SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேட்பாளரை தேர்வு செய்து காத்திருக்கும் பாஜ பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2020-09-19@ 00:11:10

‘‘வசந்தகுமார் எம்.பி. (காங்.) மறைவை தொடர்ந்து கன்னியாகுமரி தொகுதிக்கு நவம்பரில் இடைத்தேர்தல் எதிர்பார்க்கப்படுகிறது என்கிறார்களே..’’ என கேள்விப் படலத்தை தொடங்கி வைத்தார் பீட்டர் மாமா.
 ‘‘ஆமா.. இத் தொகுதிக்கு பா.ஜ.வை பொறுத்தவரை வேட்பாளரை பிரதமர் மோடி முடிவு செய்து விட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அதற்கான கணக்கெடுப்பு பணிகளும், சர்வே முடிவும் அவரது கைக்கு சென்று விட்டன. இதன்படி முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் களமிறக்க பட உள்ளதாக பேசுகிறார்கள். இவர் குஜராத்தில் மோடியின் ஆட்சியின் போது தலைமை செயலகம் மற்றும் மாவட்ட வாரியாக சிறந்த ஐ.ஏ.எஸ்.அதிகாரியாய் பணிபுரிந்தவராம். மாநில தலைமை செயலாளராய் இருந்தபோது மோடியின் நன்மதிப்பை பெற்றவராம். கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த இவரை வேட்பாளர் ஆக்கி எம்.பி. ஆக்குவதுடன் ராஜாங்க மந்திரி பதவியையும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம். இவரின் உற்ற நண்பர்தான், வெளியுறவு துறை மந்திரியான ஜெய்சங்கர். இன்னொரு நட்பாளர் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்’’ என்றார் விக்கியானந்தா.
 ‘‘அதிமுக வார்டு செயலாளர் பதவிக்கு குடுமிப்பிடி சண்டை நடக்குதாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க.வில் 37வது வார்டுக்கு 2 செயலாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அதாவது, இங்குள்ள ரயில்வே கேட் பகுதியில் இருந்து தெற்கு புறமுள்ள பி.ஆர்.புரம் வரை ஒரு வார்டு செயலாளரும், ரயில்வே கேட்டிற்கு வடபுறம் தண்ணீர்பந்தல் வரை இன்னொரு வார்டு செயலாளரும் நியமிக்க தீவிர ஏற்பாடு நடந்து வருகின்றன.
இதில், பி.ஆர்.புரம் பகுதி வார்டு செயலாளர் பதவியை பிடிக்க, 2 பேரிடையே கடும் போட்டி நிலவுகிறது. ஒருவர் ஏற்கனவே இப்பகுதி முன்னாள் வார்டு கவுன்சிலருக்கு நெருக்கமானவர். இவர், மாஜி கவுன்சிலருக்கு உதவியாளராக இருந்து, மாமூல் வாங்கி கொடுப்பதில் கில்லாடி. அதனால், இவருக்கு மாஜி கவுன்சிலர் ஆதரவு உள்ளது. அத்துடன், இவர், மாவட்ட செயலாளர் அலுவலக வாசலிலேயே தவமிருந்து இப்பதவியை பிடிக்க போராடி வருகிறார். மேலிடத்துக்கு, பல லகரங்களை செலவு செய்து வருகிறார்.
அதேவேளையில், எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் இருந்தே கட்சிக்கு விசுவாசமாக இருந்தவரின் மகனான இன்னொருவர் தனது சமூகத்தை சேர்ந்தவர்கள் இப்பகுதியில் அதிகமாக உள்ளதால் தனக்கு வார்டு செயலாளர் பதவியை அளிக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கியுள்ளார். இவருக்கு, அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர் சிபாரிசு செய்து வருகிறார்.
இரு தரப்பினரும் பதவியை பிடிக்க, அப்பகுதியில் உள்ள வியாபாரிகளிடம் வசூல் வேட்டை நடத்தி வருகின்றனர். ஒரு செல்போன் கடையில் 40 பேர் ஒன்று சேர்ந்து மிரட்டி, வசூல் எடுத்துள்ளனர். இதனால், வியாபாரிகள் பீதியில் உள்ளனர். இவர்களுக்கு வார்டு செயலாளர் பதவி வழங்கினால் என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் அவர்கள் தவிக்கின்றனர்’’ என்றார் விக்கியானந்தா.
 ‘‘கல்லா கட்டும் பிடிஓ பத்தி சொல்லு...’’
 ‘‘அதியமான்கோட்டை மாவட்டத்தின் பாப்பிரெட்டிபட்டி ஒன்றியத்தில் இருந்து கடத்தூர் ஒன்றியத்தை ஒரு வருஷத்துக்கு முன்னாடி பிரிச்சாங்க. புதிய பிடிஓவாக பொறுப்பேற்றவர், கல்லா கட்டுவதில் படு கில்லாடியாம். ஒன்றியக்குழு ஒப்புதல் பெறாமலேயே இதுவரைக்கும் ₹70 லட்சத்திற்கு டெண்டர் விட்டிருக்காராம். ஒன்றிய குழு தலைவர் உள்ளிட்ட நிர்வாகம் கேள்வி எழுப்பியதும், ஆளுங்கட்சி சேர்மேனையும், உறுப்பினர்களையும் கவனிச்சு சமாளிச்சாராம். இதனால் எந்த இடைஞ்சலும் இல்லாமல் டெண்டர் பாஸ் ஆனதாம். இப்போது, புதிய ஜாக்பாட்டாக ₹1 கோடி மதிப்பிலான டெண்டருக்கான பணிகள் ஆபீசருக்கு கிடைச்சிருக்காம். அதில் 15 சதவீத பணிகளை எனக்கு வேண்டியவர்களுக்கு கொடுக்கணும்னு சேர்மேனிடம் ஆபீசர் டீலிங் வேறு பேசியிருக்காராம். ஒத்துழைக்காவிட்டால் வந்த நிதி, திரும்பி போய்டும்னு செல்ல மிரட்டல் வேறயாம். எல்லா மாவட்டத்திலேயும் ஆளும் இலைக்கட்சிக்காரங்க தான், ஆபீசர்களுக்கு அல்வா குடுப்பாங்க. ஆனால் இங்க மட்டும் கல்லா ஆபீசர், அவர்களுக்கே அல்வா கொடுப்பதை பார்த்து, உள்ளாட்சி பிரதிநிதிகள் உறைஞ்சு நிக்குறாங்களாம்’’ என்றார் விக்கியானந்தா.
 ‘‘ஆளில்லா கிராமங்களின் பெயரில் மோசடி நடக்குதாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘விவசாயிகளுக்கு 3 தவணைகளில் ₹6 ஆயிரம் வழங்கும் பிரதமரின் கிசான் நிதி திட்ட மோசடி விருது நகர் மாவட்டத்தில்  மேலும் எகிறி நிற்கிறது. இங்குள்ள காரியாபட்டி வேளாண்மை துறை அதிகாரிகளுடன், தனியார் கணினி மையங்கள் கைகோர்த்து போலி பயனாளிகள் மூலம் பல லட்சம் சுருட்டியது அம்பலமாகியிருக்கிறது. காரியாபட்டி ஒன்றியம் கிராம பகுதிகள் நிறைந்தது. இங்கு மக்கள் வசிக்காத 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருக்கின்றன.
இந்த ஊர்களில் வீடுகள் இருக்காது. விவசாயிகளோ அல்லது மக்களோ வசிப்பதில்லை, இங்குள்ள நிலங்களின் பட்டா எண்ணை, அந்த நிலங்களின் சொந்தக்காரர்கள் ஏற்கனவே பதிவு செய்திருந்தபோதும், அதனை பயன்படுத்தி, வேறு கிராமங்களிலுள்ள ஆதார் கார்டுடன் இணைத்து புதுவித மோசடி நடத்தப்பட்டிருக்கிறது. ஒரே ரேஷன் கார்டில் மூன்றுக்கும் மேற்பட்டவர்கள், இப்படி ஆளில்லா கிராமங்களின் பட்டா எண்களை பயன்படுத்தி, பணம் சுருட்டியது உள்ளிட்ட பல்வேறு ஆச்சர்யங்களை இங்கு வெளியாகி மூச்சு முட்ட வைக்கிறதாம். மற்ற பகுதிகளை விட, விருதுநகர் மாவட்டத்தில் இன்னும் ஆழமாக விசாரணை மேற்கொண்டால், பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்’’ என்றார் விக்கியானந்தா 


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pakisthan21

  ஆப்கானிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் உள்பட 15 பேர் பலி!: புகைப்படங்கள்

 • kasirangaa21

  கொரோனா தொற்றால் மூடப்பட்டிருந்த அசாம் காசிரங்கா தேசியப்பூங்கா, உயிரியல் பூங்காக்கள் சுற்றுலாப் பயணிகள் பார்வைக்காக மீண்டும் திறப்பு!: புகைப்படங்கள்

 • kamaladance21

  அமெரிக்க தேர்தல் 2020: அனல் பறக்கும் பிரச்சாரத்திற்கு இடையே குடையுடன் கூல் நடனமாடிய கமலா ஹாரிஸ்.. வைரலாகும் புகைப்படங்கள்

 • thirupati21

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா: கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி..!!

 • police21

  காவலர் வீர வணக்க நாள்: நாட்டைப் பாதுகாப்பதற்காக, வீரதீர செயல்களில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த காவலர்களின் நினைவு சின்னத்தில் உயரதிகாரிகள் மலர்த்தூவி மரியாதை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்