SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குற்றத்தை தடுக்கலாம் கொரோனாவை தடுக்க முடியுமா என்று காக்கிகள் ரகசியமாக பேசுவது குறித்து சொல்கிறார்: wiki யானந்தா

2020-09-23@ 00:40:58

‘‘கிராபைட் நிறுவனத்தை திட்டமிட்டு நஷ்டத்தில் இயக்கி விற்பனை நடக்குதாமே... அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘சிவகங்கையில் உள்ள தமிழ்நாடு அரசிற்கு சொந்தமான கிராபைட் கனிம நிறுவனம் (டாமின்) திட்டமிட்டு மூடி வைச்சிருக்காங்களாம். இந்த ஆலையில், கல்லில் இருந்து கிராபைட்டை பவுடராக பிரித்து எடுக்கும் பணி நடக்குது... உலகத்தரம் வாய்ந்த கிராபைட் இங்கே கிடைத்தபோதும், தொழிற்சாலை தொடங்கியபோது எந்த நிலையில் இருந்ததோ, அதே நிலையில் திட்டமிட்டு விரிவாக்கம் செய்யாமல் நிர்வகிக்கப்படுதாம். அதைவிட கொடுமை... 2019 டிசம்பரில் இருந்து ஊழியர்களுக்கு சம்பளமே தரலையாம்...

இதற்கு காரணம், அரசே நேரடியாக கனிமங்களை விற்பனை செய்யாமல், தனியாரிடம் கொடுத்தது தானாம். இதுவே பெரிய அளவிலான நஷ்டத்துக்கு வாய்ப்பாக அமைந்து போச்சாம். இதனால இரண்டு மாதங்களாக ஆலை முற்றிலும் செயல்படாமல் முடக்கப்பட்டதாம்... ஆலை நஷ்டத்தில் இயங்குவது போல் காட்டி, சில முதலைகள் முடக்க திட்டமிடுவதாக தகவல் வெளியானதால் ஊழியர்கள், அனைத்துக்கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாம்... இதை கண்டித்து போராட்டம் நடத்திட திட்டமிட்டு, இதற்கான பணிகளில் மக்கள் களமிறங்கி இருக்கிறார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘அதிகாரிக்கு பயந்து தலைமறைவு குற்றவாளிகளை நான் பிடிக்கலாம்... என்னை கொரோனா பிடிச்சா என்னாவது என்று மாங்கனி மாவட்ட காக்கிகள் வேதனைப்படறாங்களாமே, உண்மையா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மாங்கனி மாநகர காக்கிகளின் நிலை தற்போது சோகத்திலும் படுசோகமாக மாறி இருக்காம். உச்ச காக்கி அதிகாரி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்காரு. இதனால மாங்கனி மாவட்ட காக்கி துறையே அல்லோலப்பட்டுக்கிட்டிருக்கு. இந்த நேரத்துல, உயரதிகாரிக்கு அடுத்த நிலையில் உள்ள காக்கி அதிகாரி ஒருத்தர், பணியில் ரொம்பவும் கடுமை காட்டுகிறாராம். வாரன்டில் உள்ள கைதிகளை உடனே பிடுச்சு சிறைக்குள்ள போட்டே ஆகணும்னு பிடிவாதமாக இருக்காராம்.

கொரோனாவுக்கு பயந்து வழக்கு விசாரணை, குற்றவாளிகளிடம் விசாரணை எல்லாம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வெளியேதான் நடக்குதாம்... இந்த சூழல்ல தலைமறைவு குற்றவாளிகளை பிடிச்சுட்டு வந்து எப்படி விசாரிக்கிறதுன்னு தெரியாம தவிக்கிறாங்களாம். அவனுக்கு கொரோனா இருந்து நாம அடிக்கிற அடியில அவன் கத்த... பெருமூச்சுவிட அது நம்ம மேல பட்டு நாமும் கொரோனாவுல பாதிக்கணுமானு கவலைப்பட்டாங்களாம்... இருந்தாலும் மேலதிகாரி உத்தரவ மதிச்சு சல்லடபோட்டு மடக்கியதுல சிலர் பிடிபட்டாங்களாம். இதுல 5 பேருக்கு கொரோனாவாம். இதனால ஏசி முதல் கீழ்மட்ட போலீஸ்காரங்க வரை ரொம்பவே அப்செட்டாயிருக்காங்களாம்.

தலைமறைவு குற்றவாளியை எப்படியும் பிடிச்சுடலாம்... உலகத்துக்கே தண்ணீ காட்டும் கொரோனாவிடம் இருந்து எப்படி எங்களை பாதுகாத்துக் கொள்வது... கொரோனா காலக்கட்டத்துல இப்படி கடுமையாக இருந்தா நாங்க புள்ளக்குட்டிகளோட வாழவேண்டாமான்னு ஒட்டுமொத்தமா அடிக்கடி கூடி ரகசியமாக பேசிக்கிறாங்களாம்... இதனால எந்த ஸ்டேஷன், தனிப்படையை சேர்ந்த காக்கிகளாக இருந்தாலும் அவசர வழக்கை தவிர மற்றதை விட்டு பிடிக்கலாமே... இப்படி செய்தால் எல்லா காக்கிகளையும் கொரோனா வார்டில்தான் பார்க்க முடியும்... அப்புறம் ஸ்டேஷன்ல யார் இருப்பா... இவரு யாரை வேலை வாங்குவார் என்று கொந்தளிக்கிறார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கிரிவலம் மாவட்டத்துல கலெக்‌ஷன் வலம் செல்லும் அதிகாரியை பற்றி சொல்லுங்க...’’ என்று கண் சிமிட்டியபடியே கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கிரிவலம் மாவட்டம் 18 ஒன்றியத்துக்குட்பட்ட, கிராம ஊராட்சிகளில் உள்ள துறையில் பணி நல்லா நடக்க வேண்டுமா... அந்த துறையோட மாவட்ட உயர் அதிகாரியை நல்லா கவனிக்கணுமாம். அவங்களுக்கு மட்டும்தான், பணிக்கான செக் உடனே கிடைக்குதாம். மற்றவர்களுக்கு டாட்டா தானாம்... ஆனா, மாவட்ட தலைமை அதிகாரி ஆணை மற்றும் ஏதேனும் உத்தரவு போட்டால் மதிக்கிறதே இல்லைன்னு செங்கம் ஒன்றியத்துல புலம்புறாங்க. கரை வேட்டிகளுக்கும் இதே நிலைமைதானாம்.

பல லட்சம், பல கோடி மதிப்பிலான பணியா... உடனே திட்ட அறிக்கை, டெண்டர் என்று வேலைகள் ஜோராக நடக்குதாம்... ஏழை மக்களின் அடிப்படை திட்டங்களுக்கும் முன்னுரிமை கொடுக்குறதே இல்லை. இதுல புதிதாக பொறுப்பு ஏற்ற உள்ளாட்சி தலைவர்களுக்கு இந்த கவனிப்பு மேட்டர் தெரியாம எந்த பணியும் நடக்காம கிடப்புல இருக்குதாம். இந்த விஷயம் தெரிஞ்ச கரைவேட்டிங்க, உயர் அதிகாரியை நல்லா கவனிச்சிட்டு, பணிஆணையை வாங்கிக்கிட்டு போறாங்களாம். அதுமட்டுமில்லாம, இந்த கலெக்‌ஷன் நடக்கும் துறையில காலிபணியிடங்கள் இருந்தாலும் அதையும் விடுறதில்லையாம். திட்டமான அந்த தலைமை அதிகாரியின் உத்தரவையும் மதிப்பதில்லையாம். துறைசார்ந்த மாவட்ட உயர் அதிகாரி கலெக்‌ஷன், கலெக்‌ஷன் என்று மந்திரம் போலவே உச்சரித்து வருகிறாராம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘காக்கிகளை மாற்றாவிட்டால் கரெப்ஷன் ஏற்படும்னு சொல்றாங்களே, உண்மையா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘குமரியில உள்ள ஆரல்வாய்மொழி, தக்கலை, சுசீந்திரம் தேசிய நெடுஞ்சாலைகளை மையமாக கொண்டு நெடுஞ்சாலை ரோந்து போலீசார் டீம் ஒன்று செயல்படுது. இந்த டீமில் ஒரு மாதத்துக்கு ஒருமுறை இதில் உள்ள போலீசார் மாற்றப்படுவார்கள். பின்னர் 3 மாதங்களுக்கு ஒருமுறை என மாற்றினர். கடைசியாக மாவட்ட அதிகாரியாக இருந்தவர் நெடுஞ்சாலை ரோந்து டீமில் உள்ள போலீசாரை மாற்றினார். அதன் பின்னர் இரு வருடங்களாக நெடுஞ்சாலை ரோந்து போலீசாரை மாற்றவில்லை. ஒரே அணிதான் ெதாடர்ந்து இந்த பணியில் இருந்து வருகிறது.

இவ்வாறு தொடர்ச்சியாக இருப்பது, பல குற்ற செயல்களுக்கும் வழிவகுக்கும். எனவே இப்போதுள்ள எஸ்.பியின் கவனத்துக்கு இந்த பிரச்னையை கொண்டு போய், சுழற்சி முறையில் மீண்டும் மாதம் ஒருமுறை பணி மாற்றம் செய்யும் வகையில், நெடுஞ்சாலை ரோந்து பிரிவு சீரமைக்கப்படுமா என்று அதே துறையை சேர்ந்த காக்கிகள் கேட்கிறாங்க... ஏன்னா... இப்போது இருக்கும் நெடுஞ்சாலை ரோந்து போலீஸ் மாறாமல் இருப்பது கடத்தல் கும்பலுக்கும் கொண்டாட்டமாக உள்ளதாம்...’’ என்றார் விக்கியானந்தா


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pakisthan21

  ஆப்கானிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் உள்பட 15 பேர் பலி!: புகைப்படங்கள்

 • kasirangaa21

  கொரோனா தொற்றால் மூடப்பட்டிருந்த அசாம் காசிரங்கா தேசியப்பூங்கா, உயிரியல் பூங்காக்கள் சுற்றுலாப் பயணிகள் பார்வைக்காக மீண்டும் திறப்பு!: புகைப்படங்கள்

 • kamaladance21

  அமெரிக்க தேர்தல் 2020: அனல் பறக்கும் பிரச்சாரத்திற்கு இடையே குடையுடன் கூல் நடனமாடிய கமலா ஹாரிஸ்.. வைரலாகும் புகைப்படங்கள்

 • thirupati21

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா: கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி..!!

 • police21

  காவலர் வீர வணக்க நாள்: நாட்டைப் பாதுகாப்பதற்காக, வீரதீர செயல்களில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த காவலர்களின் நினைவு சின்னத்தில் உயரதிகாரிகள் மலர்த்தூவி மரியாதை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்