SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நினைத்தாலே முக்தி தரும் ஆன்மீக நகரின் அவலம் நீங்குமா?

2020-09-15@ 14:38:14

நினைக்க முக்தி தரும் ஆன்மிக திருநகரம் திருவண்ணாமலை. ‘மலை வடிவே மகேசன் திருவடி’ என கோடிக்கணக்கான பக்தர்கள் தேடி வந்து வணங்கும் அண்ணாமலையாரின் அருள்நகரம்.

அடிமுடி காணாத அண்ணாமலையார் ஜோதிப்பிழம்பாக அருள்பாலிப்பதால், திருஅண்ணாமலை எனும் திருப்பெயர் உண்டானது. திருவண்ணாமலை நகரம் 13.64 சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. நூற்றாண்டு கடந்த சிறப்புக்குரிய திருவண்ணாமலை நகராட்சியின் வயது 124 என்பது வியப்புக்குரியது. கடந்த 1896ம் ஆண்டு உருவான இந்நகராட்சி, 1959ம் ஆண்டு 2ம் நிலை நகராட்சியாகவும், 1974ம் ஆண்டு முதல் நிலை நகராட்சியாகவும், 2008ம் ஆண்டு சிறப்பு நிலை நகராட்சியாகவும் படிப்படியாக தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது.

வேலூரை தலைமையிடமாக கொண்டிருந்த வடாற்காடு மாவட்டத்தில் இருந்து, திருவண்ணாமலை சம்புவராயர் எனும் பெயரில் புதிய மாவட்டம் கடந்த 30.8.1989 அன்று உதயமானது. அன்றுமுதல், மாவட்டத்தின் தலைநகரானது திருவண்ணாமலை. கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, திருவண்ணாமலை நகரின் மக்கள் தொகை 1,45,278 ஆகும். அதில், ஆண்கள் 72,406, பெண்கள் 72,872. இந்த நகர மக்களின் சராசரி கல்வியறிவு 87.75 சதவீதம். அதில், ஆண்களின் கல்வியறிவு 92.98 சதவீதம், பெண்களின் கல்வியறிவு 82.59 சதவீதமாகும்.

தென்னிந்தியாவின் பழமையான நகரங்களின் பட்டியலில் திருவண்ணாமலையும் ஒன்றாகும். இந்நிலையில், பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை நகரம் இன்னும் முழுமையான வளர்ச்சியை பெறவில்லை என்பது இந்நகர மக்களின் ஆதங்கமாகும். திருவண்ணாமலையில் ஒருங்கிணைந்த புதிய பஸ் நிைலயம் அமைய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக கிடப்பில் உள்ளது. பஸ் நிலையம் அமைக்கும் அறிவிப்பை அரசு வெளியிட்டு, மக்களிடம் கருத்து கேட்டு, இடம் தேர்வு செய்து இரண்டு ஆண்டுகளாகிறது. இன்னும் புதிய பஸ் நிலையம் என்பது வெறும் வார்த்தையாகவே இருக்கிறது. அதேபோல் பணிகள் தொடங்கி பாதியிலேயே கைவிடப்பட்ட நிலையில், கிடப்பில் போடப்பட்ட ரிங்ரோடு திட்டமும் எப்போது புத்துயிர்பெறும் என்பது தெரியவில்லை.

அதேபோல், திருவண்ணாமலையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைந்த பிறகும், போதுமான உயர் மருத்துவ சிகிச்சை பெறும் வாய்ப்பு குறைவாக உள்ளது. விபத்து, உயிர் காக்கும் அறுவை சிகிச்சை போன்ற ஆபத்தான நேரங்களில் இன்னமும் புதுச்சேரி, சென்னை, வேலூர் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உட்கட்டமைப்பு வசதியையும், நவீன மருத்துவ உபகரணங்களையும் வழங்கி மேம்படுத்த வேண்டும். அதேபோல், போதுமான டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் இல்லை. உயர்மருத்துவ சிகிச்சைக்கான கட்டமைப்பு வசதியில்லை.

 திருவண்ணாமலை நகரின் சிதைந்துள்ள பெரும்பாலான சாலைகளை் சீரமைக்க வேண்டும். நகரின் குறிப்பிட்ட சில வார்டுகளில் மட்டும் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேறியிருக்கிறது. 2ம் கட்ட பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்பது நகர மக்களின் எதிரபார்ப்பாகும். நகரின் நுழைவுப்பகுதியிலேயே முகம் சுளிக்க வைக்கும் குப்பை கிடங்கு பிரச்னைக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. தற்போதுதான் நவீன முறையில் தரம் பிரித்து அகற்றுவதாக கூறி பணி தொடங்கியிருக்கிறது. இப்பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

உழைக்கும் ஏழை, எளிய மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் சுகாதார சீர்கேடு உள்ளது. குடியிருப்பு பகுதிகளை சுற்றிலும் கழிவுநீர் கால்வாய்கள் சீரமைக்கப்படாமல் உள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில், அரசு மகளிர் கல்லூரி இல்லை. எனவே, திருவண்ணாமலையில் அரசு மகளிர் கலைக்கல்லூரி கொண்டுவர வேண்டும். தற்போதுள்ள அரசு கலைக்கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். கட்டிட வசதி, ஆய்வக வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

அண்ணாலையார் கோயிலை சுற்றிலும் அழகிய பூங்காக்கள் அமைக்க வேண்டும். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான தங்குமிடம் உட்பட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்
திருவண்ணாமலையில் நெரிசலில் சிக்கித்தவிக்கும் காய்கறி மார்க்கெட், பூ மார்க்கெட் போன்றவற்றுக்கு மாற்று இடம் ஒதுக்கி, விசாலமான கடைகளை கட்டித்தர நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். மலையடிவார பகுதியில் குடியிருக்கும் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளுக்கு இன்னமும் பட்டா கிடைக்கவில்லை. அவற்றை முறைப்படுத்தி பட்டா வழங்க வேண்டும்.

இதுபோன்ற எண்ணற்ற தேவைகள், கோரிக்கைகள் திருவண்ணாமலை நகருக்கு உள்ளது. அதை நிறைவேற்றித்தர வேண்டிய பொறுப்பில் உள்ள ஆளும் வர்க்கம், அதிகார வர்க்கம், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோரின் கரங்கள் இணைவது மட்டுமல்ல, அக்கோரிக்கைகள், தேவைகள் நிறைவேற வழிவகை காண வேண்டியதும் கடமையாகிறது. அப்போதுதான் இது நம்ம ஊரு என்ற பெருமையை திருவண்ணாமலை நகரம் பெற முடியும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • jaipourelephant20

  ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

 • delhiformer20

  வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

 • nivarpondyvilupuram20

  நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

 • nivarkadaloorcmvisit20

  நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

 • nivarthirvannamali20

  திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்