகளும் சந்து, பொந்துகளில் நுழைந்து சம்பாதிக்கும்போது, நாங்கள் மட்டும் சம்பாதிக்கக்கூடாதா என தங்கள் பக்கத்தின் தப்பான செயலை நியாயப்படுத்தறாங்க...’’ என்றார் விக்கியானந்தா.

 ‘‘மேலிட சிபாரிசு இருந்தால் ஐஏஎஸ் படிச்சவங்க கூட... சாதாரண ஊழியரிடம் பவ்யமாக பேச வேண்டும் என்ற எழுதப்படாத விதி பற்றி சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘விதியை விடு.... நடந்ததை சொல்றேன் கேளு... தேனி மாவட்டத்துல ஜூலை மாசம் ஊரக வளர்ச்சித்துறையில, உதவியாளர் நிலையில் உள்ளவர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டதாம். இதுல ஒரு பெண் உதவியாளர் மட்டும் தன் டிரான்ஸ்பரை நிராகரித்துவிட்டாராம். பின் காத்திருந்து தனக்கு விருப்பமான பணியிடத்துக்கே மாறுதல் பெற்று சென்று விட்டாராம்... தேனி மாவட்டம் உதயமான காலம் முதலாக ஊரக வளர்ச்சித் துறையில, கலெக்டர் பணியிட மாறுதல் அளித்ததும் ஏற்றுக்கொண்டு சென்றவர்கள்தான் அதிகம்... அப்படி இருக்கும்போது, ஒரு பெண் உதவியாளர் கலெக்டர் உத்தரவிட்டும், பணியிட மாறுதலை ஏற்காமல் காலம் கடத்தி, அவர் விரும்பிய இடத்திற்கு மாறியிருக்கிறாரே... அந்த பெண் உதவியாளருக்கு ‘பின்புலமாக’ இருக்கும் ‘சக்தி’ எது என மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையில் மற்ற அலுவலர்கள் பேசும் அளவுக்கு, இந்த பிரச்னை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்காம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கன்னி வாக்காளர்களை கட்சியில் சேர்க்கும் பணியில் இலை தரப்பு பதவி, பண ஆசை காட்டி வளைக்குதாமே, கேள்விப்பட்டீங்களா...’’ என்றார்
‘‘மாங்கனி மாவட்டத்தில் எலக்‌ஷன் ஓட்டு வங்கியை குறிவைத்து இலை கட்சிகாரங்க வேலையை ஆரம்பிச்சிட்டாங்களாம். அதுவும் இளைஞர்கள், இளம்பெண்கள் பாசறைக்கு ஆள்பிடிக்கும் பணி அமோகமா நடக்குதாம். தற்போது கொரோனா பீதியால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லாமல் வீட்டில் முடங்கிக் கிடக்கும் மாணவர்கள்தான், இவர்களின் முதல்குறியாம். அதிலும் அந்த வீட்டில் யாராவது ஒருவர், கட்சி அனுதாபியாக இருந்தால் உடும்பு பிடி பிடித்து மாணவர்களை மடக்கி விடுகிறார்களாம். போட்டோ எடு, முடியை வெட்டு என்று உசுப்பேற்றி அதற்கான சிறு தொகையையும் கையில் குடுக்குறாங்களாம். ‘அப்புறம் மறுபடியும் நம்ம ஆட்சி தான். படிச்ச ஒரு லட்சம் பேருக்கு வேலை குடுக்குறோம். இளைஞர் பாசறை அட்டை வைத்திருந்தால், வேறு எந்த ரெகமண்டும் தேவையில்லை. அடுத்தடுத்த மாசத்தில லேப்டாப் குடுக்குறோம்’ என்று கூறி தூண்டில் போடுறாங்களாம். இதை நம்பி, வீட்டில் இருக்கிறவங்களும் அசந்து போய், பாசறையில் சேரச்சொல்லி பசங்களுக்கு அழுத்தம் குடுக்குறாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘நிரந்தர பதவி... என்னை யாரும் அசைக்க முடியாதுன்னு எட்டு வருஷமா ஒருவர் ஒரே பதவியில ஒட்டிக்கிட்டு இருப்பது யாரு...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மலைக்கோட்டை மாநகர் ஜிஹெச் டீனுக்கு சமீபத்தில் சிடி ஸ்கேன் பரிசோதனையில் லேசான கொரோனா அறிகுறி தெரிந்ததாம். அதற்கான சிகிச்சை பெற்று விடுமுறையில் இருக்கிறாராம். ஆனால், அது மேட்டர் இல்ல.. அந்த ஜிஹெச்சில் இருக்கை மருத்துவ அதிகாரி பொறுப்பு 2 மாதத்திற்கு ஒருமுறை மாற்றுவாங்க. ஆனால் கடந்த 8 ஆண்டுக்கு மேலாக உதவி இருக்கை மருத்துவ அதிகாரியாக ஓவியத்தின் மறு பெயர் கொண்ட டாக்டர் ஒருவர் தான் பணியில் இருந்து வருகிறாராம். தற்போது இவரின் அதிகாரம் தான் கொடி கட்டி பறப்பதாக சக டாக்டர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இவரின் அதிகாரத்தை கண்டு அதிர்ந்து பொறுப்பிற்கு வரக்கூடிய ஆர்எம்ஓக்கள் நமக்கு எதற்கு வம்பு என ஒதுங்கி கொள்கின்றனராம்.

இதனால் ஜிஹெச்சில் சரிவர பணிகள் நடப்பதில்லை. ஊழியர்கள் ஏனோதானோ என வேலை செய்து வருவதாக டாக்டர்களிடையே பேசிக்கிறாங்களாம். மருத்துவமனையில் இவர்களுக்கு கீழ் உள்ள தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டவர்கள் பணியை சரிவர செய்வதில்லையாம்... எங்கே பார்த்தாலும் சுகாதார சீர்கேடாம். அப்புறம் 1.30 மணிக்கு அட்மிட் ஆன கொரோனா நோயாளி அடுத்த சில நிமிடங்களில் இறந்துவிட்டாராம்... ஆனால் அதை கூட சரியாக கவனிக்காத நிலையில் கொரோனா நோயளி மதியம் 1 மணிக்கு இறப்பு என அறிக்கை எழுதி அனுப்புகின்றனராம்.. இந்த குளறுபடிகளை யார் களைவது என தெரியாமல் மருத்துவமனை நிர்வாகம் தடுமாறுவதாக அங்கு உள்ளவர்களே குற்றம்சாட்டுகிறார்கள்... எட்டு வருஷமாக இருக்கும் ஓவியமானவரை மாற்றினால் மருத்துவமனை சீராகிவிடுமாம்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pakisthan21

  ஆப்கானிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் உள்பட 15 பேர் பலி!: புகைப்படங்கள்

 • kasirangaa21

  கொரோனா தொற்றால் மூடப்பட்டிருந்த அசாம் காசிரங்கா தேசியப்பூங்கா, உயிரியல் பூங்காக்கள் சுற்றுலாப் பயணிகள் பார்வைக்காக மீண்டும் திறப்பு!: புகைப்படங்கள்

 • kamaladance21

  அமெரிக்க தேர்தல் 2020: அனல் பறக்கும் பிரச்சாரத்திற்கு இடையே குடையுடன் கூல் நடனமாடிய கமலா ஹாரிஸ்.. வைரலாகும் புகைப்படங்கள்

 • thirupati21

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா: கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி..!!

 • police21

  காவலர் வீர வணக்க நாள்: நாட்டைப் பாதுகாப்பதற்காக, வீரதீர செயல்களில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த காவலர்களின் நினைவு சின்னத்தில் உயரதிகாரிகள் மலர்த்தூவி மரியாதை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்