SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருப்பத்தூர் அருகே அதிகாலை யானை தாக்கி பிளஸ் 2 மாணவி பலி: பெற்றோர் கண்முன் நடந்த பரிதாபம்

2020-09-24@ 20:20:44

வாணியம்பாடி: திருப்பத்தூர் அருகே இன்று அதிகாலை யானை தூக்கி வீசியதில் பிளஸ் 2 மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். பெற்றோர் கண்முன் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தமிழக-ஆந்திர எல்லைப்பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அடிக்கடி காணப்படுகிறது. கூட்டமாக வரும் யானைகள், வனப்பகுதியொட்டியுள்ள விளைநிலங்களை சேதப்படுத்திவிட்டு செல்கிறது. இவற்றை விரட்ட முயன்று அவ்வப்போது அதன்பிடியில் சிக்கி உயிரிழப்பு சம்பவங்களும் நடந்துள்ளது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே தமிழக - ஆந்திர எல்லையில் பருத்திகொல்லி கிராமம் உள்ளது.

இங்கு ஏராளமான விவசாயிகள் வேர்க்கடலை, கொள்ளு, கரும்பு ஆகியவற்றை பயிரிட்டுள்ளனர். இதே கிராமத்தை சேர்ந்தவர் முருகன், விவசாயி. இவரது வீடு பருத்திக்கொல்லி வனப்பகுதியொட்டியுள்ள விளைநிலத்தின் நடுவே உள்ளது. அங்கு காட்டுப்பன்றி அட்டகாசம் காணப்படுவதால் பயிர்களை காப்பாற்ற, முருகன், தனது மனைவி மற்றும் மகள் சோனியா (17) ஆகியோருடன் வீட்டு வெளியே படுத்து வந்தார். சோனியா அங்குள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். நேற்றிரவும் குடும்பத்துடன் வெளியே படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர். இன்று அதிகாலை யானை பிளிறும் சத்தம் கேட்டது.

இதனால் திடுக்கிட்டு எழுந்த முருகன், அங்கு பார்த்தபோது தனது வீட்டை ஒரு யானை இடித்துக்கொண்டிருந்தது. அதிர்ச்சியடைந்த அவர் கூச்சலிட்டபடி தனது மனைவி மற்றும் மகளை எழுப்பினார். அதற்குள் அந்த யானை, அருகில் வந்து சோனியாவை மிதித்து தனது தும்பிக்கையால் தூக்கி வீசியது. இதில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். முருகனின் மனைவி லேசான காயத்துடன் தப்பினார். கண்ணிமைக்கும் நேரத்தில் தங்களது மகள், பலியானதை கண்டு பெற்றோர் கதறிஅழுதனர். இதுகுறித்து கிராம மக்கள் உடனடியாக கிருஷ்ணகிரி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து யானையை விரட்டினர். சம்பவம் நடந்த பகுதி ஆந்திர எல்லைக்குள் வருவதால் தகவலறிந்து குப்பம் வனத்துறையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குப்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சித்தூர் மாவட்ட வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • twins22

  தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

 • mumbaitrain22

  7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

 • dinosauregg22

  பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

 • locusts22

  எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

 • rainbowtree22

  உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்