SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எல்லை பிரச்னையில் அமைதியை விரும்புகிறோம் சீனாவுடன் போரிடவும் இந்தியா தயார்: மக்களவையில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அதிரடி

2020-09-16@ 00:04:07

புதுடெல்லி: ``சீனா உடனான எல்லை பிரச்னைக்கு இந்தியா அமைதியான முறையில் தீர்வு காண விரும்புகிறது. அதே நேரம், போரிடவும் தயாராக இருக்கிறது,'' என்று சீனாவுக்கு உணர்த்தி இருப்பதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் தெரிவித்தார். இந்தியா-சீனா இடையே கடந்த ஏப்ரல் முதல் எல்லை பிரச்னை தீவிரமடைந்துள்ளது. இது தொடர்பாக பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் நிலையிலும், எவ்வித சமரச முடிவும் எட்டப்படவில்லை. இதனிடையே, சீனா உடனான எல்லை பிரச்னை குறித்து நேற்று மக்களவையில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கமளித்தார். அவர் கூறியதாவது:

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு எல்லையில் கடந்த ஜூன் 15ம் தேதி இந்தியா-சீனா இடையே ஏற்பட்ட மோதலில், உயிரிழப்பு உள்பட மிகப் பெரிய இழப்பை சீனாவுக்கு ஏற்படுத்தி உள்ளோம். கிழக்கு லடாக் எல்லையில் கடந்த ஏப்ரல் மாதம் முதலே சீனா தனது வீரர்கள், ஆயுதங்களை குவித்து வந்தது. மே மாத துவக்கத்தில், இந்திய வீரர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்ட போது, சீனா வேண்டுமென்றே மோதலில் ஈடுபட்டது. அப்போது கூட, இருதரப்பு ஒப்பந்தங்கள், நெறிமுறைகளை மீறாமல் இந்தியா இந்த பிரச்னையை சீன கமாண்டரிடம் எடுத்து சென்றது.

மாஸ்கோவில் சீன பாதுகாப்பு அமைச்சருடனான பேச்சுவார்த்தையின் போது, எல்லை பிரச்னைக்கு இந்தியா அமைதியான முறையில் தீர்வு காண விரும்புகிறது. அதே நேரம், போரிடவும் தயாராக இருக்கிறது என்பதை உணர்த்தினோம். கடந்த 1993ம் ஆண்டு செய்து கொண்ட ஒப்பந்தத்தில் கூறியபடி, எல்லைகளில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் இரு நாடுகளும் படைகளை நிறுத்தக் கூடாது என்ற விதியை சீனா மீறியுள்ளது. அதே போல, 1996ம் ஆண்டு செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, எல்லையில் துப்பாக்கி சூடு நடத்த கூடாது என்ற விதியையும் சீனா அத்துமீறி விட்டது.

இது தவிர, எல்லை ஒப்பந்தங்களை மீறி கிழக்கு லடாக்கில் கோங்கா லா, கோக்ரா, வடக்கு மற்றும் தெற்கு பாங்காக் ஏரி பகுதியில் படைகள், ஆயுதங்களை சீனா குவித்து வருகிறது. இதற்கு பதிலடியாக, நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய தரப்பிலும் வீரர்கள், ஆயுதங்கள் குவிக்கப்பட்டு வருகின்றன. எல்லையில் பதற்றம் நிலவும் சூழலிலும் நமது வீரர்கள் சுயக் கட்டுப்பாட்டுடனும், வீரத்துடனும் இந்திய ஒருமைப்பாட்டை பாதுகாத்து வருகின்றனர். இது போன்ற கடினமான சூழலில், நமது வீரர்களின் துணிவு, வீரம் பாராட்டுதலுக்குரியது. இவ்வாறு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார். இதையடுத்து, எல்லை பிரச்னை தொடர்பாக காங்கிரஸ் சில கேள்விகளை முன்வைக்க வந்த போது, சபாநாயகர் ஓம் பிர்லா அதற்கு அனுமதிக்கவில்லை. எனவே, அவையில் இருந்து காங்கிரஸ் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.


* லடாக்கில் 38,000 சதுர கி.மீ ஆக்ரமிப்பு
ராஜ்நாத் சிங் பேசுகையில், ‘‘லடாக் பகுதியில் ஏறக்குறைய 38,000 சதுர கி.மீ. பரப்பளவை சீனா சட்டத்துக்கு புறம்பாக ஆக்ரமித்துள்ளது. இது தவிர, 1963ம் ஆண்டு செய்து கொண்ட சீனா-பாகிஸ்தான் எல்லை ஒப்பந்தத்தின்படி, இந்திய  எல்லைக்குட்பட்ட பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் இருந்து, பாகிஸ்தான் சீனாவுக்கு வழங்கிய 5,180 சதுர கி.மீ. பரப்பளவு, கிழக்கு அருணாச்சலில், இந்தியா-சீனா எல்லையில் சராசரியாக 90,000 சதுர கி.மீ. பரப்பளவு நிலத்தையும் சீனா தற்போது ஆக்கிரமித்துள்ளது. இது போன்று சீனா அத்துமீறி ஒருதலைபட்சமாக எல்லையை மாற்ற முயற்சிப்பது, எல்லைகளில் படைகள், ஆயுதங்களை குவித்து வருவது ஏற்று கொள்ளக் கூடியதல்ல என்பதை தூதரக, ராணுவ ரீதியிலான  பேச்சுவார்த்தையின் போது சீனாவுக்கு இந்தியா தெளிவாக எடுத்துரைத்துள்ளது’’ என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • jaipourelephant20

  ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

 • delhiformer20

  வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

 • nivarpondyvilupuram20

  நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

 • nivarkadaloorcmvisit20

  நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

 • nivarthirvannamali20

  திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்