SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதால் ஆத்திரம்: போர் விமானங்களை அனுப்பி தைவானை மிரள வைத்த சீனா

2020-09-20@ 03:53:11

* தொடர்ந்து 2ம் நாளாக அடாவடி
* டிரம்புக்கும் மறைமுக எச்சரிக்கை

தாய்பே: தைவானில் அமெரிக்க உயர்நிலை குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதால் ஆத்திரம் அடைந்துள்ள சீனா, 2வது நாளாக 19 போர் விமானங்களை அந்நாட்டுக்குள் அனுப்பி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது, அமெரிக்காவுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. கிழக்கு லடாக் பகுதியில் இந்தியாவுடன் மோதலில் ஈடுபட்டு வருவது போலவே, தைவானுடனும் சச்சரவு செய்து வருகிறது சீனா. அது, தைவான் தனக்கே சொந்தம் என்றும் உரிமை கோரி வருகிறது. இதனால், சீனாவின் கொட்டத்தை அடக்க, தைவானுக்குத் தேவையான ராணுவ உதவிகள்,  ஆயுதங்களை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. மேலும், சீனாவின் அச்சுறுத்தலில் இருந்து அந்நாட்டுக்கு பாதுகாப்பும் அளித்து வருகிறது.  

இதை உறுதிப்படுத்தும் விதமாக டிரம்ப் நிர்வாகம் தைவானுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவின் சுகாதாரச் செயலரான அலெக்ஸ் அசார் தைவானுக்குச் சென்றார். அப்போது, என்ன பேச்சுவார்த்தை நடந்தது என்பது பற்றி வெளிப்படையாக இருநாடுகளும் அறிவிக்கவில்லை. அந்த பரபரப்பு ஓய்வதற்குள்ளேயே மீண்டும் டிரம்ப் அமைச்சரவையை சேர்ந்த வெளியுறவு துணை அமைச்சரான கெய்த் க்ரச் தலைமையிலான உயர்நிலை குழு தைவான் சென்றுள்ளது. இது கடந்த 2 நாட்களாக அங்கு ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதனால்,  ஆத்திரம் அடைந்துள்ள சீனா, தைவான் வான் எல்லைக்குள் நேற்று முன்தினம் 18 போர் விமானங்களை அனுப்பி எச்சரிக்கை விடுத்தது.

இது குறித்து தைவான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘மொத்தம் 18 சீன போர் விமானங்கள் தைவான் எல்லையில் பறந்தன. அவற்றில் இரண்டு விமானங்கள் வெடிகுண்டு வீசுபவை. ’ என்று கூறியது.
இந்நிலையில், நேற்றும் 2வது நாளாக 19 போர் விமானங்களை தைவான் நாட்டு வான் எல்லைக்கள் பறக்கவிட்டு, சீனா தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தியது. இது, தைவானை மிரட்டும் வகயைிலும், அதற்கு உதவி செய்யும் அமெரிக்காவை எச்சரிக்கை செய்யும் வகையிலும் இருந்தது. தைவானின் முன்னாள் அதிபர் லீ டெங் ஹுய்க்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தைவானின் தற்போதைய அதிபர் சாய் இங் வென், அமெரிக்க துணை அமைச்சர் கெய்த் க்ரச் மற்றும் உயர்மட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தபோது, சீன போர் விமானங்கள் இந்த அத்துமீறலில் ஈடுபட்டன. இது குறித்து சீனா அரசு வட்டாரங்கள் கூறுகையில், ‘‘தைவான் கடற்பகுதியில் எங்களுக்கு இருக்கும் உரிமையை சட்டப்படி நிலைநாட்ட வேண்டிய கடமை இருக்கிறது. சீனாவின் இறையாண்மை மற்றும் பிராந்தியங்களிடையே பராமரிக்க வேண்டிய ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதற்காகவே விமான பயிற்சி செய்து வருகிறோம்’ என்றனர். இதனால், தைவான் எல்லையிலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ஆதிக்கத்தை உடைக்கும் அமெரிக்கா
வர்த்தக போர் தொடங்கியதில் இருந்தே அமெரிக்கா - சீனா உறவில் நாளுக்கு நாள் விரிசல் அதிகமாகி வருகிறது. கொரோனா பரவல், டிக் டாக் ஆப்களுக்கு தடை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் இருநாடுகளுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. இந்நிலையில், தென் சீன கடல் முதல் தனது அண்டை நாடுகள் அனைத்திலும் எல்லை போரில் ஈடுபட்டு, உலகளவில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட சீன முயல்கிறது. உலகின் போலீஸ்காரனாக கருதப்படும் அமெரிக்காவுக்கு இது ஆத்திரத்தை அளித்துள்ளதால், சீனா மிரட்டும் நாடுகளுக்கு எல்லாம் தனது குழுவை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தி தன்பக்கம் இழுத்து வருகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • twins22

  தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

 • mumbaitrain22

  7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

 • dinosauregg22

  பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

 • locusts22

  எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

 • rainbowtree22

  உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்