SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விலைவாசி ஆபத்து

2020-09-24@ 00:30:59

இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அத்தனை மசோதாக்களையும் அள்ளித்தெளித்த அவசர கோலத்தில் மத்திய அரசு நிறைவேற்றி விட்டது. விவசாயிகள் நலன் காக்கும் வேளாண் மசோதாவாக இருந்தாலும் சரி, வேறு எந்த மசோதாவாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சிகளின் கேள்வி எதற்கும் பதில் சொல்ல தயாரில்லை அல்லது தெரியவில்லை. மாநிலங்களவையில் விவசாய மசோதாவுக்கு டிவிஷன் ஓட்டு கேட்ட எதிர்க்கட்சிகளின் குரல் கூட நசுக்கப்பட்டுவிட்டது. இதில் எழுந்த களேபரத்தில் 8 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, நாடாளுமன்றத்தையே ஒட்டுமொத்தமாக எதிர்க்கட்சி எம்பிக்கள் புறக்கணிக்கும் நிலை உருவாகிவிட்டது.

அதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டது மத்திய அரசு. அந்த வகையில் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து வெங்காயம், பருப்பு, எண்ணெய் வித்துகள், உருளைக்கிழங்கு உள்ளிட்டவை நீக்கப்பட்டு, அதற்கான மசோதாவை இரு அவைகளிலும் நிறைவேற்றி அதிர்ச்சி அளித்து இருக்கிறது மத்திய அரசு. திட்ட கமிஷன் ஒழிப்பு, தனி ரயில்வே பட்ஜெட் ஒழிப்பு, கச்சா எண்ணெய் விலை அதலபாதாளத்தில் குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலை தினசரி உயர்வு, விவசாய கடன் மானியம் ரத்து, உரம் விலை ஏற்றம், ரூபாய் நோட்டு தடை, ஜிஎஸ்டி அமல்படுத்திய விதம், தனியார் ரயில், விவசாய மசோதா, தொழிலாளர் மசோதா என அத்தனையும் பெருநிறுவனங்களை மனதில் வைக்கப்பட்டு எடுக்கப்பட்ட முடிவு.

இல்லை என்றால் அதிகம் லாபம் தரும் ரயில்வழித்தடங்கள் மற்றும் மும்பை, கொச்சி ஏர்போர்ட்டுகள் தனியார் வசம் சென்று இருக்காது. இப்போது அத்தியாவசிய பட்டியலில் இருந்து வெங்காயம், பருப்பு உள்ளிட்ட மக்கள் பயன்படுத்தும் பொருட்கள் நீக்கப்பட்டதும் அந்த வரிசையில்தான். அன்றாடம் நமது வீடுகளில் பயன்படுத்தப்படும் வெங்காயம், பருப்பு வகைகள், உருளைக்கிழங்கு, தானியங்கள் ஆகியவற்றை பதுக்கி, செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கி, கொள்ளை லாபத்தில் விற்பனை செய்வதை தடுக்கவே இந்த பொருட்கள் எல்லாம் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின்கீழ் கொண்டு வரப்பட்டு இருந்தது.  

இதையும் மீறி பொருட்களை யாராவது பதுக்கினால் நடவடிக்கை பாயும். இப்போது அத்தனை கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு கார்ப்பரேட்களுக்கு வெண் சாமரம் வீசி வழக்கம் போல் தனது எஜமான விசுவாசத்தை காட்டியிருக்கிறது மத்திய அரசு. இருப்பு வைக்க தடை இருந்ததால் விவசாய உள்கட்டமைப்பு முதலீடுக்கு தடை இருந்தது. இப்போது இருப்பு வைக்க தடை நீக்கப்படுவதால் தனியார் மற்றும் வெளிநாடு முதலீடு கிடைத்து, பயிர் அதிக அளவு சேமிக்க முடியும் என்று சப்பைக்கட்டு கட்டுகிறார் மத்திய பொதுவிநியோகத்துறை இணை அமைச்சர் தன்வே. இந்த தடை நீக்கியது இருப்பு வைக்க பயன்படுகிறதோ இல்லையோ, விண்ணை முட்டும் விலைவாசி உயர்வுக்கு மட்டும் வழிவகுக்கும். இதனால் பாதிக்கப்படுவது ஏழை, அப்பாவி மக்கள் தான் என்பது மட்டும் உறுதி.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-10-2020

  19-10-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 16-10-2020

  16-10-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • farmerprotest15

  வேளாண் சட்ட சர்ச்சை பற்றிய பேச்சுக்கு மத்திய அமைச்சர் வராததால் பஞ்சாபில் தொடரும் போராட்டம்: சட்ட நகல்களை கிழித்து வீசிய விவசாயிகள்

 • telunganarain15

  ஆந்திரா, தெலுங்கானாவில் வரலாறு காணாத மழை: கரைபுரளும் வெள்ளத்தில் சிக்கி 32 பேர் பலி..!!

 • navarathri15

  நவராத்திரி விழாவுக்காக தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் சுவாமி சிலைகள்: துப்பாக்கி ஏந்தி இரு மாநில போலீசாரும் அணிவகுப்பு மரியாதை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்