SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விவசாயிகளின் எதிர்ப்பு

2020-09-20@ 00:15:19

மத்திய அரசு மீண்டும் விவசாயிகளுக்கு எதிரான நிலையை கையில் எடுத்துள்ளது. சமீபத்தில் மத்திய அரசின் ‘சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு திருத்த வரைவு அறிக்கை’ பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இதன்மூலம் ஹைட்ரோகார்பன், எட்டு வழிச்சாலை உட்பட பல திட்டங்கள் கருத்து கேட்கப்படாமல் நிறைவேற்றலாம் என்பதால் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது மக்களவையில் 3 வேளாண் சட்டங்கள், எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தேஜ கூட்டணியில் உள்ள சிரோமணி அகாலிதள எம்பியும், மத்திய அமைச்சருமான ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா செய்துள்ளார்.

அதிமுகவும் இதற்கு ஆதரவு அளித்துள்ளது விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதிய வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் மத்தியில் ஏனிந்த எதிர்ப்பு. அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020ஐ பொறுத்தவரை, விவசாயிகள் விளைபொருட்களை உற்பத்தி செய்து சேமித்து வைக்கவும், வேறு இடங்களுக்குக் கொண்டு சென்று விற்பனை செய்யவும், விவசாயிகளுக்கு முழு சுதந்திரம் இந்த சட்டத் திருத்தத்தின் மூலம் அளிக்கப்படுகிறது. விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டத்தைப் பொறுத்தவரை, விவசாய விளை பொருட்களை மாநிலத்திற்கு உள்ளேயும், வெளியேயும் எந்த இடத்திலும் வியாபாரம் செய்யலாம்.

இதன் மூலம், மாநில அரசுகளால் இயக்கப்படும் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு வெளியிலும் பொருட்களை விற்க முடியும். ஒரு மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரி, மற்றொரு மாநிலத்தில் எங்கு வேண்டுமானாலும் வந்து பொருட்களை வாங்கிச் செல்லலாம். இதன்மூலம் ஒரு மாநிலத்தில் முக்கிய அத்தியாவசிய பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால், மாநில அரசால் கை கட்டி வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும். விலை உத்தரவாதம், விவசாய சேவைகள் ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020ன்படி, விவசாயிகளுடன் எந்த மூன்றாவது நபரும் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என்கிறது மத்திய அரசு.

இந்த மூன்று சட்டங்கள் குறித்து விவசாய சங்க நிர்வாகிகள் கூறுகையில், இந்தியாவில் விவசாயம் என்பது மாநில அரசின் கீழ் உள்ளது. இந்த 3 சட்டங்களால், கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே பலனடைய முடியும் என்கின்றனர். விவசாயிகளுக்கு போதிய லாபம் கிடைக்காது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 268 வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள், 108 கிராமப்புற சேமிப்பு கிடங்குகள், 108 தரம் பிரிக்கும் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. நெல், பருத்தி, கேழ்வரகு, நிலக்கடலை, புளி, கரும்பு, தேங்காய், உருளைக்கிழங்கு, துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் மறைமுக ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.

இங்கு விற்பனை நடக்கும்போது விவசாயி, வர்த்தகர், வேளாண்துறை அதிகாரி ஆகியோர் உடனிருப்பார்கள். பொருட்கள் வாங்கப்பட்டவுடன் விவசாயிக்கு பணம் அளிக்கப்படும். ஆனால், புதிய சட்டங்கள் மூலம் விவசாய ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களுக்கு வெளியிலும் வியாபாரிகள்,  பொருட்களை வாங்க முடியும். இதன்மூலம் வியாபாரிகள் நிர்ணயிக்கும் விலையே இறுதியானதாக அமைந்து விடும். விவசாயிகளுக்கு கிடைக்கும், ஓரளவு லாபமும் கிடைக்காமல் போய் விடும் என்பதே பொதுவான கருத்தாக உள்ளது. எனவேதான் இந்த 3 சட்டங்களுக்கும் எதிர்ப்பு வலுத்துள்ளது.

 ‘விவசாயமே நாட்டின் முதுகெலும்பு’ என்றார் மகாத்மா. ஆனால், மத்திய அரசு தொடர்ந்து விவசாயத்தை பாதிக்கும் மசோதாக்களை நிறைவேற்றி வருவது வேதனையளிக்கிறது. விவசாயம், கல்வி இரண்டுமே நாட்டிற்கு மிகவும் அவசியம். அதில் தேவையற்ற குழப்பங்களை மத்திய அரசு ஏற்படுத்தக்கூடாது என்பதே மக்களின் விருப்பமாகும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • dinosauregg22

  பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

 • locusts22

  எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

 • rainbowtree22

  உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

 • vietnam22

  வியட்நாமை துவம்சம் செய்த கனமழை!: வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கைபேரிடர்களில் சிக்கி 111 பேர் பலி.. பலர் மாயம்..!!

 • pakisthan21

  பாகிஸ்தான் விசா பெறுவதற்கு ஆயிரக்கணக்கில் திரண்ட மக்கள்!: ஆப்கானிஸ்தானில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் உள்பட 15 பேர் பலி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்