SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேளாண்மைக்கு பின்னடைவு

2020-09-21@ 00:08:29

நாட்டின் முதுகெலும்பாக கருதப்படும் விவசாயத்தை சிதைக்கும் 2 மசோதாக்கள் நேற்று குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு விட்டன. எதிர்கட்சிகளின் கடும் அமளி, விவசாயிகளின் தொடர் போராட்டம், அகாலிதள அமைச்சரின் ராஜினாமா என பல்வேறு தடைகளையும் தாண்டி இம்மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எவ்வளவோ எதிர்த்து போராடியும், ஆளும் தரப்பு மசோதாக்கள் அம்பலம் ஏறிவிட்டன.

வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விளைபொருட்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களுமே விவசாயிகளை வஞ்சிப்பவை, கார்ப்பரேட்டுகளுக்கு கை கொடுப்பவை. வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதாவை எடுத்துக்கொண்டால், ஒப்பந்தம் செய்பவர் எதை விளைவிக்க சொல்வாரோ, விவசாயிகள் அதை வயல்களில் விளைவிக்க வேண்டியது வரும். பருவநிலைக்கு ஏற்றபடி விளைபொருளை விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைவிக்க முடியாது.

அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா சாராம்சத்தின்படி வெங்காயம், சமையல் எண்ணெய், உருளைகிழங்கு போன்றவை அத்தியாவசிய பொருள் பட்டியலில் இருந்து நீக்கப்படுகின்றன. இப்பொருட்களை அதிகளவில் இனிமேல் இருப்பு வைக்க முடியும் என பாஜ அரசு சமாதானம் சொல்கிறது. உண்மையில் வெங்காயம், உருளைகிழங்கு உள்ளிட்டவை அதிகளவில் பதுக்கலுக்கு உள்ளாக வாய்ப்புகள் உள்ளன. விவசாயிகளின் குறைந்தபட்ச உரிமைகளை பறிக்கும் இம்மசோதாக்களுக்கு சட்டவடிவம் தயாராகி விட்டது.

பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என விவசாயிகள் மத்தியில் இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ள, அதிமுகவின் சாயமும் இதில் வெளுக்கத் தொடங்கியுள்ளது. மத்திய அரசின் தலையாட்டி பொம்மையாக செயல்படும் அதிமுக அரசு, இப்போது விவசாயிகள் வஞ்சிக்கப்படுவதையும் வேடிக்கை பார்க்கிறது. அதிலும் வேளாண்விளை பொருட்கள் ஒப்பந்த பண்ணை மசோதாவை மத்திய அரசுக்கு முன்பே, அதிமுக அரசு சட்டசபையில் நிறைவேற்றிவிட்டது. இவற்றை கணக்கில் கொண்டு பார்க்கும்போது தமிழக விவசாயிகளுக்கு இது போதாத காலம் என்றே சொல்லத் தோன்றுகிறது. தமிழகத்தில் முன்பை விட சமீபகாலமாக விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன.

அதிலும் கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ வழியின்றி தெருவில் நிற்கும் விவசாயிகள் ஏராளம். காவிரி படுகையில் மீத்தேன் கிணறுகள் உள்ளிட்ட சிற்சில திட்டங்கள் எதிர்கால விவசாயத்தை கேள்விக்குறியாக்குகின்றன. கிசான் சம்மான் திட்டத்திற்கு மத்திய அரசு தரும் ரூ.6 ஆயிரம் கூட, தமிழக விவசாயிகள் வாழ்வில் விளக்கேற்றுகிறதா என்றால், அதுவும் இல்லை. அதிலும் கோடிக்கணக்கில் ஊழல்தான் அரங்கேறுகிறது. இச்சூழலில் நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் மசோதாக்கள், அடுத்து வரும் காலங்களில் விவசாயிகளை கடுமையாக பாதிக்கும். தமிழகத்திற்குள் விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் உழவர் சந்தைகள், வேளாண் விற்பனை கூடங்கள் ஆகியவை இனிமேல் மெல்ல மெல்ல அழியவும் வாய்ப்புகள் உள்ளன. கார்ப்பரேட் முதலாளிகளின் கைகளுக்கு விளைநிலங்கள் செல்லவும், அவர்களது கைக்கூலிகளாக விவசாயிகள் மாறவும் வாய்ப்புகள் உள்ளன. இந்திய விவசாயத்தின் கட்டமைப்பை மாற்ற நினைக்கும் மத்திய, மாநில அரசுகள், அதனால் ஏற்படும் ஆபத்துக்களையும் உணர்வதே நல்லது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • mumbaitrain22

  7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

 • dinosauregg22

  பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

 • locusts22

  எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

 • rainbowtree22

  உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

 • vietnam22

  வியட்நாமை துவம்சம் செய்த கனமழை!: வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கைபேரிடர்களில் சிக்கி 111 பேர் பலி.. பலர் மாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்