SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வஞ்சிப்பது நியாயமா?

2020-09-18@ 00:03:47

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டம், கடந்த 2005 ஆகஸ்ட் 25 அன்று நடைமுறைக்கு வந்தது. இது தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் - NREGS, என்று அழைக்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ், பொதுவேலை செய்ய விருப்பம் உள்ள கிராமப்புற மக்களுக்கு, அரசின் குறைந்த ஊதியத்துடன், ஒரு நிதியாண்டில் 100 நாட்களுக்கு கட்டாய சிறப்புத்திறன் இல்லா உடலுழைப்பு வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. நீர்வளம் பாதுகாப்பு மற்றும் நீர்சேமிப்பு, வறட்சி எதிர்ப்பு திறன் ஏற்படுத்துதல், காடு வளர்ப்பு, மரம் நடுதல், நீர்பாசன வாய்க்கால், நுண்பாசனம், சிறுபாசனம், ஏரிகளை தூர் வாருதல், நீர் நிலைகளை புதுப்பிக்கும் வேலை, நீர் தேங்கும் பகுதிகளில் வடிகால் வசதி அமைத்தல், வெள்ளத்தில் இருந்து பாதுகாத்தல், கிராமங்களை இணைத்தல், சாலைகள் அமைத்து, தேவைப்படும் இடங்களில் சிறுபாலங்கள் கட்டுதல் போன்ற வேலைகள் வழங்கப்படுகிறது.

கிராம பஞ்சாயத்து மூலம், மாவட்ட திட்ட அலுவலர் வாயிலாக இவ்வேலைகள் வழங்கப்படுகிறது. அந்தந்த மாநில அரசுகள் சார்பில், வேளாண் தொழிலாளர்களுக்கு நியமனம் செய்துள்ள குறைந்தபட்ச கூலி இத்திட்டத்தின்கீழ் அளிக்கப்படுகிறது. இந்திய அரசின், கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம், மாநில அரசுடன் இணைந்து, இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. கிராமப்புறத்தில், வறுமைக்கோட்டிற்கு கீழே வசிக்கும் மக்களின் வாழ்க்கைத்தரம் மற்றும் வாங்கும் திறனை அதிகரிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். நாட்டிலுள்ள ஏழை மற்றும் பணக்கார மக்களிடையே உள்ள இடைவெளியை குறைக்க இத்திட்டம் பெரிதும் உதவுகிறது.

இத்திட்டம், நாடு முழுவதும் விரிவடைந்து, 2.65 லட்சம் கிராம ஊராட்சிகளில் அமலில் உள்ளது. சத்தம் இல்லாமல் கிராமப்புற ஏழை மக்களுக்கு வருவாய் ஈட்டித்தரும் இத்திட்டத்துக்கு ஆப்பு வைக்க, தற்போது மத்திய அரசு முயல்கிறது. இத்திட்டத்தை 100 நாளில் இருந்து 200 நாட்களாக உயர்த்த வேண்டும் என தமிழகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், கடந்த 15ம் தேதி நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த மத்திய கிராமப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர், ‘‘அதற்கான வாய்ப்பே இல்லை. தேசிய அளவில் ஒப்பிடுகையில் தமிழகத்தில் சராசரியைவிட மிக குறைவான அளவிலேயே இத்திட்டத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது’’ என்றார்.

இத்திட்டத்தை கைவிட மத்திய அரசு முடிவுசெய்துள்ளது என்பதையே அமைச்சரின் பதில் சுட்டிக்காட்டியுள்ளது. ஏற்கனவே, கொரோனா தடுப்பு ஊரடங்கு காரணமாக கிராமப்புற மக்கள் வேலைவாய்ப்பு இழந்து தவிக்கின்றனர். இச்சூழ்நிலையில், அவர்களுக்கு இருக்கும் இந்த ஒரே வேலைவாய்ப்பையும் மத்திய அரசு தட்டிப்பறித்து விட்டால், திக்கு தெரியாத காட்டிற்குள் தள்ளப்படுவார்கள். ஏழை மக்களை வஞ்சிக்காமல் இத்திட்டத்தை  நீட்டிப்பதே நல்லது. மிக இக்கட்டான நிலையில் தவிக்கும் இம்மக்களுக்கு, கூடுதலாக வேலைவாய்ப்பு உருவாக்கவும் மத்திய அரசு முயலவேண்டும். தமிழக அரசு மவுனமாக இருந்து விடாமல் மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து ஏழை மக்களை காக்கவேண்டும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • mumbaitrain22

  7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

 • dinosauregg22

  பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

 • locusts22

  எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

 • rainbowtree22

  உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

 • vietnam22

  வியட்நாமை துவம்சம் செய்த கனமழை!: வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கைபேரிடர்களில் சிக்கி 111 பேர் பலி.. பலர் மாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்