SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிங்கப் பெண்கள்

2020-09-23@ 00:26:11

இந்திய ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளிலும், பெண்கள் களப்பணியாற்றுவது அதிகரிக்க துவங்கியுள்ளது. இதுவரை, போர்க்கப்பல்களில், பெண்கள் பணியாற்றாத நிலை இருந்தது. தற்போது, போர்க்கப்பல்களில், ஹெலிகாப்ட்டர்களை இயக்கும், ‘‘அப்சர்வர்’’ பணிக்கு, இந்திய ராணுவ வரலாற்றில் முதல்முறையாக, இரண்டு பெண் அதிகாரிகள் தேர்வாகி உள்ளனர். துணை லெப்டினென்ட் குமுதினி தியாகி மற்றும் ரித்தி சிங் ஆகியோர், இப்பணிக்கு தேர்வாகி உள்ளனர். கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள தென்மண்டல கப்பல் படை தளத்தில், ‘‘ஐ.என்.எஸ்.,-கருடா’’ போர்க்கப்பலில், நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில், இவ்விரு புதிய பெண் அதிகாரிகள், பொறுப்பேற்றுக்கொண்டனர்.

ஹெலிகாப்டர் அணி பார்வையாளர்களாக  தேர்வுசெய்யப்பட்ட இவ்விருவரும், இலகு ரக ஹெலிகாப்டர்களை கையாளும் பயிற்சி பெற்றுள்ளனர். எதிரி இலக்கின் தூரத்தை கண்டறிவது,  அச்சுறுத்தல்களை மதிப்பீடு செய்வது ஆகிய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இது, இந்திய கடற்படை வரலாற்றில் சிறப்புவாய்ந்த தருணம் ஆகும். எதிர்காலத்தில் போர்த்தளவாட பராமரிப்பு மற்றும் போர்க்கால பணிகளில் பெண்கள் ஈடுபடுவதற்கான முத்தாய்ப்பாக இந்நிகழ்வு அமைந்துள்ளது.  நமது விமானப்படையில், 1,875 பெண்கள் பணியாற்றுகின்றனர். இதில், 10 பெண்கள், போர் விமானங்களின் பைலட்களாக உள்ளனர். இந்நிலையில், நம் படைப்பிரிவில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள, பிரான்ஸ் தயாரிப்பான ரபேல் போர் விமானத்தை இயக்க, பெண் விமானி ஒருவருக்கு, பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இவர் பயிற்சி முடித்து, ரபேல்  விமானங்களை இயக்கும், ‘‘கோல்டன் ஆரோ’’ படைப்பிரிவில் விரைவில் இணைய உள்ளார். “இரவில் எப்போது ஒரு பெண் தனியாக  நடந்துசெல்ல முடிகிறதோ அன்றுதான் நமக்கு உண்மையான சுதந்திரம்” என்றார்  மகாத்மா காந்தி. அந்த கனவு இன்று மெய்யாகிவிட்டது. இதோ, இந்தியா சுதந்திரம் அடைந்து 73 ஆண்டுகளை கடந்துவிட்டது.  இந்திய விடுதலைப்போரில் எண்ணற்ற பெண்கள் அளப்பரிய தியாகங்களை செய்தனர். நாம் சுவாசிக்கும் சுதந்திரக்காற்று, பெண்களின் போராட்ட பங்களிப்பினாலும்  அறுவடையான அற்புதம்.
தற்போது, மகளிர் மேம்பாடு ஒவ்வொரு தளத்திலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. கல்வியில் பெருமளவு முன்னேற்றம் கண்டுள்ளோம். வேலைக்கு  செல்லும் பெண்கள் பெருகியுள்ளனர்.

தொழில்முனைவோர் மற்றும் தன்னம்பிக்கையோடு வாழ்க்கையை எதிர்கொள்ளும் பெண்கள் பட்டியல் நீள்கிறது. இன்று நம் நாட்டு பெண்கள் சாதிக்காத துறையே இல்லை. கல்பனா சாவ்லா, சிந்து, தீபா, சாக்க்ஷி மாலிக் என்று இந்திய சாதனை திலகங்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

புலியை முறத்தால் விரட்டிய வீரப்பரம்
பரையை சேர்ந்தவர்கள் நம் பெண்கள். சேற்றிலும் ஆணுக்கு நிகராய் கால் பதித்து, செந்நெல் மணிகளை உருவாக்கினர் அக்கால பெண்கள். தற்போது கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் ஆணுக்கு நிகராய் சாதிக்கின்றனர் நம் பெண்கள். “புதியதோர் உலகம் செய்வோம்... கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்’’ என்ற பாரதிதாசனின் கனவை மெய்ப்பிக்க புறப்பட்டு விட்டனர் இக்கால பெண்கள். ெதாடரட்டும் நம் சிங்க பெண்களின் சாதனைகள். ஒன்றுபடுவோம், வெற்றிகொள்வோம். தேசம் காப்போம். கிரேட் சல்யூட்...!


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-10-2020

  19-10-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 16-10-2020

  16-10-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • farmerprotest15

  வேளாண் சட்ட சர்ச்சை பற்றிய பேச்சுக்கு மத்திய அமைச்சர் வராததால் பஞ்சாபில் தொடரும் போராட்டம்: சட்ட நகல்களை கிழித்து வீசிய விவசாயிகள்

 • telunganarain15

  ஆந்திரா, தெலுங்கானாவில் வரலாறு காணாத மழை: கரைபுரளும் வெள்ளத்தில் சிக்கி 32 பேர் பலி..!!

 • navarathri15

  நவராத்திரி விழாவுக்காக தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் சுவாமி சிலைகள்: துப்பாக்கி ஏந்தி இரு மாநில போலீசாரும் அணிவகுப்பு மரியாதை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்